நிசான் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் ஒரு பயன்படுத்தாத அசெம்பிளி லைன் வைத்திருப்பது டாடா குழுமத்துக்கு தெரியவந்தது. பல நூறு கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டிய அசெம்பிளி லைனை, எப்படியோ பேரம் பேசி வெறும் 100 கோடி ரூபாயில் வாங்கினார் ரத்தன் டாட்டா.
இப்போது அடுத்த சவால் என்னவெனில் அந்த அசெம்பிளி லைனை எப்படி இந்தியாவில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலைக்கு கொண்டு செல்வது என்பதுதான்.
அதற்கும் டாடா கவலைப்படவில்லை, டெல்கோ நிறுவனத்தின் திறமைசாலிகள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அசெம்பிளி லைன் இருக்கும் ஆலைக்கு அனுப்பப்பட்டனர். அந்த அசெம்பிளி லைன் தொடர்பான வரைபடங்கள், கட்டமைப்புப் படங்கள், விளக்கப்படங்களில் டாடா அணியினர் மூழ்கினர்.
அசெம்பிளி லைனை எப்படி மீண்டும் அச்சுபிசகாமல் பொருத்துவது என்பதையும், அதை எப்படி தங்கள் கார்களுக்கு தகுந்தாற் போல் மாற்றி மேம்படுத்துவது என்பதை எல்லாம் புரிந்து கொண்ட பிறகு, இந்திய நடுத்தர மக்கள் வீடு மாற்றும் போது, அட்டைப்பெட்டிகளில் 1... 2... என எண்களை குறிப்பிட்டு பொருட்களை எடுத்துச் செல்வது போல, ஒட்டுமொத்த அசெம்பிளி லைனையும் பிரித்து எண்ணிட்டு கப்பலில் ஏற்றினர்.
சுமார் 16 ராட்சத கப்பல்களில், 450க்கும் மேற்பட்ட ரோபாட்களோடு 14,800 டன் எடையுள்ள அசெம்பிளி லைனை, பல பாகங்களாகப் பிரித்து, 650 கன்டெய்னர்களில் இந்தியாவுக்கு அனுப்பினர். இந்த ஒட்டுமொத்த போக்குவரத்து படலத்தையும் வெற்றிகரமாக அரங்கேற்ற டெல்கோ பொறியாளர்களுக்கு சுமார் ஆறு மாதம் பிடித்தது.
திட்டமிட்டபடி டெல்கோ ஆலையில் புதிய இந்திய காருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒட்டுமொத்த அசெம்பிளி லைனும் மீண்டும் பொருத்தப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டது.
முதல் காரை கச்சிதமாகப் பொருத்தி உருவாக்க எட்டு நாட்களாயின, இரண்டாவது காரைத் தயாரிக்க ஒரு முழு நாள் தேவைப்பட்டது, மெல்ல மெல்ல ஆலைப் பணியாளர்கள் தங்கள் பணிகளைப் புரிந்துகொண்டு பட்டையைக் கிளப்ப தொடங்கியபோது, சுமார் 56 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற வேகத்தில் கார்களை பிரசவித்தது டாடாவின் டெல்கோ ஆலை.
Indigo
இந்தியர்களால், இந்தியர்களுக்காக, இந்திய நிறுவனமே தயாரித்த காருக்கு, இண்டிகா என பெயரிடப்பட்டது.
1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் நடந்த கார் கண்காட்சியில் ரத்தன் டாடா இண்டிகாவை ஓட்டி வந்த போது, மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முரசொலி மாறன், "சக்கரம் பொருத்தப்பட்ட கோஹினூர் வைரம் வருகிறது" என்று பாராட்டினார்.
பலரும் டாடா இண்டிகா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரோ... என சந்தேகித்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளால் இந்திய கார் சந்தையில் அனல் பறந்தது.
இண்டிகா முறையாக இந்திய கார் சந்தையில் வெளியான பின் சுமார் 14 சதவீத சந்தையைப் பிடித்தது. போட்டி நிறுவனங்கள் டாடா இண்டிகாவைப் பார்த்து சற்று மிரண்டு போயின. இண்டிகாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், மாருதி 800 காரின் விலை சுமார் 25,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
ரத்தன் டாடா
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இந்திய கார் என ஒரு பக்கம் பெருமை பேசினாலும் கார்களில் பலபல பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. போட்டி நிறுவனங்கள் முதல் பத்திரிகைகள் வரை, பலரும் டாடா இண்டிகாவை வார்த்தைகளால் துவைத்தெடுத்தனர்.
ரத்தன் டாடாவோ, பட்டியலிடப்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். 2000 - 01 காலத்தில், இண்டிகாவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க டாடாவுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவானது.
இந்தியாவின் பல நகரங்களில் டாடா ரிப்பேர் முகாம்களை நடத்தி, பிரச்சனைக்குரிய இண்டிகா காரின் பாகங்கள் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்பட்டன. சில கார்களில் ஒட்டுமொத்த இன்ஜினும் மாற்றப்பட்ட கதைகள் எல்லாம் உண்டு.
ரத்தன் டாடா
இண்டிகா படிப்பினைகளைக் கொண்டு இண்டிகா வி2 என்கிற புதிய ரக காரை அறிமுகப்படுத்தியது டாடா.
இண்டிகாவில் இருந்த எந்த பிரச்சனையும் இண்டிகா வி2-வில் இல்லை. இந்தியச் சந்தை மட்டுமின்றி சர்வதேச கார் ஆர்வலர்களையும் தன் தரத்தால் திரும்பிப் பார்க்க வைத்தது வி2. அந்த காலகட்டத்தில், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்குட்பட்ட கார்களில், சிறந்த கார் என டாடாவின் இண்டிகா வி2-வைப் பட்டியலிட்டு கெளரவித்தது பிபிசி.
வெறும் டிரக்குகள் மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்த டெல்கோ, டாடா இண்டிகா மற்றும் இண்டிகோ வி2 ஆகிய கார்களின் மூலம் இந்திய கார் சந்தையில் அழுத்தமான தடத்தைப் பதித்து. 2003ஆம் ஆண்டில் டெல்கோ, டாடா மோட்டார்ஸாக பரிணமித்தது.
எந்த டாடாக்களால் இந்தியக் காரை கட்டமைக்க முடியாது என விமர்சிக்கப்பட்டதோ, அதே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் உலகின் அதிநவீன சொகுசுக் கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வெகுஜன மக்களால் சின்ன யானை எனச் செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் தொடங்கி, ஷேர் ஆட்டோக்களாக ஓடும் டாடா மேஜிக், வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் டாடா டிரக்குகள், டாடா டிப்பர்கள், பேருந்துகள், ராணுவ போக்குவரத்து மற்றும் ராணுவ பயணிகள் வாகனங்கள்... என எல்லா தளங்களில் கிளை பரப்பி, ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின், உலகின் ஆகச் சிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக ஆரவாரமின்றி செயல்பட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.
முந்தைய பகுதியை படிக்க...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust