இமயமலைப் பகுதியில் கோடையின் ஆரம்பம் வந்தவுடன், பனிக்கட்டிகள் உருகத் தொடங்கிவிடும். அந்தப் பருவத்துக்கான பள்ளி விடுமுறையும் அறிவிக்கப்பட்டு விடும். உடனே இமயத்தின் உயரத்தில் இருக்கும் நேபாளிகளான பெற்றோரும் பிள்ளைகளும் புல்வெளிப் பகுதிக்கு நகரத் தொடங்குகிறார்கள். சும்மா இல்லை, ஒரு மாதம் முழுக்க அவர்கள் வீட்டைவிட்டு அந்தப் புல்வெளிப் பகுதியிலேயே அலைவார்கள். இதற்கு ஒரே காரணம், தங்கத்தைவிட அதிக விலை கொண்ட அந்த மூலிகைக்காகத்தான்!
யர்சகும்பா எனப்படும் அந்த மலைப்பொருளை எடுப்பதற்காக, சேறு நிறைந்த வயல்களில் அந்தக் குடும்பங்கள் ஊர்வதைப் போல தங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். பார்ப்பதற்கு பசுமஞ்சள் நிறத்திலான கம்பளிப்புழு உருவமும், தலையில் நீண்ட குச்சி போல இருள் படிந்த பூஞ்சையுமாக அது காணப்படும்.
இந்த இரண்டுதலை உயிரியைச் சீனத்தில் டாங் சாங் சியா கா-ஓ என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, குளிர்காலப் புழு- கோடைக்கால புல் என இதற்கு அர்த்தம். குளிர்காலத்தில் யசகும்பா புழுவைப் போலவும் கோடையில் பூஞ்சையைப் போல ஒரு தாவரமாகவும் தோற்றம் அளிக்கும் என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது.
ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த யர்சகும்பா, ஒரு தீக்குச்சியைப் போல நீண்டு மெலிதான உருவத்தில் இருக்கும். இமயமலையின் ஆல்பைன் புல்வெளியில் தரைப்பகுதியிலிருந்து இரண்டு மூன்று செண்டி மீட்டர் அளவுக்கு மேலே எட்டிப்பார்த்தபடி இவை காணப்படும்.
சரி..சரி... இந்தக் கதை எல்லாம் எதற்கு.. சங்கதி என்ன?
எனக் கேட்பது காதில் விழுகிறது.
உள்ளூர் நேபாளிகளுக்கு ஏராளமான பணத்தை வாரி வழங்கக்கூடிய இந்த சரக்கை, இமயமலை வயாக்ரா என்கிறார்கள்.
ஒரு கிலோ யர்சகும்பாவைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கும் என்றால் சும்மாவா?
நேபாள கிராமப்புறப் பகுதிகளில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவுதான் எனும் நிலையில், உயரமான மலைச் சிகரங்களில் வசிக்கும் அந்த மக்களுக்கு இந்த வேலை வாழ்க்கையை ஓட்டுவதற்கு பெரும் ஆதாரமாக அமைந்துவிட்டது. அதுவும், அவர்களின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரு பொருளே அப்படியான வருவாயை ஈட்டித் தருவது வசதியாக இருக்கிறது.
யர்சகும்பா எனும் அதன் பெயரே அதைச் சொல்கிறதே என்கிறார்கள், உள்ளூர் நேபாளிகள். இமயமலை வயாக்ரா எனப்படும் இந்தப் கம்பளிப்புழு- பூஞ்சையின் பாலுணர்வைக் கிளறிவிடும் தன்மையைத் தவிர, விலைமதிப்புக்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள், அவர்கள்.
இந்த வயாக்ராவின் குணத்தைக் கால்நடை மேய்ப்பவர்கள்தான் முதலில் கண்டுபிடித்தனர் என்று நம்பப்படுகிறது. இதன் மருந்தியல் ரீதியிலான பலன்களை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே இமயமலை சிகர வாசிகள் கண்டறிந்துவிட்டனர் என்றும் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் யாக் எனும் வகை அடர்மயிர் மாடுகளை மேய்க்கச் சென்றபோது, இந்த மூலிகையை முகந்து பார்த்ததும் அவை அளவுக்கதிகமான சக்தி கொண்டவை போல மாறியதை மேய்ப்போர் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதை வைத்துப் பல இடங்களிலும் இதேபோல அந்த யாக்குகள் நடந்துகொண்டதால், அதன் பாலுணர்வு வேட்கையைக் கிளறிவிடும் பண்பை உறுதிப்படுத்தி இருக்கின்றனர், இமயமலை நேபாளிகள்.
புராணக் கதையையும் கொண்ட இந்தச் சிறிய தாவர-விலங்கை, 1960-கள் முதல் தேநீர் செய்வதிலும் சூப் செய்வதிலும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். வாத்து இறைச்சி உணவுத் தயாரிப்பில், வாத்தின் பின்புறத்துடன் இந்த யர்சகும்பா மூலிகையையும் சேர்த்து வறுவல் செய்கிறார்கள்.
மாயாஜாலமான இந்தப் பூஞ்சையைப் பற்றி 1990களில் தான் பெரிய அளவில் உலகம் முழுக்கத் தெரியவந்தது எனலாம். அப்போது, சீனத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் இதை எடுத்துக்கொண்ட பின்னர் அதற்கு முந்தைய இரண்டு உலக சாதனைகளை முறியடித்தார். அந்தச் சாதனையை அடுத்து, யர்சகும்பாவைப் பற்றிய ஆய்வு முயற்சிகள் இன்னும் கூடின.
இயற்கையான இந்த கம்பளிப்பூஞ்சையில் உள்ள வேதிமப் பொருள்கள் எனப் பார்த்தால், 28 வகையான நிறைவுற்ற, நிறைவுடையாத கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பால்மிட்டிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒலியிக் அமிலம், ஸ்டியரிக் அமிலம், எர்கோ ஸ்டெரால் ஆகியவை இதில் முக்கியமானவை. இத்துடன், வைட்டமின்களும் சில கரிமப் பொருள்களும்கூட இந்த வயாக்ராவில் அடங்கியுள்ளன.
சீன மருத்துவத்தில் இப்போது யர்சகும்பாவை முக்கிய மருந்தாகக் கருதுகின்றனர். ஆண்மைப் பிரச்னை, மூட்டு வலி ஆகியவற்றைத் தீர்க்கும்; மனிதர்களின் பாலுறவு வேட்கையைக் கிளறிவிடும்; புற்றுநோயையும் உடல் பருமன் நோயையும் குணப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.
2016ஆம் ஆண்டில் வெளியான ‘பார்மகோக்னசி ரிவ்யூ’ எனும் மருத்துவ ஆய்விதழில் இதுகுறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், “ ஓ. சினென்சிஸ் (இமயமலை வயாக்ரா) பாலுறவு வேட்கையைக் கிளறி, உசுப்பி விடுகிறது; பாலுறவு ஈடுபாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. இரு பாலரிடமும் மறுவுற்பத்தியில் சிக்கல் இருந்தால் அதாவது ஆண்களின் ஆண்மைக்குறைவையும் பெண்களின் கருவுறுதல் குறைபாட்டையும் இது சரிசெய்கிறது.” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பளிப்புழுவானது ஆண்டுக் கணக்கில் குளிரில் வாழ்ந்த இடத்திலிருந்துவிட்டு, ஒரு கோடையில் ஓரளவுக்கு வளர்ந்த நிலையை எட்டுகிறது. கூட்டுப்புழு நிலைக்கு வரும்போது, அதற்கு முன்னதாக, பூஞ்சையால் தொற்றுக்கு ஆளாகின்றன. பரவலாகக் காணப்படும் இந்த மைசீலியம், லார்வா புழுவின் உடலை அப்படியே எடுத்துக்கொண்டு விடுகிறது. இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் அந்தப் புழுவின் மலைப்பகுதியிலிருந்து புதிய ஒரு நீட்சிப்பகுதி உருவாகிறது.
எப்படி இப்படியொரு அமைப்பு உருவாகிறது என்பது பற்றி உயிரியல் ஆய்வாளர்கள் இன்னும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆய்வுக்கூடங்களில் இதற்கு உகந்த சூழல் இல்லை என்பதால் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாமல் உயிரியலாளர்கள் இருக்கின்றனர்.
இந்த உயிராதாரச் சூழல் அமைப்பில், ஒட்டிவாழும் எந்த உயிரியும் அதன் சார்பு உயிரியைக் கொன்றுதான் அது வாழமுடியும்.
மருத்துவ மதிப்பின்படி யர்சகும்பாவுக்கு ஏற்ப கிராக்கி அதிகரித்தபடி இருக்கிறது. சீனத்துக்காரர்களின் அதிகமான பயன்பாடுதான் இதன் சந்தைத் தேவையை அதிகரித்துவிட்டுள்ளது. அதன் விலையையும் எகிறச்செய்துவிட்டது. இதனால்தான், தங்க வேட்டையைப் போல நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் யர்சகும்பாவைத் தேடி அத்தணை பேர் அலைகிறார்கள்.
அளவுக்கு அதிகமானவர்கள் யர்சகும்பா வேட்டையில் ஈடுபடுவதால், அது ஓரளவுக்கு முதிர்ச்சி அடையும் முன்னரே பேராசைக்காரர்களின் செயல்பாடுகளால், இந்த வயாக்ராவின் இருப்பே கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு யர்சகும்பா கிடைக்கும் அளவு குறைந்துவருகிறது. 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான கட்டத்தில், இந்த வர்த்தகம் சரிபாதியாகச் சரிந்துவிட்டது என்றால், நிலவரத்தை ஊகித்துக்கொள்ள முடியும்.
ஒரே காரணம், அளவுக்கு அதிகமாக யர்சகும்பாவைப் பிடித்ததுதான். இதை முறைப்படுத்துவதற்குச் சரியான எந்த ஓர் ஏற்பாடும் இல்லாததால், அதீதமான வேட்டை தொடர்ந்தபடி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இயற்கைச் சூழலும் தன் பங்குக்குப் பாதகத்தை உண்டுபண்ணுகிறது. அதிலும் இயற்கையைக் குறைசொல்ல முடியாது. உலக அளவிலான மனிதச் செயல்பாடுகளால் கூடிக்கொண்டே போகும் வெப்ப நிலை காரணமாக, இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு குறைந்துவருகிறது. இதனால் அதைச் சார்ந்து இருக்கும் உயிரினச் சூழல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. யர்சகும்பாவின் பெருக்கமும் குறைகிறது.
இதைப் பூஞ்சையின் இருண்ட பக்கம் என்றும்கூட சொல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் யர்சகும்பா வேட்டைக்காக இமயமலைச் சிகரப் பகுதிகளுக்குச் செல்லும் குடும்பத்தினரின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. இதனைப் பறிக்கும் போட்டியில் உயிரிழக்கும் அளவுக்கும் நிலைமை மோசமாகச் சென்றுவிட்டது.
யர்சகும்பா வேட்டைக்குப் போனபோது, 2009 ஜூன் மாதத்தில் நேபாளிகள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கம்புகளாலும் அரிவாளாலும் வெட்டப்பட்ட அவர்களின் சடலங்கள் தூக்கி எறியப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
உள்ளூர் புத்தர்கள், குறிப்பாகப் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, அதாவது, புத்தர் கூறியபடி இயற்கையான பொக்கிசம் என்பதே யதார்த்தத்தில் ஒரு சாபத்தைப்போல எனக் கருதிக்கொள்கின்றனர். ஆனால், சீனத்து யர்சகும்பா பயன்பாட்டாளர்களோ இதைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust