சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம்  Pexels
பிசினஸ்

சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

ஐஸ் க்ரீம் செய்து விற்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா..? என்றால் இல்லை எனலாம். ஆனால், 1940, 1950களுக்கு முன்பே வாடிலால் காந்தி ஹோம் டெலிவரி திட்டத்தை எல்லாம் தன் வியாபாரத்தில் கொண்டு வந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா?

Gautham

ஒரு உணவகத்தில், ஒரு எந்திரம் இருக்கிறது. அதில் உள்ள சுவிட்சைத் தட்டினால் சோடா விழும். இந்த காட்சி நமக்கு இன்று சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இப்படி ஒரு காட்சியைப் பார்ப்பது லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்கும். அப்படி ஒரு பிரமாதமான சோடா எந்திரத்தை வைத்து, ஒரு சோடா வியாபாரியாக தன் வாழ்கையைத் தொடங்கி, இன்று உலக அளவில் ஒரு பிரமாதமான ஐஸ் கிரீம் நிறுவனமாக நீடித்து நிற்கும் வாடிலால் ஐஸ் கிரீம் கம்பெனியைக் குறித்துத் தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

சுதந்திரத்துக்கு முன், இந்தியாவில் தொழில் வளம் எல்லாம் பெரிதாக ஏதும் கிடையாது. ஆனால், தொழில்துறையைப் பிரமாதமாக வளர்த்து எடுக்க வேண்டும் என ஜே ஆர் டி டாடா, ஜி டி பிர்லா போன்ற தொழிலதிபர்கள் ஒரு நீண்ட நெடிய தொழில் வளர்ச்சித் திட்டத்தை 1944ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். அதைப் பாம்பே திட்டம் என்றழைப்பர்.

Ice Cream manufacturing

ஆனால் அந்தத் திட்டங்கள் ஏதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. அப்படி ஒரு சூழலில், குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரத்தில் ஒரு சோடா கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார் வாடிலால் காந்தி. தன் வியாபாரத்தைப் பெருக்க சோடா மட்டும் போதாதென, ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

மரத்தினாலான ஒரு பெரிய பாத்திரம் போன்ற அமைப்பில் பால், சர்க்கரை போன்றவைகளை எல்லாம் சேர்த்து (முட்டை கலக்காமல்) பாலைக் கையால் கடைந்து ஐஸ் கிரீம் செய்து வந்தார் வாடிலால் காந்தி. இதை வட இந்தியாவில் கோதி முறை என்பர்.

ஐஸ் க்ரீம் செய்து விற்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா..? என்றால் இல்லை எனலாம். ஆனால், 1940, 1950களுக்கு முன்பே வாடிலால் காந்தி ஹோம் டெலிவரி திட்டத்தை எல்லாம் தன் வியாபாரத்தில் கொண்டு வந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா?

vadilal unit

ஒரு பெரிய தெர்மாகோல் பெட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, கையால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமை டெலிவரி செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை எல்லாம் அட போட வைத்தார்.

அவரது மகன் ரன்சோட் லால் காந்தி, அப்பாவின் வியாபாரத்தைப் பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். 1926ஆம் ஆண்டு ஒரு சிறிய சில்லறை விற்பனை நிலையத்தைத் தொடங்கி நேரடியாக மக்களிடம் ஐஸ் கிரீமை விற்கத் தொடங்கினார். அதே போல சோடா விற்பனை வேலைக்கு ஆகாது, இனி குளுகுளு ஐஸ் கிரீம் தான் வலுவான எதிர்காலமென உணர்ந்தார்.

இனி கையால் ஐஸ் கிரீமை செய்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதென, அதே 1926ஆம் ஆண்டு ஐஸ் கிரீமைத் தயாரிக்கும் எந்திரங்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தார் ரன்சோட் லால்.

Ice crean manufacturing

வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 4 கடையாக வளர்ந்தது. 1950களில் வாடிலால் கடையில் அறிமுகப்படுத்தப்பட்ட கெசெட்டாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

1970களில், ரன்சோட் லால் காந்தியின் மகன்களான ராமச்சந்திர காந்தி மற்றும் லக்ஷ்மன் காந்தி வியாபாரத்தில் குதித்தனர். வியாபாரத்தை வளர்த்தெடுக்க இனியும் ஒரு பொட்டிக் கடை போல நிர்வாகம் செய்யக் கூடாதென, ஒரு ஒழுங்குமுறையோடு இயங்கும் கார்ப்பரேட் போல நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.

1970களின் முடிவில் அகமதாபாத்தில் 8 - 10 கடைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது வாடிலால். இந்தியாவில் அப்போது ஐஸ் கிரீம் சந்தையை குவாலிட்டி, ஜாய், வாடிலால் ஆகிய மூன்று நிறுவனங்கள் தங்களின் கைகளில் வைத்திருந்தது.

share market

1984 - 85 காலகட்டத்தில் தான் குஜராத்தை விட்டு, வெளியே காலடி எடுத்து வைத்தது வாடிலால் நிறுவனம். 1987ஆம் ஆண்டு, முழுமையாகவே தன்னிச்சையாக இயங்கக் கூடிய ஐஸ் கிரீம் உற்பத்தி எந்திரத்தை தன் ஆலையில் நிறுவிக் கொண்டது. 1990ஆம் ஆண்டு வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

1980களின் மத்தியில் வாடிலால் நிறுவனத்தை வாங்க ஒரு பெரிய நிறுவனம் முயன்றது. ஆனால் அதை எல்லாம் கடந்து வாடிலால் தன்னை இந்திய சந்தை & வெளிநாட்டுச் சந்தைகளில் நிலைநிறுத்திக் கொண்டது.

1990களில், ராமச்சந்திர காந்தியின் மகன்களாக வீரேந்திரா, ராஜேஷ், ஷைலேஷ் மற்றும் லக்ஷ்மன் காந்தியின் மகனான தேவான்ஷு காந்தி ஆகியோர் வியாபாரத்தில் இணைந்தனர்.

Ice cream

1990களில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் காரணமாக, வாடிலால் நிறுவனம் பிரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பிரிந்த இரு தரப்பும் வாடிலால் என்கிற பெயரில் தான் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

1995ஆம் ஆண்டுவாக்கில் வாடிலால் வெளிநாடுகளுக்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. 2000ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவில் தன் ஐஸ் கிரீம்களை விற்கத் தொடங்கியது. 'ஒன்னு வாங்குனா இன்னொன்னு ஃப்ரீ' என அமெரிக்க சந்தையை அடித்து நொறுக்கியது. இன்று 44க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிலால் நிறுவனத்தின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது வாடிலால் காந்தி குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறை, வியாபாரத்தைக் கவனித்து வருகிறார்கள்.

தனித்தன்மை

ஊரில் எத்தனையோ ஐஸ்கிரீம் கடைகள் இருந்தும், ஏன் வாடிலால் ஐஸ்கிரீமை மக்கள் கேட்டு வாங்கி சாப்பிட்டனர்? ஒரு சொல்லில் விடை வேண்டுமானால் 'சைவம்'.

தொடக்க காலத்தில் இருந்தே, வாடிலால் ஐஸ்கிரீம், முட்டை போன்ற எந்த வித அசைவ உணவு அல்லது அசைவம் தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப்படாமல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இன்று வரை இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஏதோ ஒரு நேரத்தில் விரதமிருப்பதைப் பார்த்திருப்போம்.

அப்படி விரதமிருப்பவர்கள் கூட, வாடிலால் ஐஸ்கிரீமைச் சாப்பிடலாம் என விளம்பரமே செய்யப்பட்டது. இன்று வரை அசைவம் சாப்பிடாத மக்களுக்கு வாடிலால் ஐஸ்கிரீம் தங்களின் முதல் தேர்வாக இருக்கிறது.

ice cream

இன்று எப்படி இருக்கிறது?

இந்தியாவில் விற்பனை அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனம் என்றால் அது வாடிலால்தான். வாடிலால் நிறுவனத்திடம் தான் இந்தியாவிலேயே அதிக வகையான ஐஸ்கிரீம்கள் இருக்கின்றன. 150 ரக ஐஸ்கிரீம்கள், 300 விதமான பேக்கிங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 10 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை சுருக்கமாக ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் சுவைக்கும் விதத்தில் தன் பொருட்களை விற்று வருகிறது வாடிலால்.

இந்தியா முழுக்க சுமார் 50,000 டீலர்கள், 250 வாடிலால் பார்லர்கள், 550 டிஸ்ட் ரிபியூட்டர்கள், 32 கிளியரிங் & ஃபார்வேர்டிங் அலுவலகங்கள், 2500க்கும் மேற்பட்ட டெலிவரி வாகனங்கள்... என வெற்றி நடைபோட்டு வருகிறது.

வாடிலால் நிறுவனத்தின் வளர்ச்சி, ஒரு தனி நபரால் சாத்தியப்படவில்லை. ஐந்து தலைமுறை குடும்பத்தினரால் சாத்தியப்பட்டுள்ளது. ஊர் கூடித் தேர் இழுத்தால், விஸ்வரூப வெற்றி பெறலாம் என்பதற்கு வாடிலால் ஐஸ் கிரீம் மற்றும் ஒரு இந்திய உதாரணம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?