இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
‘பிட்காயின்’ முதலீட்டில், கர்நாடக பா.ஜனதா பிரமுகர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஊழலை கர்நாடக பா.ஜனதா அரசு மூடி மறைப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்தது. கர்நாடக போலீஸார் விசாரித்து வரும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க விசாரணை அமைப்பான எப்பிஐ -யின் அதிகாரிகள் டெல்லிக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையொட்டி சிபிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், " ‘பிட்காயின்’ வழக்கில் விசாரணை நடத்த எப்பிஐ எந்தக் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை. அப்படி அனுப்பி வைக்க எப்பிஐ. சார்பில் சிபிஐ- க்கு எந்த வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 2022-2023 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டசபைக் கூட்டம் தொடங்கி துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகளை, விவாதம் நடந்துவருகிறது. இன்று உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்து, உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்துவருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. விலை உயர்வைத் தாண்டி, அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து 20 பேர் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். நேற்று முன்தினம் பிளாஸ்டிக் படகு மூலம் 10 பேர் தனுஷ்கோடி அருகே முதலாவது மணல்திட்டு பகுதியில் வந்திறங்கியிருக்கின்றனர். மீனவர்கள் அளித்த தகவல் காரணமாக, அவர்களை போலீஸார் வாகனம் மூலம் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், 9 அகதிகள் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் வந்திறங்கிறனர் அவர்களும் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
கேரளாவில் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படும் விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது, சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடக்கிறது. முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி அளிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.
இந்தியா-அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், பிரதமர் மோடியும் இன்றைய தினம் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி இம்ரான் கானின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதிவி பறிபோன முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்தான். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தற்காலிக சபாநாயகர் அயாஸ் சாதிக் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடங்கின.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவோர் நேற்று பிற்பகல் 2 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 3 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய பிரதமர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என்கின்றனர். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஷா மக்மூத் குரேஷியும் வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார். இருவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், ஐதராபாத் சன் ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.