Netflix Twitter
சினிமா

NetFlix : 6 மாதம், காணாமல் போன 15,60,000 கோடி ரூபாய் - என்ன ஆச்சு நெட்ஃப்ளிக்ஸுக்கு?

NewsSense Editorial Team

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் குறித்த சில தினங்களாக இணையத்தில் பல செய்திகள் பரபரத்துக் கொண்டிருகின்றன. அதில் மிக முக்கியமான விஷயம் அந்நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியும், சந்தை மதிப்பு சரிவும்தான்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் கடந்த அக்டோபர் 2021-ல் வாழ்நாள் உச்சமாக சுமார் 700 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமானது. அப்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 305 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமானால் சுமார் 22.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது பல்வேறு காரணங்களால் நெட்ஃப்ளிக்ஸ் பங்கு விலை தரை தட்டி சுமார் 218 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதன் பங்குச் சந்தை மதிப்பு வெறும் 97 பில்லியன் டாலராக (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7.25 லட்சம் கோடி ரூபாயாக) இருக்கிறது. பாக்கி 15,60,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு இந்த விலை வீழ்ச்சியில் கரைந்து போய்விட்டது.

ஓர் உலகத் தரத்திலான நிறுவனத்தின் பங்கு விலை தடாலடியாக, வெறும் ஆறு மாத காலத்துக்குள், தன் 65% மதிப்பை இழக்குமா? அப்படி நெட்ஃப்ளிக்ஸ் தன் சந்தை மதிப்பை இழந்ததற்கான காரணங்கள் என்ன?

OTT

1. சந்தாதாரர்கள்

2022ஆம் ஆண்டில் ஜனவரி - மார்ச் வரையான மூன்று மாத காலத்தில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதோடு அடுத்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில், மேலும் 20 லட்சம் சந்தாதாரர்கள் வரை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவன தரப்பிலிருந்தே கூறப்பட்டுள்ளது.

இது போக உக்ரேன் - ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாக ரஷ்யாவில் தன் சேவையை நிறுத்திக் கொண்டது நெட்ஃப்ளிக்ஸ். அதன் காரணமாக மட்டும் சுமார் ஏழு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அது போக நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் கொண்டு வந்த விலை ஏற்றம் காரணமாகவும் உலக அளவில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரமாரியாகக் குறைந்தது. வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் விலை ஏற்றத்துக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

2. அதீத போட்டி - ஆதரவு இல்லை

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சந்தாதாரர்கள் அடிப்பையில் இயங்கி வரும் நெட்ஃப்ளிக்ஸ், தற்போது ஆப்பிள், அமேசான், டிஸ்னி, சோனி போன்ற பெரு நிறுவனங்களின் சந்தாதாரர்களை அடிப்படையாகக் கொண்டியங்கும் ஓடிடி தளங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தளங்கள் அனைத்தின் தாய் நிறுவனங்களும் உலகின் மிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்று. எனவே அவர்கள் விலை ரீதியாகவும், ஓடிடி உள்ளடக்கங்கள் வழியாகவும் கொடுக்கும் அழுத்தத்தை நெட்ஃப்ளிக்ஸ் சமாளிக்கத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

OTT

3. ஒரு வடைக்கு ஐந்து காக்கைகள் போட்டி

சோனி லிவ், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, சன் நெக்ஸ்ட், டிஸ்னி ஹாட் ஸ்டார், வூட், டிஸ்கவரி... என பல ஓடிடி தளங்கள் பல்வேறு வகையில் கட்டணங்களை விதித்துள்ளன. ஆனால் நடுத்தர வர்க்க மக்களால் இந்த அனைத்து சேவைகளையும் வாங்க முடியாததால், அவர்களுக்கு மிகவும் பிடித்தவற்றை மட்டுமே தேர்வு செய்து பணம் செலுத்துகின்றனர்.

அது போக, மற்ற போட்டி ஓடிடி தளங்களிடம் நெட்ஃப்ளிக்ஸ் தன் வாடிக்கையாளர்களை இழப்பதாகவும் அந்நிறுவன தரப்பிலேயே ஒரு கட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட பிரிட்டனில் சுமார் 15 லட்சம் பேர், பணத்தை மிச்சப்படுத்த ஓடிடி தளங்களுக்குச் செலுத்தும் கட்டணங்களை நிறுத்தியுள்ளதாக கன்டர் என்கிற சந்தை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளதாக பிபிசியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆக ஒரு வடைக்கு ஐந்து பேர் போட்டிப் போடும் போது, ஒரு நபருக்குக் கிடைக்கும் வடை குறைவாகத் தானே இருக்கும்? அப்படித் தான் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கும்.

Netflix

4. விளம்பர யுக்தி

நெட்ஃப்ளிக்ஸ் எந்த வித விளம்பரங்களையும் செய்யாமல், ஒழுக்கமாக தன் தளத்தை வைத்திருப்பது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பிடித்த விஷயங்களில் ஒன்று. ஆனால் இப்போது, தன் வளர்ச்சிக்காக, நெட்ஃப்ளிக்ஸ் விளம்பரங்களுடன் கூடிய இலவச நிகழ்ச்சிகளை வெளியிட இருப்பதாக சில தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வில்லியம் அக்மேன், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்தது கைநழுவிப்போனது. வில்லியமும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாததால், தான் முதலீடு செய்யவில்லை என சுட்டிக்காட்டியது இங்கு நினைவுகூரத்தக்கது.

5. பாஸ்வேர்ட் பிரச்சனை

சுமார் 100 மில்லியன் பேர் (10 கோடி) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் கடவுச் சொல்லைப் பகிர்ந்து கொள்வதால் பணம் செலுத்தாமல் பார்க்கிறார்கள் என அந்நிறுவனமே கூறியுள்ளது. இதைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

லத்தின் அமெரிக்காவில் ஒரு சந்தாதாரர் தான் செலுத்தும் அடிப்படைக் கட்டணம் போக, கூடுதலாக 2 - 3 அமெரிக்க டாலரைச் செலுத்தி இருவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை பார்க்கும் ப்ரொஃபைலைக் கொடுக்கலாம். அது போன்ற திட்டங்களை மற்ற நாடுகளுக்கும் கொண்டு வர இருப்பதாகக் கூறியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பி, அக்கா தங்கை தனித்தனியாகக் கட்டணம் செலுத்திப் பார்ப்பார்களா? என்கிற கேள்வியை வெகுஜன மக்களும், சாமானிய முதலீட்டாளர்களும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நெட்ஃப்ளிக்ஸின் திட்டம் சாத்தியப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது.

6. கரெக்‌ஷன்

விருந்து சாப்பிட்ட மனிதன் எப்படி அடுத்த வேளை மிளகு ரசத்தோடு லேசான உணவைக் குறைவாக எடுத்துக் கொள்வானோ, அதே போலப் பங்குச் சந்தையில் ஒரு அதீத வளர்ச்சி கண்ட நிறுவனப் பங்கின் விலை, சில காலம் அதீத விலை மாற்றம் கண்டு, மெல்லச் சரிந்து மீண்டும் தன் சரியான விலைக்கு வந்து சேரும்.

கொரோனாவுக்கு முன் டிசம்பர் 2019 காலத்தில் சுமார் 300 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். கொரோனாவுக்குப் பின் கடந்த அக்டோபர் 2021-ல் தான் சுமார் 700 டாலரைத் தொட்டது. தற்போது கொஞ்சம் அதீதமாக விலை சரிந்து 218 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

கொஞ்சக் காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் பங்கு விலை, மீண்டும் தன் இயல்பு விலைக்கு, அந்நிறுவனம் ஈட்டும் வருவாய்க்கு தக்கவாறு நிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?