உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் சாலைகளில் ஓடும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி பலரின் மனங்களை வென்றது. ட்விட்டர், பேஸ்புக் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 19 வயதாகும் அந்த இளைஞர், வினோத் கப்ரி எனும் இயக்குநர் தன் சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் பிரபலமடைந்துள்ளார்.
வினோத் கப்ரி ஒரு தேசிய விருது வென்ற இயக்குநர். சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வினோத் கப்ரி தனது காரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞன் ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அவர் அவனிடம் லிஃப்ட் தருவதாகக் கேட்க அந்த இளைஞன் கனிவாக மறுத்துவிட்டு தனது ஓட்டத்தைத் தொடர்கிறான். எதற்காக இந்த இளைஞன் இப்படி ஓட வேண்டும்? என்ற கேள்வி வினோத்துக்கு அவனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைக் தூண்ட அவனது ஓட்டத்துக்கு காரை நகர்த்தியவாறு பேச்சைத் தொடர்ந்தார். இளைஞனும் தன்னைப் பற்றி விளக்கத் தொடங்கினார்.
Pradeep
அந்த 19 வயது இளைஞரின் பெயர் பிரதீப் அவன் உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்தவர். மெக்டொனால்ஸ் கடையில் தனது பணியை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்குச் செல்கிறார். தினசரி இரவு ஓடியே தான் வீட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தினமும் ஓடியே வீட்டுக்குச் செல்வதன் காரணத்தை வினோத் கேட்க, தனது சுவாரசியமான பதிலைச் சொன்னார் பிரதீப், “ நான் இராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என்பதே அந்த பதில்.
இராணுவத்தில் சேர விரும்பும் பிரதீப் தினமும் 10 கி.மீ ஓடி பயிற்சி எடுத்துக்கொள்கிறார். அவர் நொய்டாவில் அவரது அண்ணனுடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் எழுந்து சமைத்து வேலைக்குச் செல்வதனால் அவருக்குப் பகலில் பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இரவு வீட்டிற்குத் திரும்பும் நேரத்தை இவ்வாறு ஓடுவதன் மூலம் பயிற்சிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார். ஊரிலிருக்கும் பிரதீப்பின் அம்மா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். பிரதீப்பின் அண்ணன் நைட் சிஃப்ட் வேலை செய்து வருகிறார்.
நேரமின்மை, வறுமை என எந்த காரணத்தையும் சொல்லாமல் தன் இலக்கை நோக்கிய பயணத்தை முனைப்புடன் முன்னெடுக்கும் பிரதீப் தான் தற்போது இணையத்தில் செம வைரல். பாலிவுட் வட்டாரத்தினர், ஐஏஎஸ் அதிகாரிகள் எனப் பலரும் பிரதீப்பின் கதையை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவரை “pure gold” என வர்ணித்து வருகின்றனர்.