Rolex - இந்த பெயர் இனி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சூர்யாவின் பெயராக மாறிவிட்டது. பின்னணி இசை அதிர வேட்டைக்குத் தயாராகும் ஓநாயென விக்ரம் பட கிளைமாக்ஸில் ரத்தம் தெறிக்க புன்னகைக்கும் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் பரிசாக அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இந்த விருது அவரின் இத்தனை வருட உழைப்புக்கான அங்கீகாரம். "யாரும் தூக்கி குடுத்துடல. நானே உருவாக்குனது!" என Rolex சொல்வதுபோல சூர்யாவின் பயணம் இலகுவானதல்ல. சூர்யாவின் சினிமா பயணம் பற்றிய ஒரு பார்வை இதோ.
சினிமா அசாத்தியங்களின் உலகம். ஆனால், இந்த அசாத்தியத்தின் உலகம் பல மகத்தான சாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறது.
அரசியலை, சமூகத்தை, நம் அன்றாட வாழ்வை நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் தீர்மானிப்பதில் பங்காற்றிக் கொண்டே இருக்கிறது. நம் திரைப்படத்தின் கதாநாயகர்கள் வெறுமனே கதாநாயகர்களாக மட்டுமே நமக்கு அறிமுகமாவதில்லை. நம்மில் ஒருவராகத் திரையில் தோன்றும் அவர்கள், நாம் செய்ய முடியாத ஒரு செயலை, நாம் கனவு காண்பதை நிகழ்த்தி நம் மனதில் இடம்பெறுகிறார்கள்.
அந்த இடம் பிடிப்பது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. அதைச் செய்தவர்கள் நம் தமிழ் சினிமாவில் வெகு சிலரே. சூர்யா அதில் குறிப்பிடத்தக்கவர். அப்பாக்கள் திரைத்துறையில் இருப்பதால் இயல்பாகவே குழந்தைகளுக்கு திரைத்துறைக்குள்ளே வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால், தங்களை நிலைநிறுத்த வெகு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
தடுமாறி கீழே விழுந்தால் அடைந்த வெற்றியெல்லாம் அப்பாவாலும், அதிர்ஷ்டத்தாலும் கிடைத்தது என எளிதில் கடந்துவிடுவர். இந்த நிலையில்தான் சூர்யா நடிகராக `நேருக்கு நேர்' திரைப்படத்தில் அறிமுகமாகிறார். முதல் படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்த அவர் அப்படத்தில் செகண்ட் ஹீரோதான். படத்தின் வெற்றி சூர்யாவுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. ஆனாலும், படபடப்பாக நடிக்கிறார், நடிகனுக்கு உரிய உடல்மொழி இல்லை என விமர்சனங்கள் ஏராளம். தொடர்ச்சியாக நடித்த படங்களும் அவரை பெரிய இடத்துக்குக் கொண்டு செல்லவில்லை. பெரியண்ணா படத்தில் விஜயகாந்த்துடன் நடித்திருப்பார்.
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பார். இடையில் பூவெல்லாம் கேட்டுப்பார் மட்டுமே அவருக்கான படமாக அமைந்தது. அதிலும் நடனம் ஆடத்தெரியவில்லை என்ற கடுமையான விமர்சனம். 2000 -க்குப் பிறகு சூர்யாவின் திரைப்பயணம் வேறுவிதமாக அமைந்தது. சேது என்ற தமிழ் சினிமாவின் முக்கியமான படத்தை இயக்கிய பாலா தனது அடுத்த படமாக நந்தா படத்தை சூர்யாவை வைத்து இயக்குகிறார்.
அதுவரை பார்த்த பளபளப்பான சூர்யா இல்லை நந்தா படத்தில். மொட்டைத் தலை, தாடி என அதிகம் சிரிக்காத ஒரு சூர்யாவைப் பாலா அந்தப் படத்தில் காட்டியிருந்தார். திரையுலகின் கண்கள் சூர்யா மீது விழத் தொடங்கின. அம்மாவின் அன்புக்காக ஏங்கும் சீர்திருத்தப் பள்ளி சிறுவன், வளர்ந்த பிறகு எப்படி இருப்பான் என்பதை அச்சு அசலாக நடிப்பில் கொண்டு வந்திருந்தார். அதன் பிறகான சூர்யாவின் நடிப்பு வேறு தளத்துக்குச் சென்றது.
காக்க காக்க படத்தில் நந்தாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலான காவல்துறை அதிகாரி வேடம். அதை அத்தனை அழகாகச் செய்திருப்பார் சூர்யா. அந்த படம் சூர்யாவை கமர்சியல் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அமரச் செய்தது. 25 படங்கள் நடிப்பதற்குள்ளாகவே கூன் விழுந்த கதாபாத்திரமாக பேரழகன் படத்தில், லோக்கல் திருடனாக பிதாமகன் படத்தில், போலி கைடாக நடித்து ஏமாற்றுபவராக மாயாவி படத்தில் என சூர்யா எடுத்த முயற்சிகள் அசாத்தியமானது.
இதற்கிடையில் கஜினி, ஆறு, வேல், அயன் போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து தன்னை ஒரு ஸ்டாராக கட்டமைப்பதிலும் கவனம் செலுத்தினார் சூர்யா. இவர் படமென்றாலே குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வித்தியாசமான படங்களில் நடிப்பார் என்கிற நற்பெயரும் கிடைத்தது. வாரணம் ஆயிரம் படம் சூர்யாவை இந்திய அளவில் கவனம் பெற வைத்தது. ஒரு திரைக் கலைஞன் நடிக்க ஆசைப்படும் வாழ்நாள் கதாபாத்திரமான அமைந்தது அப்படம். கமலுக்குப் பிறகு நடிப்பில் குறிப்பிடத்தக்கவர் எனப் பெயர் பெற்றார்.
அதன் பிறகு சிங்கம் படம் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது. வசூலில் தனது இருப்பை தக்கவைத்த ஒரு கதாநாயகன் ஆனார் சூர்யா. தொடர்ச்சியாகத் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இவரது படங்களுக்கு ஹிட் அடிக்கத் தொடங்கின. எந்த சூர்யாவுக்கு உடல் மொழி வராது என்றார்களோ அதே சூர்யா நடிப்பில் உயரம் தொடத் தொடங்கினார்.
கொரோனா காலத்தில் பலரும் நம்பிக்கை இழந்து நின்ற பொழுதில், தியேட்டர்கள் மூடப்பட்டுக் கிடந்த காலத்தில் ஓடிடி -க்கு சமூகம் பழகாத போது சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகிறது. அந்த படம் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டது. இந்திய திரையுலகிற்கே அந்த படம் பெரும் நம்பிக்கை கொடுத்தது. அதுவரை சரிவர போகாமலிருந்த சூர்யாவின் படங்களுக்கும் சேர்த்து இப்படம் ஓடியது. ஓடிடிக்கான பெரிய திறப்பை திறந்தது. அதன் பிறகு எளியவர்களின் வலியை பேசும் ஜெய்பீம் படம் இந்தியாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
சமீபத்தில் திரையில் சில நிமிடங்களே தோன்றினாலும் திரை அதிர இருந்தது சூர்யாவின் நடிப்பு. இந்திய சினிமா ரசிகர்களே " நாம ஜெயிச்சுட்டோம் மாறா" என சூர்யாவின் தேசிய விருதைக் கொண்டாடுகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் தனது கடும் உழைப்பைக் காட்டி சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவின் உழைப்புக்கு, ரசிகர்கள் தங்களின் அன்பை லைப் டைம் செட்டில்மென்டாகக் கொடுத்திருக்கின்றனர். பிறந்தநாள் வாழ்த்துகள் Rolex sirrrrr!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust