அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ப்ளூம்பெர்க் தரவுகளின் அடிப்படையில் தற்போது சுமார் 121 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு உலகின் மூன்றாவது பணக்காரராகவும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தற்போது 137 பில்லியன் அமெரிக்க டாலரோடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டில் தொடர்ந்து சரிந்து வந்தது.
அதற்கு நேர்மாறாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, அதே 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதே நிலை தொடர்ந்தால் இன்னும் எத்தனை நாட்களில் அல்லது எத்தனை வாரங்களில் கௌதம் அதானி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுக்க முடியும். வாருங்கள் சிறியதாக ஒரு கணக்கு செய்து பார்ப்போம்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி... போன்ற நிறுவனங்களின் தலைவராக அறிவியல் உலகத்திலும் வணிக உலகத்திலும் வெற்றி கொடி நாட்டிய எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த 2022 ஜனவரி 1ஆம் தேதி, ப்ளூம்பெர்க் தரவுகள் படி சுமார் 270 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2022 டிசம்பர் 31ம் தேதி அவருடைய சொத்து மதிப்பு சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. ஓராண்டு காலத்தில், சுமார் 133 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கரைந்து இருக்கிறது. இதை 365 நாட்களுக்கு வகுத்தால், நாள் ஒன்றுக்கு 0.3643 பில்லியன் அமெரிக்க டாலர் இழந்திருக்கிறார்.
அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன்... போன்ற பல அதானி குழும நிறுவனங்களின் தலைவராக இருந்து செயல்பட்டு வரும் கௌதம் அதானி அவர்களின் சொத்து மதிப்பு 2022 ஜனவரி 1ஆம் தேதி 76.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2022 டிசம்பர் 31ஆம் தேதி கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 121 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து இருந்தது. ஆக இந்த ஓராண்டு காலத்தில் கௌதம் அதானின் சொத்து மதிப்பு சுமார் 44.5 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இதை நாளொன்றுக்கு என கணக்கிட்டால் ஒவ்வொரு நாளும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 0.1219 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.
தற்போது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. ஒருவேளை எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைப் போல, நாள் ஒன்றுக்கு 0.1219 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்தால், அடுத்த 132 நாட்களில் கெளதம் அதானி 137 பில்லியன் டாலரைக் கடந்து விடுவார்.
சரியாகக் சொல்ல வேண்டுமானால் அவரின் சொத்து மதிப்பு 132ஆவது நாளில் அவருடைய சொத்து மதிப்பு 137.09 பில்லியன் டாலராக இருக்கும்.
ஒருவேளை எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு போலவே தினமும் 0.3643 பில்லியன் டாலர் சரிந்து, கெளதம் அதானியின் சொத்து மதிப்பு தினமும் 0.1219 பில்லியன் டாலர் அதிகரித்தால், அடுத்த 33 நாட்களுக்குள் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 124.98 பில்லியன் டாலராக சரியும்.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து 0.1219 பில்லியன் டாலர் என தினமும் அதிகரித்தால் அதே 33 வது நாளில் சொத்து மதிப்பு 125.02 பில்லியன் டாலராக அதிகரிக்கும்.
ஆக 33 நாட்களில் (கிட்டத்தட்ட அடுத்த ஐந்து வார காலத்துக்குள்) கௌதம் அதானி உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்கிற பெருமையை எட்டிப் பிடிப்பார்.
இது ஒரு கணிப்பு தான். ஆனால் எலான் மஸ்க் தன் நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி, டெஸ்லா நிறுவனம் தொடர்பாக ஏதாவது நல்ல செய்தி வெளியிட்டு, டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தால், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சட்டென அதிகரித்துவிடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust