Gautam Adani's Collapse hit India's green energy dreams?
Gautam Adani's Collapse hit India's green energy dreams? Twitter
இந்தியா

கெளதம் அதானி : சரிவு இந்தியாவின் இந்த துறையை எப்படி பாதிக்கும் தெரியுமா? விரிவான தகவல்கள்

NewsSense Editorial Team

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, இரு ஆண்டுகளுக்கு முன், மிகப்பெரிய பசுமை எரிசக்தி திட்டங்கள் மற்றும் இலக்குகளை முன்வைத்தார்.

2070ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு (Net Zero Carbon Emission) நிலையை அடையும் அல்லது கார்பன் சமநிலை (Carbon Neutral) அந்தஸ்தை அடையும் என்று கூறினார்.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், இந்தியாவுக்கு தேவையான எரிசக்தியில் பாதியை மரபுசாரா ஆற்றலில் இருந்து பெறவிருப்பதாகவும் உறுதியளித்தார் மோடி.

உலக அளவில் மின்சாரத்திற்கான தேவை மற்றும் உமிழ்வு மேற்கத்திய நாடுகளை விட இந்தியா குறைவாக இருந்தாலும், உலக அளவில் பசுமை இல்லா வாயுக்கள் வெளியிடுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இப்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின், பசுமை எரிசக்தி திட்டத்தில், ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த கௌதம் அதானிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

இந்த கௌதம் அதானியின் அதானி குழுமம் தான் இன்று இந்தியாவில் துறைமுகம் முதல் எரிசக்தி வரை பல துறைகளில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அதானி குழுமத்திற்குச் சொந்தமான ஏழு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. அதில் அதானி கிரீன் எனர்ஜி என்கிற நிறுவனமும் ஒன்று.

120 பில்லியன் டாலர் சரிவு

பசுமை எரிசக்தி துறையில் கௌதம் அதானி சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் உயர்த்தர பேட்டரிகள், சோலார் பேனல் தகடுகள், காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் போன்ற திட்டங்களில் பணம் செலவழிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, அதானி குழுமம் பல்வேறு பங்குச் சந்தை மோசடிகளைச் செய்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்துக்கு எதிராக வைத்தது.அதானி குழுமமோ அக்குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்து, இது இந்தியா மீதான தாக்குதல் என பதிலளித்தது.

எது எப்படியோ…, அதானி குழுமத்துக்குச் சொந்தமான பங்குகளின் மதிப்பு சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சரிந்துள்ளது. இது, இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையிலும், எரிசக்தி தொடர்பாக இந்தியா வைத்திருக்கும் இலக்கை அடையும் பாதையிலும் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

நிறுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எண்ணெய் & எரிவாயு நிறுவனமான டோட்டல் எனர்ஜீஸ், அதானி குழுமத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் ஏற்கனவே 3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

தற்போது மேற்கொண்டு செய்யவிருந்த 4 பில்லியன் டாலர் முதலீட்டை நிறுத்தியுள்ளது. அதானி குழும விவகாரத்தில் ஒரு தெளிவு ஏற்பட்ட பிறகு முதலீடு குறித்து பார்த்துக் கொள்ளலாம் என டோட்டல் எனர்ஜீஸ் கருதுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதானி விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் இந்தத் தேக்கம், இந்தியாவின் காலநிலை தொடர்பான திட்டங்களை பாதிக்குமா பாதிக்காதா என்று இப்போதே கணிப்பது சரியாக இருக்காது, இன்னும் கொஞ்ச காலம் போனால் தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறார்கள் காலநிலை மாற்ற விவகார நிபுணர்கள்.

பசுமை எரிவாயு துறையில் அதானி குழுமம் ஒரு பெரிய நிறுவனம்தான். அந்த நிறுவனத்திற்கு மேற்கொண்டு உரிய உரிமைகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்.

அவர்களால் மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என்றால், அது அந்தக் குழுமம் திட்டமிட்டு இருந்த பசுமை எரிசக்தி முதலீடுகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் எனர்ஜி எகனாமிக்ஸ் அண்ட் ஃபைனான்ஷியல் அனாலிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விபூதி கார்க்.

ஆனால் மரபுசாரா எரிசக்தித் துறையில் காட்டப்படும் ஆர்வமும் வேகமும் தொடரும் என்றும் சுட்டிக் காட்டியுள்லார் விபூதி கார்க்.

இந்தியாவில் மின்சாரத் தேவை

வரும் தசாப்த காலங்களில், இந்தியாவில் ஏற்பட இருக்கும் எரிசக்தி மாற்றம் தான் உலக அளவில் ஏற்படவிருக்கும் மிகப்பெரிய எரிசக்தி மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தப் பறந்து விரிந்த நாட்டில் வெப்ப அலை போன்ற மிக கடுமையான காலநிலை மாற்றங்களும் நிகழ்கின்றன. அதுபோக மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த பல தரப்பிலிருந்தும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தியாவில் மின்சாரத்துக்கான தேவை இன்னும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சாரத்திற்கான தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலக அளவில் நிலக்கரியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. அதே போல நிலக்கரியை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலிலும் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 75 சதவீத மின்சாரம், நிலக்கரி எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கொண்டு புதிய நிலக்கரி ஆலைகளும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இப்படி ஒரு சூழலில், வரும் 2070ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை அடைய வேண்டுமானால், இன்றிலிருந்து 2030ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட வேண்டும் என பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இது, இன்று நாம் மேற்கொள்ளும் முதலீடுகளைப் போல 3 மடங்கு அதிகம்.

அதானி

கெளதம் அதானி தவிர வேறு யார் இருக்கிறார்கள், மேற்கொண்டு யார் தேவை?

கௌதம் அதானியின், அதானி குழுமத்தை தவிர, பசுமை எரிசக்தி துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறது. ரிலையன்ஸ் பசுமை எரிசக்தித் துறையில் சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. டாடா குழுமமும் பசுமை எரிசக்தியில் முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பார்க்கும் போது, இதெல்லாம் போதாதென நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்ய, நமக்கு நிறைய தனியார் நிறுவனங்கள் களத்தில் தேவை. ஒரு சில பெரிய நிறுவனங்களும், நிறைய சிறு நிறுவனங்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்கிறார் சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் என்கிற அமைப்பைச் சேர்ந்த அஸ்வினி கே ஸ்வயின் (Ashwini K Swain).

இந்தியாவின் பசுமை எரிசக்தித் துறையில் களமிறங்கி பணியாற்றும் அளவுக்கு நிறைய உள்நாட்டு நிறுவனங்கள் வளர வேண்டும். இரு பெரிய பிரமாண்ட நிறுவனங்களோடு, 6 - 7 நிறுவனங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது என்கிறார் அஸ்வினி.

தற்போது அதானி குழுமம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு இருக்கும் நேரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற மரபுசாரா எரிசக்தி கம்பெனிகள் முன்வர வேண்டும் என்கிறார் கிளைமெட் எனர்ஜி ஃபைனான்ஸ் அமைப்பைச் சேர்ந்த டிம் பக்லி.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி சுமார் 400 ஜிகா வாட். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மட்டும் 500 ஜிகாவாட் மரபுசாரா எரிசக்தி முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது இந்தியா.

இதுநாள் வரை தன்னுடைய மின்சாரத் தேவைகளுக்கு நிலக்கரி, கச்சா எண்ணெய்யை அதிக அளவில் பயன்படுத்தி வந்த இந்தியா, மேற்கூறிய இலக்கை அடைவது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த சவால் நிறைந்த சூழலை, அதானி போன்ற ஒரு பெரிய பசுமை எரிசக்தித் துறை கம்பெனி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், தான் கொடுத்த வாக்குறுதிகளை இந்தியா நிறைவேற்றுமா..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!