Cyrus Mistry Twitter
இந்தியா

சைரஸ் மிஸ்திரி : யார் இவர்? டாடா குழுமத்துக்கும் இவருக்குமான உறவு என்ன? - விரிவான தகவல்கள்

டாடா குழுமத்திற்கும் ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்டரியின் பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள், அவரது நிர்வாகத் திறன் எல்லாம் பிடித்துப் போனது. நவம்பர் 2011 காலகட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Gautham

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மேஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சைரஸ் மிஸ்திரி தன் மனைவி ரொஹிகா சங்க்லா மற்றும் தன் மகன்கள் ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் சஹன் மிஸ்திரியோடு வாழ்ந்து வந்தார்.

சைரஸ் மிஸ்டரியின் உயிரிழப்புக்கு பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சைரஸ் மிஸ்திரி?

1968 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி டப்ளின் நகரத்தில் பிறந்த சைரஸ் மிஸ்திரி இந்தியாவின் புகழ்பெற்ற ஷபூர்ஜி பலோன்ஜி அண்ட் கோ நிறுவனத்தை நடத்தி வரும் மிஸ்திரி குடும்பத்தில் பிறந்தார். செல்வ செழிப்புக்கும், வசதிக்கும், சொகுசுக்கும் பஞ்சமில்லை. அவருக்கு மூன்று சகோதர சகோதரிகள் உள்ளனர்.

மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள கெத்தட்ரல் மற்றும் ஜான் கானன் பள்ளியில் தன் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். 1990 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார். படிப்பை நிறைவு செய்த உடனேயே தன் குடும்பத்தினரின் ஷபூர்ஜி பலோன்ஜி அண்ட் கோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1996 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் எக்ஸிக்யூட்டிவ் மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் படிப்பை நிறைவு செய்தார்.

Tata Group

டாடா குழுமத்தில் என்ட்ரி

இன்றைய தேதிக்கு டாடா குழுமம் இந்தியாவின் பல முக்கிய துறைகளில் தனி நிறுவனங்களை நடத்தி வருவது நாம் அறிந்ததே. டி சி எஸ் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்... என பல நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் அதனுடைய கணிசமான பங்குகள் டாடா சன்ஸ் என்கிற தாய் நிறுவனத்தின் வசமே இருக்கிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை ஷபூர்ஜி பலோன்ஜி அண்ட் கோ மிஸ்திரி குடும்பத்தினரிடம் இருக்கிறது. சைரஸ் மிஸ்திரியின் தாத்தா ஷபூர்ஜி மிஸ்திரி 1930 களில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

2006 ஆம் ஆண்டு, தன் தந்தையின் இடத்தை நிரப்ப சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

டாடா குழுமத்திற்கும் ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்டரியின் பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள், அவரது நிர்வாகத் திறன் எல்லாம் பிடித்துப் போனது. நவம்பர் 2011 காலகட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டாடா குழுமத் தலைவரானது எப்படி?

டாடா குழுமத்தில் புதிய பாய்ச்சலைக் கொண்டு வந்திருந்த ரத்தன் டாடாவுக்கும் முதுமை அதிகரித்து வந்தது. சக்கர நாற்காலியில் தள்ளாடிக் கொண்டே அலுவலகத்துக்கு வர விரும்பாத ரத்தன் டாடா, தான் கொண்டு வந்த ஓய்வு பெறும் வயது விதியின்படி ரத்தன் டாடாவும் குழுமத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறத் தயாரானார். தனக்கு அடுத்து டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நபரை, தன் 73ஆவது வயதிலேயே தேடத் தொடங்கினார் ரத்தன் டாடா.

அடுத்த டாடா குழுமத் தலைவரைத் தேர்வு செய்ய ரத்தன் டாடா 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா ஒட்டுமொத்த குழுமத்தின் அடுத்த தலைவராக வரலாம் என வதந்தி பரவியது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தையும் டாடா குழுமத்தின் டிரென்ட் நிறுவனத்தையும், ஸ்டார் பஜார் நிறுவனத்தையும் வெற்றிகரமாக வழிநடத்தியவர் என்பதால் கேமராக்கள் அவர் பக்கம் திரும்பின.

நோயல் டாடாவுக்கு ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் நிர்வகிக்கும் அளவுக்கு போதிய அனுபவம் இல்லை என வெளிப்படையாகக் கூறி, அவ்வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் டாடா குழுமத்தின் அடுத்த தலைவராக வர இருப்பவர் நல்ல தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குக் குழுமத்தை வழி நடத்தக்கூடிய அளவுக்கு இளைஞராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ரத்தன் டாடா.

கடைசியில் ஐந்து பேர் கொண்ட கமிட்டியில் இருந்த சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல் என்கிற நிறுவனத்தைக் கைப்பற்றியது. அதுதான் இப்போது டாடா ஸ்டீல் யூரோ என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் போதும், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன ஒப்பந்தங்களின் போதும் ரத்தன் டாடாவுக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் சைரஸ் மிஸ்திரிதான்.

அவர் டாடா குழுமத்தின் பல முக்கிய முடிவுகளில் பணியாற்றியது மற்றும் அவருடைய அமைதியான குணாதிசயம் ரத்தன் அவருக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்தது. ரத்தன் டாடா ஓய்வுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு, 43 வயதான சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

டாடா குழுமம் இந்தியாவில் வியாபாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை டாடா குடும்பத்தைச் சேராத ஒருவர் மட்டுமே டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிற்கு வந்துள்ளார் அவரது பெயர் நௌரோஜி சக்லத்வாலா. அவரைத் தொடர்ந்து டாடா அல்லாத ஒருவர் அக்குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் என்றால் அது மிஸ்திரி தான்.

புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றுக் கொண்ட பின் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஆர் கே கிருஷ்ணகுமார், ஜே ஜே இராணி, கிஷோர் செளகர், இஷாத் ஹுசேன், ரவிகாந்த், கோபாலகிருஷ்ணன், டி சி எஸ் ராமதுரை, டாடா ஸ்டீல் முத்துராமன், தாஜ் ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்த ரேமண்ட் எனப் பலரும் வயது காரணமாகவோ மற்ற பல காரணங்களாலோ வெளியேறினர்

தான் நினைத்தபடி உயர்பதவிகளில் ஆட்களை அமரவைக்க, அது சைரஸ் மிஸ்திரிக்கு சாதகமாகவே அமைந்தது. சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் எல்லாவற்றையும் எண்களாகப் பார்க்கத் தொடங்கினார். டாடா குழுமத்தில் நஷ்ட மீட்டும் வியாபாரங்களைக் கண்டுபிடித்து, மூட உத்தரவிடத் தொடங்கினார்.

உதாரணமாக இங்கிலாந்தில் இருந்த ஸ்டீல் வியாபாரத்தை விற்கத் தீர்மானித்தார். பெர்முடாஸ் நாட்டைச் சேர்ந்த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்கிற 22 நாடுகளில் 45 ஹோட்டல்களைக் கொண்ட நிறுவனத்தைக் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

அதேபோல டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் யூரியாவை இறக்குமதி செய்துகொண்டிருந்த பிரிவையும் மூடினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி வியாபாரத்தை வாங்கி, டாடா பவர் நிறுவனத்தோடு இணைத்தார். இது எல்லாம் டாடா குழுமத்துக்குள்ளேயே அச்சச்சோ என்ன ஆச்சு டாடா தலைவருக்கு..? என கேட்க வைத்தது.
டாடாக்களுக்கு எப்போதுமே லாபம் இரண்டாவது இடம்தான். நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்கும் நன்மை, சேவை மனப்பான்மை எப்போதும் முதலிடத்தில் இருந்தது. இப்படி சகட்டு மேனிக்கு நிறுவனங்களை மூடுவது எல்லாம் ரத்தன் டாடாவால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. நிறுவனம் திசை மாறுவதாக உணர்ந்து கொண்டார்.

வெளியேற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரி

2016 அக்டோபர் 24ஆம் தேதி ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் தலைவர் நிதின் நோரியா மற்றும் ரத்தன் டாடா இருவரும் சைரஸ் மிஸ்திரியை சந்தித்தனர். டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் விலக வேண்டுமென இயக்குநர்கள் குழு விரும்புவதாகக் கூறினார் நிதின்.

அதனைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் இயக்குநர் குழு, பல்வேறு காரணங்களை முன்னிட்டு சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாகக் கூறி தீர்மானத்தை நிறைவேற்றினர். கடந்த 15 தசாப்த கால வரலாற்றில் டாடா குழுமத்தின் தலைவர் இயக்குநர் குழுவால் வெளியேற்றப்படுவது அதுவே முதல் முறை.

சைரஸ் மிஸ்திரி இயக்குநர் குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார். நுஸ்லி வாடியாவின் ஆதரவும் சைரஸுக்கு முழுமையாக இருந்தது. இதே நுஸ்லி வாடியவைத் தான் தனக்குப் பிறகு டாடா குழுமத்தின் வாரிசாக்க ஜே ஆர் டி டாடா முயற்சித்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

சைரஸ் மிஸ்திரியை இயக்குநர் குழு வெளியேற்றியது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க 2016ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் ரத்தன் டாடா. அந்த அளவுக்கு டாடா குழுமத் தலைவர் பிரச்சனை, இந்திய அரசியலின் உயர்பதவி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சைரஸ் மிஸ்திரி பிரச்னையில் 2018ஆம் ஆண்டு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) டாடா குழுமத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதை எதிர்த்தும் சைரஸ் மிஸ்திரி மேல் முறையீடு செய்ததாக சி என் பி சி டிவி 18 வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT), சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமத்தின் தலைவராக பதவியில் அமர்த்தி உத்தரவிட்டது. அதை எதிர்த்து டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த காலகட்டங்களில் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது. அதே நேரத்தில் டாடா குழுமம் அடிக்கடி குழாயடிச் சண்டைகளுக்கு பத்திரிகையில் பேசப்படுவதையும் டாடா குழுமத்தின் உயர் அதிகாரிகள் பலரும் வருத்தத்தோடு பார்த்ததாகப் பல செய்திகள் வெளியாயின.

டாடா குழுமத்தில் இருந்து சைரஸை நீக்கியது தொடர்பாக உச்சநீதிமன்றம் டாடாக்களுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சைரஸ் மிஸ்திரி மறுசீராய்வு மனு சமர்பித்துள்ளார்.

சைரஸுக்குப் பிறகு டாடா குழுமம்

சைரஸ் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடா, குழுமத்தின் இடைக்கால தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். அடுத்து டாடா குழுமத்தின் தலைவர் யார் எனப் பத்திரிகைகளும் டாடா குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

கடைசியில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் பதவி ஏற்றுக் கொண்டபோது டாடா குழுமத்தில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகளின் பட்டியல் நீளமாக இருந்தது. அதோடு குழுமத்தின் செயல்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள் இருந்தன. உச்சபட்சமாக சைரஸ் மிஸ்திரி போல மீண்டும் ஒரு தவறு டாடா குழுமத்தில் நடந்துவிடக் கூடாது என ரத்தன் டாடாவின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.அதில் தலையாய பிரச்சனை டொகொமோ நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணம்.

சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவர் ஆன பின் முதல் வேலையாக 1.18 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்து சர்வதேச அளவில் டாடாக்களின் பெயரைக் காப்பாற்றினார்.

அச்சு வார்த்தது போல ஒரு டாடா குடும்பத்தினர் என்ன செய்வாரோ, அப்படியே சுமூகமாக டாடா குழுமத்தை வழிநடத்திச் செல்லத் தொடங்கினார் சந்திரசேகரன். அது அவருக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகளைத் தலைவர் பதவியில் அமர வைத்துள்ளது. அதோடு டாடா நியோ என்கிற சூப்பர் ஆப்பையும் களமிறக்கி ரத்தன் டாடாவின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இப்போது தான் கொஞ்சம் சைரஸ் மிஸ்திரி மற்றும் டாடா குழுமத்துக்கு இடையிலான பிரச்சனைகள் ஓய்ந்தது போல் தெரிந்தது. அதற்குள் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் காலமானது, இந்தியத் தொழிற் சமூகத்துக்கு ஏற்பட்ட நஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. சைரஸ் மிஸ்திரியின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?