Adani  Twitter
இந்தியா

அதானி மீது அடுத்த பகீர் குற்றச்சாட்டு: அதிர வைக்கும் தகவல்கள்

NewsSense Editorial Team

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம், ஒரு நீண்ட நெடிய குற்றச்சாட்டை வைத்தது. இந்த ஒற்றை அறிக்கையினாலேயே கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதானி குழுமப் பங்குகளின் விலை சரிந்து வருகிறது என்பதை பல செய்திகளில் பார்த்திருப்போம் படித்திருப்போம்.

அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரங்களற்றவை, தவறானவை என அதானி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பிரச்னை ஒரு முடிவுக்கு வருவதற்குள், இங்கு மற்றொரு பிரச்சனை உருவெடுத்துவிட்டது.

சமீபத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், FPO முறையில் தன்னுடைய கணிசமான பங்குகளை விற்று சுமார் 20,000 கோடி ரூபாய் (2.5 பில்லியன் அமெரிக்க டாலர்) திரட்ட இருப்பதாக அறிவித்தது.

அதற்கான பணிகள் எல்லாம் முடிந்த போது, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன. அதானி குழுமம் ஹிண்டன்பெர்க் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தைக் கடந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டது என சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால், நேற்று (பிப்ரவரி 1ஆம் தேதி), அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், FPO முறையில் முதலீட்டாளர்களுக்கு விற்பதாக இருந்த பங்குகளை திரும்பப் பெறுவதாகவும், இதுவரை வசூலித்த பணத்தை எல்லாம் முதலீட்டாளர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட இருப்பதாகவும் தன் செய்திக் குறிப்பில் வெளியிட்டது ஒட்டுமொத்த இந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலீட்டாளர்களின் நலன் கருதியும், அதானி குழுமப் பங்குகளின் விலை சரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தார்மீக ரீதியாகவும் FPO முதலீடுகளை முன்னெடுத்துச் செல்வது சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அதானி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்ப்ஸ் குற்றச்சாட்டு:

மறுபக்கம் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும், அதானி குழுமத்தோடு தொடர்புடைய & அதானி குழுமம் முறைகேடுகளை செய்ய உதவியாக இருந்த இரு நிறுவனங்கள், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் எஃப் பி ஓ பங்கு வெளியீட்டில் அண்டர்ரைட்டர்களாக இருந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டி இருக்கிறது.

ஒரு நிறுவனம் தன் பங்குகளை சந்தையில் வெளியிடும் போது, பங்குகள் நல்ல முறையில் விற்கப்பட உதவும் நிறுவனங்களை அண்டர்ரைட்டர் என்பர். அந்த நிறுவன பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கும், பங்குகளை வெளியிடும் நிறுவனத்துக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்படுவதே அண்டர்ரைட்டர்களின் பிரதான பணி.

இப்படி அதானி குழுமத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் எலாரா கேப்பிட்டல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் மற்றும் மொனார்க் நெட்வொர்த் கேப்பிட்டல் என்கிற இந்தியத் தரகு நிறுவனம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO பங்கு வெளியீட்டுக்கு அண்டர்ரைட்டர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஹிண்டன்பெர்க் வைத்த பிரத்யேக குற்றச்சாட்டுகள்:

எலாரா கேப்பிட்டல்ஸ் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஏற்கனவே அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள், இந்த ஃபண்ட் அதானி குழும பங்குகளை சேகரித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஹிண்டர்பெர்க் அறிக்கையில் குற்றம்சாட்டபட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO பங்கு வெளியீட்டுக்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பது, விளம்பரங்களுக்குத் தேவையான விஷயங்களை கவனித்துக் கொள்வது எலாரா கேப்பிட்டல் நிறுவனத்தின் பிரதான பணி என அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மொனார்க் நெட்வொர்த் கேப்பிட்டல் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அதானி ப்ராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வைத்திருக்கிறது. இவர்களும் சில பல முறைகேடுகளைச் செய்ததாக ஹிண்டர்பெர்க் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.

இந்த தரகு நிறுவனம், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களிடம் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் FPO பங்கு வெளியீட்டை சந்தைப்படுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததாக அதானி தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிரமப்பட்டு பணத்தைத் திரட்டிய அதானி எண்டர்பிரைசஸ்:

ஹிண்டர்பெர்க் அறிக்கையை ஏற்படுத்திய சலசலப்புகளைக் கடந்தும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கச் செய்ய கெளதம் அதானியே களத்தில் இறங்கி பல முதலீடுகளைத் திரட்டியதாகச் சில முன்னணி வணிகச் செய்தி வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

FPO பங்கு வெளியீட்டில் கடைசி நிமிடத்தில் அபுதாபியைச் சேர்ந்த ஐ ஹெச் சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது, இந்திய ஸ்டீல் தொழிலதிபரான சஜ்ஜன் ஜிண்டால், டெலிகாம் பில்லியனாரான சுனில் மித்தல் ஆகியோர் முதலீடு செய்தது எல்லாமே, கெளதம் அதானியே நேரடியாக தலையிட்டு பேசி முதலீடுகளைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை சுயாதீனமாக சரிபார்த்து உறுதிப்படுத்த முடியவில்லை.

அதோடு, எலாரா கேப்பிட்டல் மற்றும் மொனார்க் நெட்வொர்த் கேப்பிட்டல் நிறுவனங்களும் இந்த பங்கு வெளியீட்டில் பணியாற்றி இருப்பதால், கெளதம் அதானிக்குச் சொந்தமான பணமே முதலீடுகளாக உள்ளே வந்திருக்குமா? அதானி குழுமம் தன் கெளரவத்தைப் பாதுகாத்துக் கொள்ள, FPO இலக்கை அடைய தன்னுடைய சொந்த பணத்தையே முதலீடு செய்திருப்பாரோ என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

அதானி தரப்பு என்ன செய்யலாம்:

அதானி எண்டர்பிரைசஸ் வெளியிட்ட FPO பங்குகளை யார் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள் என்கிற விவரங்களை வெளியிட்டால் இந்த பஞ்சாயத்தை எளிதாக முடித்துக் கொள்ளலாம் என முன்னாள் சிட்டி குரூப்பில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராகப் பணியாற்றிய டிம் பக்லி ஃபோர்ப்ஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவரான பில் அக்மென்னும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் முறைகேடுகள் நடந்திருந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுவரை எலாரா கேப்பிட்டல், மொனார்க் நெட்வொர்த் கேப்பிட்டல், அதானி குழும தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பல பத்து இடங்கள் பின் தங்கிவிடுவார் போலிருக்கிறதே. சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டால் சரி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?