சமீபத்தில் 'ஸ்டார்ட் அப் காம்பஸ்' என்கிற பெயரில் ஐஐஎம் அகமதாபாத் பட்டதாரிகளான உஜ்வல் கால்ரா மற்றும் ஷோபித் சுபங்கர் எழுதிய ஒரு புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி முன்னுரை எழுதியுள்ளார்.
1981ஆம் ஆண்டு ஏழு பேர் சேர்ந்து தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், இன்று உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பம் அதிகம் பரவலாகாத 1980கள் காலகட்டத்தில் இந்தியாவில் ஷார்க் டேங்க், வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட் (Venture Capitalist) போல எளிதில் முதலீடுகளைத் திரட்டக் கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அது போக அரசின் கெடுபிடிகளும் அதிகம்.
ஒரு கணினியை இறக்குமதி செய்து அலுவலகத்துக்குக் கொண்டு வருவதற்குள் ஏகப்பட்ட அரசு அலுவலகங்கள் ஏறி இறங்கி அனுமதி வாங்கி, வேலையைத் தொடங்க பல மாத காலமாகிவிடும்.
அப்பேர்பட்ட காலத்தில், நாராயண மூர்த்தி கற்றுக் கொண்ட தொழில்முனைவோர் பாடங்களையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் அப்புத்தகத்தின் முன்னுரையிலேயே பகிர்ந்துள்ளார் 75 வயதான மென்பொருள் பில்லியனர். அவர் கருத்துக்களின் சாரத்தைச் சுருக்கமாக ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒரு தொழில்முனைவோரின் மதிப்புகள் தான் அவரது உறுதிப்பாட்டின் முதுகெலும்பாக இருக்கும். எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும், அதில் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நிறுவனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் முதல் மற்றும் மிக முக்கியமான மதிப்பு எனக் கூறியுள்ளார்.
ஒரு தொழில்முனைவோரின் வாழ்கையில் தோல்வி என்பது ஒரு பகுதி. ஒரு தோல்வியை உடனடியாகக் கண்டுபிடித்து, அதற்கான காரணத்தை விரைவாகக் கண்டறிந்து, அதில் உள்ள தவற்றைச் சரி செய்து கொண்டு, மீண்டும் அத்தவற்றைச் செய்யாமல் இருந்தால் அது மிகவும் நன்மை பயக்கக் கூடியது.
"நான் சாஃப்ட்ரானிக்ஸைத் (Softronics) தொடங்கிய பின், அதற்கு சந்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அது தான் என் தோல்விக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன். அடுத்த திட்டத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 9 மாதங்களில் அந்நிறுவனத்தை மூடிவிட்டு வெளியேறினேன்" என நினைவுகூர்கிறார்.
ஒரு தொழில்முனைவோர் எப்போதும் தன் வியாபாரத்தில் தீர்க்க முடியாத பிரச்னை ஏற்படுமா, அதனால் கம்பெனியையே இழுத்து மூட வேண்டிய சூழல் வருமா, அதற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் தான் உங்கள் யோசனையின்பால் நீங்கள் காட்டும் ஆர்வம் மற்றும் உங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உங்கள் திட்டத்திலிருந்து எத்தனை சுமுகமாக வெளியேற முடியுமோ அத்தனை சுமுகமாக வெளியேற வேண்டும்.
"சாஃப்ட்ரானிக்ஸுக்கு உள்ளூரில் சந்தை இல்லை என்பதை அறிந்து கொண்டேன், நிறுவனத்தை லாபகரமாகத் திருப்ப முடியாது என்பதை அறிந்து 9 மாதங்களில் மூடிவிட்டேன் என்கிறார்" நாராயண மூர்த்தி.
என் நண்பர்கள் மற்றும் வகுப்புத் தோழர்களில் பலர் என்னை விட புத்திசாலிகள். அவர்கள் அணியில் பல திறமைசாலிகள் இருந்தனர். எங்கள் யோசனைகளை விட அவர்கள் யோசனை இன்னும் சிறப்பாக இருந்தது. ஆனால் கடவுள் எங்களைப் பார்த்து புன்னகைக்க முடிவு செய்திருந்தார். பல இக்கட்டான சூழல்களில், நிறுவனம் எப்படி வேண்டுமானாலும் போயிருக்கலாம். கடவுளின் கிருபையால் அதுபோன்ற நெருக்கடி சூழல்களில் சரியான தீர்மானங்களை எடுத்தோம்.
நல்ல வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்க வேண்டும், தக்கவைத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஊழியர்களை எப்படி ஈர்த்துத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் சந்தைப் போட்டி எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. எங்களது எல்லா துறைகளிலும், உலகத் தரத்திலான விஷயங்களை வரம்புகளாக வைத்தோம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில விஷயங்களை உருவாக்கினோம்.
மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக முன்னின்று, சொன்ன சொல்லைச் செயல்படுத்துவது உடன் வேலைபார்ப்பவர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் செலவினங்களைக் குறைக்க, சர்வதேச பயணங்களின் போது கூட நான் எகானமி வகுப்பிலேயே பயணித்தேன். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 1 பில்லியன் டாலரைத் தொடும் வரை கடைப்பிடிக்கப்பட்டது. இன்றும் கூட, உள்ளூர் விமான பயணங்களின் போது, எகானமி வகுப்பில் பயணிக்கிறேன். 2011ஆம் ஆண்டு நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை தினமும் காலை 6.20 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். இது இளைஞர்கள் மத்தியில் நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பதியச் செய்தது.
ஏழு நிறுவன உறுப்பினர்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கையை சுமார் 3 தசாப்த காலங்களுக்கு மேல் கட்டிக் காப்பது முடியாத காரியம் இல்லை என்றாலும் கிட்டத்தட்ட சிரமமான காரியம். இதை சாத்தியப்படுத்த, அலுவலகத்தில் நடக்கும் எந்த கருத்து முரண்பாடு குறித்த விஷயத்தையும் வீட்டில் மனைவிகளோடு விவாதிப்பதில்லை என முடிவு செய்தோம்.
எங்கள் மனைவிமார்களோடு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டால் அவர்கள் அப்பிரச்னையை தனியாக, தனித்துவிடப்பட்ட வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அது நிறுவனர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதைக் கடைப் பிடித்தோம்.
ஒரு நிறுவனத்தை கமிட்டிகளைக் கொண்டு நடத்த முடியாது. எந்த ஒரு காலகட்டத்திலும் ஒருவர்தான் நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும். தலைவன் அதிகம் உழைப்பவனாக, பெரிய தியாகங்களைச் செய்பவனாக, ஒரு முடிவை எடுப்பதற்கு முன் தகுதியானவர்களிடமிருந்தும், நிபுணர்களிடமிருந்து வரும் யோசனைகளை வரவேற்பவனாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் எல்லா பெரிய முடிவுகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்.
திறன் மற்றும் மதிப்பீடு அளவீட்டு முறைதான் ஒரு வெற்றிகரமான நிறுவனத்துக்கு மிக அவசியமான ஒன்று. அப்படித் தான் 'Powered by the intellect; driven by values' இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் டேக்லைனாக இருக்கிறது.
நாங்கள் காத்திருந்து திருப்தி அடைவதை முழுமையாக ஏற்றுக் கொண்டோம். அதற்குத் தேவையான எல்லா தியாகங்களைச் செய்து போதுமான அளவுக்குக் காத்திருந்தோம். காத்திருந்து திருப்தி அடையும் குணத்தின் பலனாக, இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 6 நிறுவனர்களும் பில்லியனர்களாக இருக்கிறோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust