<div class="paragraphs"><p>Ratan Tata</p></div>

Ratan Tata

 

Twitter

பிசினஸ்

டாடா குழுமம் வரலாறு : தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரத்தன் டாடா | பகுதி 26

Newsensetn

ஏப்ரல் 2001ல் டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு உயரதிகாரிகள், இந்திய பங்குச் சந்தையை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பின் சில உயரதிகாரிகள், சில பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திலீப் பெண்ட்ஸே பல்வேறு முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவதாகவும், டாடா டாடா ஃபைனான்ஸின் நிதிநிலை பலவீனமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் அனுப்புநர் விவரமும் இல்லை. ஆனால், அதில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள், ஒரு விசாரணை நடத்தப் போதுமானதாக இருந்தது.

Dilip Pendse

இயக்குனர் திலீப் கார்ப்பரேட் உலகப் புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்தார்

1990ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு, சிறு குறு முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட் மூலம் பணத்தை பெற்று, வாகனங்கள், வீட்டில் உபயோகிக்கப்படும் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்கு தேவையான கடன்களை வழங்குவதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.

டெபாசிட்களுக்கு நல்ல வட்டி கொடுத்துக் கொண்டிருந்தது மற்றும் டாடா என்கிற பிராண்ட் பெயர் மீதான நம்பிக்கை காரணமாக பல்வேறு ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நம்பி டாடா பைனான்ஸில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.

90களிலேயே இந்நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தோடு இணைந்து கிரெடிட் கார்ட் சேவைகளை எல்லாம் வழங்கி வந்தது.

சுருக்கமாக டாடா குழுமத்தில் நட்சத்திர நிறுவனமாக வளர்ந்து கொண்டிருந்தது. அந்நிறுவனத்தை நிர்வகித்து வந்த நிர்வாக இயக்குனர் திலீப்பும் கார்ப்பரேட் உலகப் புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்தார்.

Dilip Pendse

சரி மீண்டும் பிரச்சனைக்கு வருவோம்

தொடக்கத்தில் டாடா குழும நிறுவனங்களில் இப்படி ஒரு தவறு நடப்பதற்கான வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர்.

நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாக பிரச்சனை பரிணமித்துக் கொண்டிருக்க, காலப்போக்கில் டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திலீப், டாடா குழுமத்தின் அனுமதியின்றி நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தை தவறாக பயன்படுத்தி இருக்கலாமோ என சந்தேகம் எழத் தொடங்கியது.

இந்த பிரச்சனை தொடர்பாக ஒரு உள் விசாரணையை நடத்த ஏ.எஃப்.பெர்குசன் என்கிற தணிக்கை நிறுவனத்திடம் கூறியது டாடா குழுமம். இந்த விசாரணையை நடத்த அந்நிறுவனம் 95 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்தது. எ.எஃப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் ஒய்.எம்.காலே என்பவர் விசாரிக்கத் தொடங்கினார்.

டாடா ஃபைனான்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 1999 - 2001ல் நடந்த பணப் பரிவர்த்தனைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. ஏப்ரல் 2002-ல் ஒய் எம் காலே தன் இறுதி அறிக்கையை டாடா குழுமத்திடம் சமர்பித்தார்.

திடீரென, ஒய் எம் காலே மீது எ.எஃப்.எஃப் நிறுவனம் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், எனவே தங்கள் உள் விசாரணை அறிக்கையை திரும்பப் பெறுவதாகக் கூறியது எ.எஃப்.எஃப். அதுவரை பெரிதாக கவனிக்கப்படாத டாடா பைனான்ஸ் பிரச்சனை, ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாயின.

ஒருகட்டத்தில் டாடா பைனான்ஸ் நிறுவனத்தில் தவறு நடந்து இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் ரத்தன் டாடா. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரித்து, முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம் என்றும் உறுதிப்படுத்தினார்.

Dilip Pendse

திலீப் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெளிவானது

ஜூன் 2001 காலகட்டத்தில் டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக விளங்கியது நிஷ்கல்ப் என்கிற நிறுவனம்தான். அது டாடா பைனான்ஸ் தொடங்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு தேவையான முதல் தொகையைக் கொண்டு வருவதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.

நிஷ்கல்ப் நிறுவனம் 2000 ஆண்டில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவுக்கு முன்பே பல கோடி ரூபாய் பங்குச் சந்தை லாபத்தை திலீப் பெண்ட்ஸே தன் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது.

மார்ச் 2000 முதல் 2001 காலகட்டம் வரையான காலத்தில் நிஷ்கல்ப் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தது. இது மத்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறிய செயல். அப்படி மேற்கொள்ளப்பட்ட 500 கோடி ரூபாய் பங்குச் சந்தை முதலீடு, சந்தை சரிவில் கரைந்து போனது.

இந்த பிரச்சனை பொது வெளியில் தெரியாமல் இருக்க நிஷ்கல்ப் நிறுவனத்தை டாடா பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து தனியாகப் பிரிப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

இந்த விஷயங்களெல்லாம் டாடா இயக்குனர் குழுவுக்கு தெரிய வந்தபோது திலீப் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெளிவானது.

Ratan Tata

டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குளறுபடிகள்

டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இந்த குளறுபடிகள் பொதுவெளியில் காட்டுத் தீ போலப் பரவத் தொடங்கியது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் டாடா பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என டாடா குழுமம் அறிவித்தது.

டாடா குழுமத்தின் உயரதிகாரிகள் ஒன்றுகூடி டாடா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா சன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சுமார் 700 கோடி ரூபாயை டாடா பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து அல்லது கொடுத்துதவியது எனலாம். இச்செயல் டெபாசிட்தாரர்களின் அச்சத்தைப் கணிசமாகப் குறைத்தது.

இது சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய பணி அல்ல என்கிற போதும், டாடா குழுமத்தின் பெயரை காப்பாற்றவும், டாடாக்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றவும் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது அக்குழுமம்.

மேலும் டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த இந்த பிரச்சனையில் ரத்தன் டாடாவே நேரடியாகத் தலையிட்டு விசாரணையை மேற்கொண்டார். டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடிதங்கள், மின்னஞ்சல்கள், வங்கி பணப் பரிவர்த்தனைகள், வாங்கிய சொத்துபத்துக்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

Tata Motors Finance

மத்திய புலனாய்வுத் துறை விசாரணை

விசாரணைக்குப் பிறகு, உள்ளூர் காவல் நிலையத்தில் டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட சில உயர் அதிகாரிகள் மீதும் உள்ளூர் காவல் நிலையத்தில் டாடா குழுமம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. நிதிசார் பிரச்சனைகளை விசாரிக்கும் அளவுக்கு உள்ளூர் காவல்துறையிடம் போதிய நிபுணத்துவம் இல்லாததால் வழக்கில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

பல மாதங்களுக்குப் பிறகு டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முறைகேட்டை, மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டு விசாரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கைத் தொடுத்த மனுதாரரின் பெயர் டாடா குழுமம்.

இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு டாடா ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டு, டாடா மோட்டார் ஃபைனான்ஸ் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது.

சில ஆண்டுகள் கழித்து டாடா கேப்பிட்டல் என்கிற பெயரில் தனி நிதி நிறுவனத்தைத் தொடங்கி இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு நிதி சார் சேவைகளை வழங்கி வருகிறது டாடா குழுமம்.

அன்று டாடா ஃபைனான்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலையில் இருந்த போது டாடா செய்த அந்த 700 கோடி ரூபாய் முதலீடு அல்லது பண உதவி தான் இன்று டாடா கேப்பிட்டல் நிறுவனம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதற்கு காரணம் எனலாம்.

முந்தைய பகுதியைப் படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?