உடலில் இதயம், நுரையீரல், மூளை போன்ற உறுப்புகள், ஒருமுறை பாதிக்கப்பட்டால், அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், கல்லீரல் அப்படியில்லை. கல்லீரல் பாதிக்கப்பட்டால், முறையான சிகிச்சை மூலம், ஆரோக்கியமான நிலைக்கு மாற்ற முடியும். இதுவே கல்லீரலின் சிறப்பு. இதனால்தான் பலபேர் குடித்தாலும் அந்தக் குடி கெடுதியைத் தாங்கி நிற்கும் சக்தியைப் பெற்று இருக்கிறது கல்லீரல். ஆனால், அந்த கல்லீரலும் எந்த அளவுக்குத் தாங்கும் எனத் தெரியாது? குடித்துப் பாதித்த கல்லீரலை, குடிக்காமலே வேறு காரணங்களால் பாதித்துள்ள கல்லீரலை எளிமையான சில மூலிகைகளால் முழுவதுமாக குணப்படுத்த முடியும்.
இன்று பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றனர். ‘டிரிங்கர், சோஷியல் டிரிங்கர், அடிக்டர்’ என எந்த பெயரைச் சூட்டிக்கொண்டாலும் குடிக்கப்படும் மதுவால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல்தான். தவிர, உணவில் மாற்றம், சுகாதாரமற்ற நீர் அருந்துதல், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் போன்ற பல காரணங்களாலும் கல்லீரல் பாதிக்கப்படும். ஊட்டச்சத்து கிரகித்தல், நச்சு நீக்குதல் என ஆயிரக்கணக்கான வேலைகளைச் செய்யும் நம்முடைய உடலின் ரசாயனத் தொழிற்சாலையான கல்லீரல் என்ற சிறப்புமிக்க உறுப்பைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இதற்காக, வாரத்துக்கு ஒரு முறையேனும் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் (Detoxification) உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றக் கூடிய வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு. கீழாநெல்லியில் உள்ள எக்லிப்டின் (Ecliptin) என்ற என்சைம் கல்லீரல் செற்களைப் பாதுகாப்பதுடன், பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்கவும் செய்கிறது. இதில், கால்சியம், நார்ச்சத்து உள்ளன. கீழாநெல்லிக் கீரை ஒரு சிறந்த மலமிளக்கியும்கூட. மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு அருமருந்து. மஞ்சள் காமாலை நோயை முழுவதுமாகக் குணப்படுத்தக்கூடிய மிகச்சிறந்த மூலிகை என்பதால், இதனை ‘காமாலைக் கீரை’ என்றும் அழைப்பர்.
முதலில் கல்லீரலைப் பலப்படுத்தும் டீ எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம்.
அஸ்வகந்தா, நெல்லிக்காய், கடுக்காய் மூன்றையும் தலா 50 கிராம் இடித்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியில் 20 கிராம் எடுத்து, பிளாக் டீயில் கலந்து, வாரம் இருமுறை சாப்பிட்டுவரக் கல்லீரல் ஆரோக்கியமாகும். பால், சர்க்கரை சேர்க்கக் கூடாது. கருப்பட்டி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம். நெல்லியில் உள்ள வைட்டமின் சி, அஸ்வகந்தாவில் உள்ள சத்துக்கள், கடுக்காயில் உள்ள இரும்புச்சத்து ஆகியவை ஒன்று சேரும்போது கல்லீரல் பலமாகும். எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
அடுத்ததாக, கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகளைப் பற்றிப் பார்க்கலாம். ‘நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி’ சாப்பிடுவது கல்லீரலைப் பாதுகாக்கும். நீரைக் கொதிக்கவைக்கும்போது, அதில் உள்ள பாக்டீரியா, வைரஸ் நீங்கி, சுத்தமான நீராக மாறிவிடும். தயிராகச் சாப்பிடாமல் மோராகப் பெருக்கி, 150 மி.லி வரை தினமும் குடித்துவர, கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். நெய்யை அப்படியே சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு கல்லீரலில் சேரும். எனவே, நெய்யை உருக்கும்போது, அதில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பாக மாறிவிடும். உருக்கிய நெய்யில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேராது.
வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகள் அனைத்தும் கல்லீரலைச் சுத்தப்படுத்தி, நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. கிரீன் ஆப்பிள், முட்டைகோஸ், அஸ்வகந்தா பொடி, வால்நட், சாமை, குதிரைவாலி போன்ற உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். நிலத்தடி நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, குடிப்பது கல்லீரலுக்கு நல்லது.
மூன்றாவதாகக் கல்லீரலைப் பலப்படுத்தும் ‘கீழாநெல்லி டானிக்’ செய்முறையைப் பார்க்கலாம். வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இலை - தலா 50 கிராம், மோர் - 100 மி.லி, சீரகத் தூள், இந்துப்பு - தலா ஒரு சிட்டிகை… வெள்ளைக் கரிசாலை, கீழாநெல்லி இரண்டையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதை மோரில் கலந்து, சீரகத் தூள், இந்துப்பு கலந்து, விருப்பப்பட்டால் ஆளி விதைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
மது அருந்துபவர்கள், மதுவை நிறுத்திவிட்டு, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலை, மாலை என இரு வேளையும் இந்தக் கல்லீரல் டானிக்கை அருந்தலாம். மதுவால் பாதிக்கப்பட்ட கல்லீரல் பரிபூரணமாகக் குணமாகும். மஞ்சள் காமாலை வந்தவர்கள், தொடர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில், காலை நேரத்தில் இந்த டானிக்கைக் குடிக்கலாம். ஒரு வயது முடிந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் இந்த மூலிகைச் சாற்றைக் குடித்துவர, கல்லீரல் ஆரோக்கியம் பெறும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust