சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்தில் கணக்கு வழக்கு முறைகேடுகள், அதானி குழும பங்குகளின் விலையை தங்கள் இஷ்டப்படி கையாளுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மோசடிகள்… பலதும் செய்யப்பட்டு இருப்பதாக ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியது.
தங்களுடைய அறிக்கையின் அடிப்படையில், ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக ஷார்ட் பொசிஷன் எடுத்திருப்பதாகவும் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.
பொதுவாக பங்குச் சந்தையில் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதையே பலரும் குறிப்பிடுவர். இதை லாங் பொசிஷன் என்று கூறுவர். உதாரணத்திற்கு ஒரு பங்கின் விலை 100 ரூபாயாக இருக்கிறது அதை ஒரு முதலீட்டாளர் வாங்கி சில பல மாதங்களுக்கு பிறகு 120 ரூபாய்க்கு விற்கிறார் என்றால் அவருடைய லாபம் 20 ரூபாய். இது லாங் பொசிஷன். சுருக்கமாக முதலில் பங்குகளை வாங்கிவிட்டு, தாங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் விலைக்கு பிற்காலத்தில் விற்பது லாங் பொசிஷன்.
ஒரு நபர் இன்று பங்குச் சந்தையில் 150 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் பங்குகளைக் கையில் இல்லாமலேயே விற்று விடுகிறார். கையில் இல்லாத பங்கை விற்கிறார் என்றால் ஏதோ ஒரு காலகட்டத்தில் யாரிடமிருந்தாவது ஏதோ ஒரு விலைக்கு அந்த நிறுவனப் பங்குகளை வாங்கியே ஆக வேண்டும். ஒரு சில மாதங்களுக்கு பிறகு அவர் விற்ற பங்கின் விலை 100 ரூபாயாக இருக்கிறது, அதை அவர் வாங்கிக் கொள்கிறார் என வைத்துக் கொண்டால், இவருடைய லாபம் ஐம்பது ரூபாய். இதை ஷார்ட் செல்லிங் என்பர். சுருக்கமாக கையில் பங்குகளே இல்லாமல் முதலில் பங்குகளை விற்றுவிட்டு காலப்போக்கில் பங்குகளை வாங்குவது ஷார்ட் செல்லிங்.
இதைத் தான் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனமும் அதானி குழுமத்துக்கு எதிராகச் செய்திருக்கிறது. அதாவது தற்போது அதிக விலையில் இருக்கும் அதானி குழுமப் பங்குகளை தொடக்கத்திலேயே விற்று விட்டது.
நாளடைவில் எப்போது அதானி குழுமப் பங்குகளின் விலை அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தரை தட்டுகிறதோ அன்று அதானி குழும பங்குகளை வாங்கிக் கொள்வர். தொடக்கத்தில் விற்ற விலைக்கும், பிற்காலத்தில் வாங்கப் போகும் விலைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமே ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் லாபமாக இருக்கும்.
ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் வெளியான நாள் முதல் தொடர்ந்து அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் விலை சரிந்து கொண்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேதன் ஆண்டர்சன் என்பவரால் கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில், கார்ப்ரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகளை தடயவியல் ரீதியில் ஆராய்ந்து பொதுவெளிக்கு கொண்டு வரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டதுதான் ஹிண்டன்பெர்க் ரிசர்ச்.
நிறுவனங்களின் கணக்கு வழக்கு முறைகேடுகள், தவறான நபர்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பது, கம்பெனி தொடர்பான பரிமாற்றங்கள் ரகசியமாக வைக்கப்படுவது அல்லது பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது, முறைகேடாக வியாபாரம் செய்வது, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு தரப்பை ஏமாற்றி ஒரு நிறுவனத்திற்குள் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்… போன்ற பிரச்னைகளை இவர்கள் ஆராய்ந்து பொதுவெளியில் அறிக்கையாக வெளியிடுகிறார்கள்.
Hindenburg வான்கப்பல் போல மனிதர்களால் உருவாக்கப்பட்டு நிகழக் காத்திருக்கும் விபரீதங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பதும், அதற்கு எதிராக முதலீடுகளை மேற்கொள்வதும் தான் இந்த ஆய்வு நிறுவனத்தின் நோக்கமாக இருப்பதால், Hindenburg Research என்று பெயர் வைத்தார்களாம்.
கனெக்டிகட் பல்கலைக்ககழகத்தில் சர்வதேச வணிகப் பிரிவில் தன் பட்டப் படிப்பை நிறைவு செய்த நேதன், ஃபேக்ட்செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் இன்க் (FactSet Research Systems Inc) என்கிற நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். அங்கு பல முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
Bernie Madoff's என்கிற போலி நிதித் திட்டத்தை நடத்தி அமெரிக்காவில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்து சிறையில் அடைக்கப்பட்டவரைக் குறித்து படித்திருப்பீர்கள். அவருடைய ஊழல் திட்டங்களை அம்பலப்படுத்திய Harry Markopolos என்பவரை தன் முன் மாதிரியாகக் கொண்டு நேதன் ஆண்டர்சன் செயல்படுவதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
தங்களுடைய ஆராய்ச்சியின் அடிப்படையில், கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்களின் முறைகேடுகளை பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உதாரணமாக நிகோலா என்கிற மின்சார டிரக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளைக் கூறலாம்.
தொழில்நுட்ப விவகாரங்களில் நிகோலா டிரக் நிறுவனம் தன் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறியது. நிகோலா நிறுவனம் தயாரித்த டிரக் அதிவேகமாகப் பயணிப்பது போன்ற காணொளி உண்மையானது தானா என நேதன் ஆண்டர்சன் கேள்வி எழுப்பினார்.
அதோடு, நிகோலா டிரக் ஒன்று மலையில் இருந்து உருண்டு விழுந்ததாகவும் பிற்காலத்தில் தெரிய வந்தது. இது, நிகோலா நிறுவனம், தன் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து பல பங்குச் சந்தை தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன.
கடந்த ஆண்டு, நிகோலா நிறுவனர் ட்ரெவர் மில்டன் குற்றவாளி என அமெரிக்க ஜூரி தீர்ப்பளித்தார். அதே போல அமெரிக்காவின் பங்குச் சந்தையை நெறிமுறைப்படுத்தும் எஸ் இ சி அமைப்புக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலரைச் செலுத்தி இந்த பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது நிகோலா நிறுவனம்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு கொஞ்ச காலத்திலேயே சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொட்டது. அப்போது அது ஃபோர்ட் நிறுவனத்தை விட அதிகம் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால், முதலீட்டாளர்களை ஏமாற்றிய பிரச்னைகளைத் தொடர்ந்து தற்போது, இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.34 பில்லியன் டாலராக இருக்கிறது. இதில் பெரிய லாபம் பார்த்த வெகு சிலரில் அல்லது வெகு சில நிறுவனங்களில் ஹிண்டர்பெர்க் ரிசர்ச் நிறுவனமும் ஒன்று.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust