தமிழகத்தில் எம் ஜி ஆர், ரஜினிகாந்த் போன்ற சாதாரண மக்கள், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற பிறகு, அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வெல்ல வேண்டும், எந்த படத்திலும் இறக்கக் கூடாது என ரசிகர்கள் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது ஏன்?
நம்மில் ஒருவன் அந்த புதிய உயரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறான், அவன் தோற்கவே கூடாது என்கிற அடிப்படை எண்ணம் இருப்பதால்தான், லாஜிக் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, அந்த உணர்ச்சி மேலிடுகிறது எனச் சிலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
அப்படி, ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் மும்பையில் பிறந்து, ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டில் வளர்ந்தவர்தான் ராதாகிஷன் தமானி. அப்பா பங்குச் சந்தை தரகர் அவ்வளவு தான் ராதா கிஷனுக்கும் பங்குச் சந்தைக்கும் உள்ள தொடர்பு.
ராதா கிஷன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே தொழில் செய்யத் தொடங்கிவிட்டார். கல்லூரி படிப்பை நிறைவு செய்யவில்லை. அவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, 1980களில் பங்குச் சந்தையிலேயே களமிறங்கினார்.
அடிப்படையில் மிகவும் நிதானம் கொண்டவர் ராதாகிஷன் தமானி. அதோடு கடின உழைப்பும், எந்த பங்கு நிலைத்து நிற்கும், எந்த பங்கு லாபம் கொடுக்கும் எனக் கணித்து முதலீடு செய்யும் திறமையும் வளர வளர அவர் சொந்த வாழ்க்கையும், பங்குச் சந்தை வியாபாரமும் செழித்தது.
ஹெச் டி எஃப் சி வங்கி ஐபிஓ மூலம் பங்குகளை இந்தியச் சந்தையில் வெளியிட்ட போது, அதை அதிக அளவில் வாங்கிக் குவித்த தனிநபர் ராதாகிஷன் தான் என்கிறது ப்ளூம்பெர்க் வலைதளம். ஹெச் டி எஃப் சி என்கிற ஒற்றை நிறுவனத்தின் மூலம் மட்டுமே பல கோடி ரூபாய் லாபம் பார்த்த புத்திசாலி முதலீட்டாளர்களில் இவரும் ஒருவர்.
நம்மில் பெரும்பாலானோர் சோனி லிவ்வின் ஸ்கேம் 1992-வைப் பார்த்திருப்போம். அதில் கதாநாயகனாக வந்த ஹர்ஷத் மேத்தா, சட்ட விரோதமாக சில பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்தி வைத்திருப்பார்.
அப்படி செயற்கையாக அவர் உயர்த்திப் பிடித்திருக்கும் பங்குகளின் விலை கட்டாயம் சரியும் என்று கச்சிதமாகக் கணித்து, அதற்கு நேரெதிராக முதலீடு (ஷார்ட் பொசிஷன் எடுப்பது) செய்து கொழுத்த லாபம் பார்த்த வெகு சில பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ராதா கிஷனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவருக்கு பங்குச் சந்தையைக் குறித்து இருந்த ஞானத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தியப் பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் குரு இவர் தான் என்பது மற்றொரு ஆச்சர்ய விஷயம்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவே தன்னை செதுக்கியதில் ராதா கிஷனுக்கு அதிக பங்குண்டு என பல மேடைகளில் வாயார தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆனால் ராதா கிஷன் தமானிக்கோ, பொதுமேடையில் தோன்றி உரையாற்றுவது, ஊக்குவிப்பது, ஊறுகாய் போடுவது எதுவும் பிடிக்காது. சத்தம் காட்டாமல் வந்தோமா, வேலையை முடித்தோமோ, போனாமா என்பதே அவர் பாணி.
67 வயதான ராதா கிஷன் தமானி தற்போது இந்தியப் பங்குச் சந்தைகளில் அத்தனை ஆக்டிவாக இல்லை. ஆனால் வி எஸ் டி இண்டஸ்ட்ரீஸ், இந்தியா சிமெண்ட்ஸ், மங்களம் ஆர்கானிக்ஸ், பி எஃப் யுடிலிடீஸ்... எனப் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவ்வப் போது தன் போர்ட்ஃபோலியோவையும் மாற்றியமைத்து வருகிறார்.
இவர் ஒரு பங்கில் முதலீடு செய்கிறார் அல்லது முதலீடு செய்த பணத்தை விற்று வெளியேறுகிறார் என்றால், அதனைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் செல்வாக்குள்ள மனிதர்.
கடந்த 1999 - 2000 ஆண்டு வாக்கில் இந்தியப் பங்குச் சந்தையில் முழு நேரம் முதலீடு செய்வதை விட்டுவிட்டு, தனக்கென ஒரு சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதன் பெயர் அவென்யூ சூப்பர்மார்ட். டி - மார்ட் என்கிற பெயரில் இந்தியாவின் 45 நகரங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சில்லறை வணிகக் கடைகளை நடத்தி வருகிறது இந்நிறுவனம்.
இன்று டீ மார்ட் கடைகளில் ஒரு வீட்டுக்குத் தேவையான சோப்பு, சீப்பு, பிளாஸ்டிக் சாமான்கள் தொடங்கி அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தும் விலை மலிவாகக் கிடைக்கின்றன. பல்வேறு மொத்த வியாபாரிகளே டீ மார்ட் கடைகளில் வாங்கி சில்லறை வியாபாரம் செய்து பிழைப்பதையும் பரவலாகப் பார்க்க முடிகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு தான் அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனத்தின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் வெளியாயின. இன்று அந்த பங்குகள் தான் அவரது 29 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில், இன்று இந்தியாவின் டாப் 25 நிறுவனங்களில் ஒன்றாக 2.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்போடு மிளிர்ந்து கொண்டிருக்கிறது அவென்யூ சூப்பர்மார்ட்.
பெரிய பணக்கார குடும்பத்தில் பிறக்காத, கல்லூரி படிப்பைக் கூட நிறைவு செய்யாத ராதா கிஷன் தமானி, இன்று இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். விரைவில் இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com