இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்கும் 26 விஷயங்கள் Twitter
இந்தியா

மங்கள்யான் முதல் மசாலாக்கள் வரை - இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்கும் 26 விஷயங்கள்

உலகில் வேறு எந்த நாட்டையும் பார்க்க முடியாத பல சுவாரசியங்கள் இந்தியாவில் இருக்கிறது, சர்வதேச அரங்கில் இந்தியா கவனம் பெறும் விஷயங்கள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

Gautham

உலகிலேயே ஏழாவது மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு இந்தியா. மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம். இந்தியாவில் இருப்பது போலச் சமவெளி, காடுகள், உடலை உறையச் செய்யும் கடுங்குளிர், வறண்ட பாலைவனங்கள் எனப் பல தரப்பட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட நாடுகள் மிக மிகக் குறைவு.

இந்தியாவில் இருப்பது போலப் பல மொழிகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகளை சர்வ நிச்சயமாக இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்தியாவில் சுமார் 1600 மொழிகள் பேசப்படுகின்றன. இப்படி உலகில் வேறு எந்த நாட்டையும் பார்க்க முடியாது. இதுபோல வேறு என்ன சுவாரசியங்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கிறது, சர்வதேச அரங்கில் இந்தியா சாதித்து இருக்கும் விஷயங்கள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

1. மிஷன் மங்கள்யான் - செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்பிய இந்தியாவின் மங்கள்யான் திட்டம், சாண்ட்ரா புல்லக் நடிப்பில் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட 'கிராவிட்டி' என்கிற திரைப்படத்தின் பட்ஜெட்டை விடக் குறைவு.

2. ஆறு பருவநிலை - பொதுவாக உலகின் பல நாடுகளில் நான்கு பருவ நிலைகளைத் தான் பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் மட்டும் கோடைக் காலம், முன் குளிர்காலம், குளிர் காலம், மழைக் காலம், வசந்த காலம், இலையுதிர் காலம்... என ஆறு பருவநிலை காலங்களை அனுபவிக்கலாம்.

3. மொழிகள் - 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் விவரங்களின்படி இந்தியாவில் 122 மொழிகள் கணிசமான எண்ணிக்கையில் மக்களால் பேசப்பட்டு வருவதாகவும், அது போக 1500க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் பேசப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

4. ஆங்கிலம் - இந்தியாவில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் வெளிநாட்டு மொழியான ஆங்கிலமும் இந்தியாவில் கணிசமாகப் பேசப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆங்கிலம் பேசும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் என்கிறது இந்தியா டைம்ஸ் பத்திரிக்கை.

5. சைவ உணவு சாப்பிடுபவர்கள் - ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த காலத்தில் இதே நாட்டில் தான் பௌத்தமும் சமணமும் வலுவாகத் தலையெடுத்து வளர்ந்து இந்தியா முழுக்க பரவத் தொடங்கின. இது போகச் சைவம், வைணவம் போன்ற சமயங்களும் இந்தியாவிலேயே தோன்றி இன்றுவரை செழித்து வளர்ந்து வருகின்றன. இப்படிப் பல மதங்களின் தாயகமாகவும் பல மத நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் நாடாகவும் இந்தியா இருப்பதால் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைவ உணவு சாப்பிடுபவர்களைக் கொண்டு நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் சுமார் 38 சதவீதம் பேர் சைவ உணவைச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.

6. பாம்பு ஏணி விளையாட்டு - பரமபதம் நினைவிருக்கிறதா பாம்பு ஏணி எனத் தாயத்தை உருட்டிவிட்டு விளையாடும் அந்த விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது இந்தியா டைம்ஸ் பத்திரிகை.

7. பிளாஸ்டிக் கட்டணம் - பொதுவாகப் பள்ளிகளில் கல்வி கட்டணம், பயிற்சிக் கட்டணம், சீருடைக் கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம் போன்றவற்றைப் பணமாக வசூலிப்பார்கள். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அசாம் மாநிலத்தின் தலைநகரான கெளஹாத்தியில் அக்சர் என்கிற பள்ளியில் பள்ளி கட்டணமாக பிளாஸ்டிக் கழிவுகளைப் பெறுகிறார்கள்.

8. வேலண்டைன்ஸ் டே + சில்றன்ஸ் டே - ஒட்டுமொத்த உலகமே பிப்ரவரி 14 ஆம் தேதியை காதலர்கள் தினமாகக் கொண்டாடுகிறது. மிகச் சரியாக 9 மாதங்கள் கழித்து இந்தியா நவம்பர் 14ஆம் தேதியைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறது.

9. படை, ஒரு பெரும்படை - ஐக்கிய நாட்டுப் படைகள் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த நாள் வரை அப்படைக்கு அதிக அளவில் தன் துருப்புகளை அனுப்பி வருகிறது இந்தியா.

10. பாம்பே பிளட் குரூப் - எத்தனை ரத்த வகைகள் இருக்கின்றன என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்... A, B, AB, O என நான்கு முக்கிய ரத்த வகைகளை நீங்கள் கூறுவீர்கள். இது போக ஹெச் ஹெச் (h/h) ஒரு ரத்த வகை இருக்கிறது. அப்படிப்பட்ட ரத்த வகை 1952 ஆம் ஆண்டு பம்பாயில் மருத்துவர் ஒய் எம் பிண்டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பத்து லட்சம் பேரில் நான்கு பேருக்கு மட்டுமே இந்த வகையான ரத்தம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

11. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை - இந்தியா ஒரு பண்டிகைகளின் கூடாரம் என்று சொல்லலாம். விநாயகர் சதுர்த்தி, மொஹ்ரம், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, தீபாவளி, தசரா, பைசாகி, பொங்கல், அறுவடைத் திருநாள்... என இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு மாதமும் தடபுடலான மிகப்பெரிய திருவிழாக்களும் பண்டிகைகளும் நடந்து கொண்டேதான் இருக்கும். அப்பண்டிகைகள், அம்மாநில அல்லது அப்பிராந்தியத்தில் இருக்கும் அருமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

12. கிரிக்கெட் - ஒரு விளையாட்டை ஒரு மதம் போல வெறித்தனமாக பின்தொடரும் வழக்கம் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய ஒன்று. நாம் முன்பே கூறியது போல இந்தியாவில் இந்து மதம், இஸ்லாமிய மதம், சமணம், பௌத்தம், கிறிஸ்தவம்... எனப் பல பெரிய மதங்கள் தொடங்கி பல்வேறு மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இவர்கள் அனைவரும் கிரிக்கெட் என்கிற ஒற்றை வார்த்தையில் ஒருங்கிணைகிறார்கள். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாடும் உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் எனப் பல தரப்பினர் தங்கள் கடவுளர்களிடம் பிரார்த்திப்பதே சாட்சி.

13. கிரிக்கெட்டின் கடவுள் - சச்சின் டெண்டுல்கர் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரது சாதனையை முறியடிக்க இனி எவராலும் முடியாது என கிரிக்கெட் வல்லுநர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர்.

Train Travel

14. இந்திய ரயில்வே - உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே அமைப்பைக் கொண்டது இந்திய ரயில்வே நிறுவனம். ஒரு நாளில் இந்திய ரயில்வே நிறுவனத்தின் ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் பட்டியலில் இந்திய ரயில்வேசுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு.

15. தங்க மங்கை - உலகின் ஆகச் சிறந்த பாக்சர் மற்றும் இந்தியாவின் தங்க மங்கையான மேரி கோம் உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளார். ஆண் பெண் பாலின பாகுபாடின்றி, உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் ஆறு தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என உயர்ந்து நிற்கிறார்.

16. கதவில்லா கிராமம் - ஒரு வீடு என்றால் அதற்கு கதவு கட்டாயமாக இருக்கும் ஆனால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சனி சிங்னாபூர் என்கிற கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகளே கிடையாது. ஏதேனும் திருடு போய்விடாதா... என கிராமத்தில் வாழும் மக்களைக் கேட்டால், திருடுபவர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பதால் தங்கள் கிராமத்தில் திருடு போவதில்லை என மக்கள் நம்புகிறார்கள்.

17. மசாலா ராஜா - உலகின் 70% மசாலா பொருட்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

18. இணைய பயனர்கள் - ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 69 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துவதாக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

19. 768636,97,74,870 × 246509,97,45,779 என கணிதத்தில் ஒரு பெருக்கல் கேள்வி எழுப்பினால், நீங்கள் விடை சொல்ல எத்தனை நிமிடங்கள் எடுத்துக் கொள்வீர்கள். குறைந்தபட்சம் ஒரு சில நிமிடங்களாவது எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த பெருக்கல் கணக்கிற்கு மனித கணினி என பெயர் பெற்ற சகுந்தலா தேவி அம்மையார் வெறும் 28 நொடிகளில் சரியான விடையை கூறி அனைவரையும் அசத்தினார்.

Facebook

20. ஃபேஸ்புக் ராஜா - உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் தளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான். கடந்த ஜனவரி 2022 நிலவரப்படி இந்தியாவில் 32.9 கோடி பேர் ஃபேஸ்புக் பயனர்களாக இருப்பதாக ஸ்டாடிஸ்டா வலைதளத்தின் தரவுகள் கூறுகிறது.

21. அஞ்சலகத்திலும் ஓர் சாதனை - உலகிலேயே மிகப்பெரிய தபால் துறை நெட்வொர்க்கை கொண்ட அமைப்பு இந்திய அஞ்சலகம். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகர் நகரத்தில் ஒரு மிதக்கும் அஞ்சலகம் இருக்கிறது வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்த்து வாருங்கள். அதேபோல கடல் மட்டத்திலிருந்து சுமார் 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் ஹிக்கீம் என்கிற இடத்தில் தான் உலகிலேயே மிக உயரமான அஞ்சலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில் தான் இருக்கிறது.

22. அன்னதானம் - இந்தியா முழுக்க பலவிதமான நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் கலாச்சாரங்கள் இருந்தாலும் விருந்தோம்பல் என்கிற விஷயத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான உபசரிப்பைப் பார்க்கலாம். அதன் ஓர் அங்கமாக இந்தியாவின் பல இடங்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்யும் கோயில்கள் தர்ம ஸ்தாபனங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களைக் குறிப்பிடலாம். பஞ்சாபில் சீக்கியர்களின் புனிதத் தளமாகக் கருதப்படும் பொற்கோயிலில் லங்கார் என்கிற பெயரில் ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 பேருக்கு ஜாதி, மத, இன, மொழி... என எந்தவித பாரபட்சமும் இன்றி உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல தென்னிந்தியாவில் மஞ்சுநாத சுவாமி திருக்கோயிலிலும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

23. இந்திய உணவு டெலிவரியின் முன்னோடி - டப்பாவாலா- மும்பை நகரத்திற்கு ஒருமுறையாவது சென்று வந்திருப்பவர்கள் டப்பாவாலாக்களைப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. காலையில் வீட்டில் சமைக்கப்படும் நல்ல சத்தான உணவை பார்சல் செய்து கொடுத்து அனுப்பினால், மதிய உணவு நேரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்குச் சரியாக டெலிவரி செய்யப்படும். 60 லட்சம் டெலிவரிகளில் ஒரே ஒரு டெலிவரி தவறினால் பெரிய விஷயம். அந்த அளவுக்கு தொழில் சுத்தமாக இருக்கும். இப்படி ஒரு பிரம்மாண்ட டெலிவரி நெட்வொர்க்கை இன்று வரை உலகில் வேறு எவராலும் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் இவர்கள் மனித மூளை & மனித கைகளைக் கொண்டே அத்தனைப் பணிகளையும் செய்கிறார்கள்.

24. தியோதர் காடுகளுக்கு நடுவில் உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் - இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் சயில் என்கிற பகுதியில் உலகிலேயே மிக உயரமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2450 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மைதானம் 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

25. குலாபி கேங் - உத்திர பிரதேச மாநிலத்தில் பண்டா மாவட்டத்தில் மனைவியை மோசமாக அடித்துத் துன்புறுத்துவது மற்றும் குழந்தை திருமணங்கள், பெண்கள் கொடுமைப்படுத்துவது போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்டது இந்தப் பெண்கள் குழு. இந்தக் குழு தற்போது வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தங்களுக்கான உரிமைகளையும் தங்கள் வாழ்வை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பல செய்திகளில் பார்க்க முடிகிறது. இன்று உள்ளூர் அரசியல் வரை இவர்களுக்கென ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

26. பெண் குழந்தை என்றால் 111 மரம் - ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிப்லாந்திரி (Piplantri) என்கிற கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடுவதை ஒரு வழக்கமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். வெறுமனே குழந்தை பிறந்தவுடன் மரத்தை நட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்வது இவர்கள் வழக்கம் அல்ல. அம்மரங்கள் முறையாக நன்கு வளர்வதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். இப்படிக் கடந்த பல ஆண்டுக் காலங்களில் கிராம மக்கள் சுமார் மூன்று லட்சம் மரங்களை நட்டு வளர்த்துள்ளனர். வேறு ஏதேனும் நாடுகளில் இப்படிப்பட்ட செய்திகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் கீழே கமெண்டில் பதிவு செய்யுங்களேன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?