இட்லி

 

Pexels

ஹெல்த்

இட்லி, தோசை : நல்ல உணவுகளா அல்லது வாயுவை சேர்க்கும் அமில உணவுகளா?

பிறந்த குழந்தைக்கு 5-6 மாதம் ஆன பிறகு, முதல் உணவாக இட்லி கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் உண்டு. இட்லி, நல்ல உணவு என அனைவராலும் நம்பப்படுகிறது. அது உண்மையில் நல்ல உணவா?

மினு ப்ரீத்தி

பொதுவாக அசிட்டிக் உணவுகள் என்றால் பல இன்டர்நெட் ஆர்டிகள்களில் எலிமிச்சம் பழத்தையோ பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ குறிப்பிட்டுள்ளனர். உண்மையில், உடலில் அமிலத்தை அதாவது அசிட்டிக்காக மாற்றி, வயிறு, தொண்டை, உணவுக்குழாய் என எதுகளித்து எரிச்சலுடன் வருகின்ற ஏப்பமாக இருக்கட்டும் அடிக்கடி பசி வருவது, மிக மிக அதீத பசியுடனே எப்போதும் இருப்பது, காலை தூங்கி எழுந்தவுடன் வயிறு எரிச்சலுடன் பசியோ அல்லது வயிறு எரிச்சல் மட்டுமோ… இப்படி எரிகின்ற தன்மையில் நம் வயிறு, உணவு செல்லும் பாதைகளில் எரிச்சல் உண்டாவது காரணம் நாம் நல்ல உணவு என நினைத்து கொண்டிருப்பவைதான்.

பிறந்த குழந்தைக்கு 5-6 மாதம் ஆன பிறகு, முதல் உணவாக இட்லி கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் உண்டு. இட்லி, நல்ல உணவு என அனைவராலும் நம்பப்படுகிறது. அது உண்மையில் நல்ல உணவா? அதேபோலப் பருப்புச் சாதம் சின்னச்சிறு குழந்தைகளுக்குகூடக் கொடுக்கத் தொடங்குகிறோம். இதுவும் நல்ல உணவா?

ஓமம்

ஓமம்

சின்னச் சிறு குழந்தைகளை வைத்திருப்போருக்கு தெரியும். குழந்தைகள் வயிற்றுவலியால் அழத் தொடங்கும். ஓமம், மார்கெட்டில் விற்கும் பிரபல வாட்டர் எனக் கொடுப்பார்கள். இதுபோன்ற ஓம வாட்டர்களைக் கொடுத்து வாயுவை வெளியேற்ற தாய்மார்கள் முயற்சி செய்வார்கள். பின்னர் ஏன்? சின்னக் குழந்தைகளுக்கு இட்லியும் பருப்பு சாதமும் கொடுக்கிறீர்கள்.. மாற்று உணவுகள் எதுவும் இல்லையா? எவ்வளவோ இருக்கின்றன. ராகிக் கஞ்சி, ராகிக் கூழ், அரிசி கஞ்சி, பழங்கள், பழக்கூழ், வேகவைத்த உருளைக்கிழங்கு, காய்கறி மசித்துத் தருவது.

ஏன் இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம், குழிப்பணியாரம், பருப்புச் சாதம், சாம்பார், கூட்டு, பருப்பு மசியல், வடை, வடகறி, பருப்பு அடை போன்றவை நல்ல உணவுகளாகச் சொல்லப்படுகின்றன? இதில் புரதச் சத்துகள் அதிகம் இருப்பதால், குழந்தைக்குத் தேவையான புரத சத்து கிடைத்து குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் அனைவரும் குழந்தை பருவத்தில் இருந்தே இதுபோன்ற பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்கின்றனர். பெரியவர்கள் ஆனதும் இட்லி, தோசை இல்லாமல் ஒருநாளும் செல்வதில்லை என்ற சூழல் வருகிறது. புரதச் சத்து நிறைய உணவுகளில் உள்ளது. இதில் மட்டுமல்ல…

இட்லி, தோசை நல்லதா?

மாவு என்றாலே அது புளிக்கும் தன்மையுடையது. இது அடிப்படையான விஷயம். இதனுடன் பருப்பும் சேர்ந்து அமிலத்தன்மையோடு புளிக்கத் தொடங்கும். 8 மணி நேரம் அரிசி, பருப்பை ஊற போட்டு, பின்னர் அரைத்து மீண்டும் 6-8 மணி நேரம் புளிக்க வைத்து இட்லியாக, தோசையாகவோ ஊத்தப்பங்களாகவோ ஆப்பமாகவோ செய்து சாப்பிடுகிறோம். 8+8 = 16 மணி நேரம் கழித்துச் சாப்பிடுகிறோம். இது புது உணவா? பழைய உணவா என நீங்களே சிந்தியுங்கள். இதைக் காலையில் இட்லி, தோசை மீண்டும் இரவில் அதே மாவில் இட்லி, தோசை, மீண்டும் அதை ஃப்ரிட்ஜில் வைத்து திரும்பவும் இட்லி, தோசை. ஏற்கெனவே கெட்டுப் புளித்துப்போன 16 மணி நேர பழைய மாவை ஒவ்வொரு 16 மணி நேரம் கூடுதலாக்கி கொண்டே இட்லி, தோசை சாப்பிடுகிறோம்.

வயிற்றில் இதுபோன்ற இட்லி, தோசை சென்று, ஒருவேளை நல்ல பழங்களை நீங்கள் சாப்பிட்டு இருந்தாலும்கூட இந்தப் பழங்களோடு சேர்த்து இந்த இட்லி, தோசைகளும் வயிற்றில் செரிக்கப்பட்டுப் புளித்துக்கொண்டிருக்கும். இப்போ, வயிற்றில் அமிலக்கூடாரமே உருவாகிறது. இத்தகைய நிலையில் அசிடிட்டி வராமல் வேறு என்ன வரும்? எதுக்களித்தல், எரிச்சல் கட்டாயமாக வரத்தான் செய்யும். தொண்டை முதல் ஆசன வாய் வரை வாயு, எரிச்சல், அமிலம், புண்கள் உருவாகத்தான் செய்யும்.

எது உண்மையில் புளிப்பு?

பொதுவாக மருத்துவர்கள் புளிப்பை சாப்பிடாதீர்கள் என்கிறார்கள். நாம் புளி, ரசம், கார குழம்பு, வத்தக்குழம்பு, புளிப்பான பழங்கள், தயிர், புளி சாதம்தான் புளிப்பு என நினைத்துக்கொண்டிருக்கிறோம். புளிக்கின்ற மாவு வகைகளும் புளிப்புதான். இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம் எல்லாமே புளிப்பு உணவுகள். மேலும், இது பழைய உணவுகள். இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால்தான் 20 வயதினருக்கு வாயு தொல்லையும் மூட்டு வலியும் வருகிறது. மார்க்கெட்டில் அவ்வளவு மூட்டு வலி தைலங்கள் கிடைக்கின்றன. எந்த மூட்டு வலி தைலமும் இல்லாமலே நாம் மூட்டு வலியை சரி செய்யலாம். எப்படி? புளித்த மாவால் செய்யப்படும் உணவுகளை நிறுத்துங்கள், பருப்பு உணவுகளைத் தொடவே வேண்டாம். புரதம் கிடைக்காமல் என்ன செய்வது? எல்லாத்துக்கும் வழி உள்ளது.

Pulses

அமிலம் உருவாக்கும் பருப்பு உணவுகள்

இட்லி, தோசை மாவில் உளுந்து பருப்பு, சாம்பாரில் துவரம் பருப்பு, கூட்டில் துவரம், கடலப்பருப்பு, பொங்கலில் பாசி பருப்பு, வடைகளில் கடலபருப்பு மசால்வடையாகிறது; மெதுவடையாக உளுந்தில் இருந்து மாவு... இதெல்லாம் ஊறவைத்து, அரைக்கப்பட்டு, சில உணவுகளுக்குப் புளிக்கவிட்டு உணவாகத் தயாரிக்கிறோம்.

சரி, சாம்பார், கூட்டு எப்படி அமிலமாகிறது. சாம்பாரை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் பெரிய தொந்தரவுகள் இருக்காது. ஆனால், பருப்பு வகைகளைக் காலை, மாலை, இரவு என வெவ்வேறு உணவு வகைகளின் மூலமாகச் சாப்பிடுகிறோம்.

காலை இட்லி, தோசை மற்றும் டிபன் சாம்பார், வடை, வடகறி

மதியம் சாம்பார், கூட்டு, கீரை பருப்பு மசியல், பருப்பு ரசம்

இரவு மீண்டும் இட்லி, தோசை மற்றும் மதியம் வைத்த சாம்பார்

அடுத்தநாள் பொங்கலுக்குச் சாம்பாரும் சட்னியும் வடையும்

மீண்டும் மதியம் எதாவது கொண்டைக்கடலை குழம்போ பருப்போ பயறோ சேர்த்த உணவுகள்

இரவு மீண்டும் இட்லி, தோசை.. சப்பாத்தி சாப்பிட்டால் அதனுடன் பருப்பு சப்ஜி.

இப்படிப் பருப்பை ஒருநாளுக்கு எத்தனை வேளை சாப்பிடுகிறோம். தினமும் சாப்பிடுகிறோம். பருப்புகள் நொதித்துப் புளித்து மாவாகி புளிப்பாகி கெட்டு நாற்றமடிக்கும். பருப்பில் புரதம் இருந்தால் மாவுத்தன்மையும் அதிகம்.

விஷ வாயுவாக மாறும்

இப்படிப் புதுப் புது டிசைனில் ஒரே பழைய உணவுகளும் அதே பருப்பு உணவுகளும்தாம். இப்படிச் சாப்பிட்ட வயிறில் குப்பைத்தொட்டி போல உணவுகள் வேளாவேளைக்கு விழுகிறது. வயிற்றில் புளிக்கிறது; அமிலமாகிறது; ஒருவேளை தப்பித் தவறி பழங்களோ பழச்சாறுகளோ கீரைகளோ காய்களோ விழுந்தாலும் சேர்த்துப் புளிக்கிறது; அமிலமாகிறது. உடனே, ‘கேஸ் ஆயிடுச்சு எரியுது’ எனப் புலம்புகிறோம். நீங்கள் உங்க வீட்டு குப்பைத்தொட்டியை கவனியுங்கள் அது எப்படி மறுநாள் துர்நாற்றம் அடிக்கிறதோ… அதுபோல நம் வயிறும் மாறுகிறது. மலம் துர்நாற்றமடைகிறது. வாயு காற்று துர்நாற்றத்துடன் வருகிறது. மலச்சிக்கல் ஆகிறது. ஏப்பம், எதுக்களித்தல் துர்நாற்றத்துடன் எரிச்சலுடன் வருகிறது. வயிற்றில் சேர்ந்த Gas (வாயு) வயிற்றில் Bloating, Gastroesophageal reflux disease, Gastric problem, acidity, hyper acidity , Gastric ulcer, peptic ulcer, constipation போன்ற இன்னும் பல தொந்தரவுகளை உருவாக்கின்றன.

மூட்டு வலி, அங்கங்கே பிடித்துக்கொள்ளுதல், குத்துதல், தசைகள் இறுக்கமாகுதல், குனிய முடியாது, நிமிர முடியாது, உடலில் எந்த இடத்திலும் வலி வருவது, வயிறு வலி மற்றும் எரிச்சல், பசியின்மை, அதீத பசி, மலச்சிக்கல், தொடர் மலச்சிக்கலால் மூலம், ஆசன வாய் வெடிப்பு, செரிமானத் தொந்தரவுகள்… செரிமானத் தொந்தரவுகள் இருந்தால் சாப்பிடும் உணவுகள் செரிக்காது. பின்னர்க் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் அசிட்டிக் தன்மை கூடி அல்சர் வருகிறது. பின்னர், புண்கள் ஆறுவதில்லை. அதற்கு நாம் கொஞ்சம் கூட கேப் கொடுக்காமல் நல்ல உணவுகள் எனச் சொல்லிக்கொண்டு இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுகிறோம். ஒருநாள் அல்சர் புற்றுநோயாக மாறுகிறது. அய்யோ, புற்றுநோய் வந்துவிட்டதே… எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லையே… எப்படி வந்தது எனப் புலம்புகிறோம். கெட்ட பழக்கங்கள் இல்லையென்றாலும் இதுபோலக் கெட்ட உணவுப்பழக்கமும் கெட்டுப்போன பழைய உணவுகளும் உண்பதே போதும். வயிறு வலி முதல் வயிற்று புற்றுநோய் வர இந்தப் பழக்கம் மிக மிக முக்கியக் காரணம்.

அப்போ எதைத்தான் சாப்பிடுவது?

உங்கள் உணவுப்பழக்கத்தைக் கவனியுங்கள். 5 நாட்களுக்கு மாவு அரைத்து பிரிட்ஜில் வைத்து நம் தாத்தா, பாட்டிகள் சாப்பிட்டார்களா என்று… காலையில் நீராகாரம், கஞ்சி, கூழ், கிடைக்கின்ற பழங்கள்தான். மதியம் ஏதோ ஒர் வகைத் தனிச்சீர் உணவு. சாதம், காய்கறி, ஒரு வகைக் குழம்பு, இரவு சாப்பிடும் பழக்கம் இல்லை. மாலை 6 மணிக்கு மேல் பசிக்காது.

இன்றைய சூழலில் டிபன் பழகிவிட்டோர்… காலையில் பழ உணவுகள், பழச்சாறுகள், கஞ்சி, கூழ், அவல், ஓட்ஸ், சாலட், முளைக்கட்டிய பயறுகள் சாப்பிடலாம். இடியாப்பத்தில் அரிசி மாவு உள்ளது. ஆனால், அது புளிக்கவில்லை. எனவே நல்லது. இட்லி, தோசை வேண்டுமெனில் அரிசியில் உளுந்து சேர்க்காமல் சுரை, புடலை, வெள்ளரி, வெண்டை, சௌசௌ காய்களை அரைத்து மாவுடன் சேர்த்துத் தோசையாக சாப்பிடலாம். இதைச் ‘சைவ இட்லி, தோசை’ என்பார்கள் இயற்கை மருத்துவர்கள். இது ஒரு வேளைக்குமட்டும்தான் அடுத்த வேளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் புளித்துவிடும். அமிலம் சேரும்.

பருப்பு இல்லாமல் எப்படி புரோட்டீன் கிடைக்கும்? கீரைகள், காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு உணவுகள், முட்டை, அசைவம் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் கிடைக்கும். பயறு வகைகளில் அவரை, பச்சை பட்டாணி, தட்டை பயறு, டபுள் பீன்ஸ், பீன்ஸ், கொள்ளு, பச்சைப்பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம். கடல உருண்டை, எள்ளு உருண்டை சாப்பிடலாம். நட்ஸ் சாப்பிடலாம். விதைகள் சாப்பிடலாம்.

பருப்பு சாப்பிடும் பழக்கத்தை மிக மிகக் குறைவாக்குங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை சாம்பார், கூட்டு என்று... மாதம் ஒருமுறை பொங்கல். வடை, வடகறி மாதம் ஒருமுறை என மாற்றுங்கள். இட்லி, தோசைக்குப் பதிலாக மேற்சொன்ன உணவுகள் சாப்பிட பழகுங்கள். சமச்சீர் உணவிலிருந்து தனிச்சீர் எனும் ‘மோனோ டயட்’ பின்பற்றுங்கள். வயிற்றில் அமிலம் சேராது; புளிக்காது.

எப்போதாவது நவீன துரித உணவுகள் 5%

பருப்புகள் 5%

பயறுகள் 10%

எண்ணெய் வகைகள் 10%

அசைவ உணவுகள் 10%

தானியங்கள் - அரிசி, சிறுதானியம் போன்ற எல்லாம் 10%

கீரைகள் 10%

காய்கறிகள் 10%

பழங்கள், நட்ஸ், விதைகள் 30%

இதைப்பின்பற்றினாலே உணவுப்பழக்கத்தால் அமிலமோ வாயுக்களோ கழிவுகளோ அதிகளவில் சேராது. நோய்களும் பெரும்பாலும் வராது. முக்கியமாக, வயிறு உங்களை வாழ்த்தும்!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?