Tata Group  Twitter
இந்தியா

டாடா டூ டாபர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே செயல்பட்டு வரும் 11 நிறுவனங்கள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இந்திய பொருளாதாரத்திற்கு கணிசமாகப் பங்களித்து வந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உலகின் பல நாடுகளில் சிறிதும் பெரிதுமாக தமிழர்கள் தொழில் செய்து வந்தனர்.

Gautham

சில தினங்களுக்கு முன்புதான் இந்தியா தன்னுடைய 75வது சுதந்திர தினத்தை பெருமிதத்தோடு கொண்டாடியது.

உலகின் ஏழாவது மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடு, மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய நாடு, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம்... என பல சிறப்புகளை கொண்ட இதே இந்தியாவில் தான் பல தனியார் நிறுவனங்கள் சுதந்திரத்திற்கு முன்பு இருந்து இந்தியாவுக்காகவும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கின்றன.

அப்படி சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியாவிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் சில டாப் நிறுவனங்களின் பட்டியல் இதோ.

டாடா குழுமம் 1868

ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா என்கிற ஒரு தனி மனிதர் 1868 ஆம் ஆண்டு டாடா குழுமத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று வரை டாடா குழுமம் தான் கொண்ட கொள்கையில் கொஞ்சம் கூட பின் வாங்கவில்லை.

இந்தியாவையும் இந்திய பொருளாதாரத்தையும் முன்னேற்ற வேண்டும், இந்தியர்கள் அறிவியல் உலகில் சிறந்து விளங்க வேண்டும், தொழில் மூலமும் பொருளாதாரங்கள் மூலமும் பணம் ஈட்டும் குழுமம் இந்திய சமூகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என எல்லாவற்றையும் செய்து வருகிறது.

ஒரு தனியார் டிரேடிங் நிறுவனமாக தொடங்கப்பட்ட டாடா குழுமம், பின்னாளில் இந்தியாவில் முதல் சொகுசு ஹோட்டலான தாஜைக் கட்டியது. பிறகு இரும்பு தொழிற்சாலையை கட்டமைத்தது. அதன்பின் ஆட்டோமொபைல் துறையில் கால் எடுத்து வைத்தது. இப்படியே மெல்ல ரசாயனங்கள் தொடங்கி ஏவியேஷன், விமான போக்குவரத்து வரை எல்லா துறைகளிலும் தன் கிளையைப் பரப்பியது.. இன்று வரை டாடா குழுமம் ஈட்டும் லாபத் தொகையை மீண்டும் இந்த சமூகத்திற்கு மருத்துவ வசதிகள் கல்வி உதவித்தொகை என பல நல்ல திட்டங்கள் மூலம் செலவழித்து வருகிறது. ரத்தன் டாடா உட்பட டாடா குழுமத்தைச் சேர்ந்த எவரும் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடிப்பதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டாபர் 1884

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் 1884 ஆம் ஆண்டு டாக்டர் எஸ் கே பர்மன் என்பவரால் ஒரு சிறிய மருந்து கடையாக தொடங்கப்பட்ட டாபர் இந்தியா என்கிற நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய எஃப் எம் சி ஜி (FMCG) நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் டாப் எஃப் எம் சி ஜி நிறுவனங்கள் பட்டியலில் டாபர் இந்தியாவுக்கு நான்காவது இடம்.

டாபர் இந்தியா நிறுவனம் உலகில் சுமார் ஐந்து நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியா, ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்... என பல நாடுகளில் டாபர் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா... என பல கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு தன் பொருட்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது டாபர் குழுமம்.

பிர்லா குழுமம் 1857

பேச்சு வழக்கில் நாம் யாரையாவது கண்டிக்கவோ திட்டவோ பயன்படுத்தும் போது கூட நீ என்ன டாடாவா அல்லது பிர்லாவா என்று சொல்வதை பார்த்திருப்போம். இல்லை என்றால் நாமே கூட அப்படி குறிப்பிட்டு இருப்போம். அந்த அளவுக்கு டாடா மற்றும் பிர்லா ஆகிய இரு குடும்பங்களும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் இந்தியாவில் தொழில் செய்யத் தொடங்கி இன்று வரை தங்களை இந்திய தொழில் துறையில் வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள குழுமம் இது.

ஷிவ் நாராயண் பிர்லா என்பவரால் 1857 ஆம் ஆண்டு ஒரு பருத்தி டிரேடிங் நிறுவனமாக தொடங்கப்பட்ட பிர்லா குழுமம் பின்னாளில் சுதந்திரப் போராட்டத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்த கன்ஷியாம் தாஸ் பிர்லா என்பவரால் மிகப்பெரிய அளவில் விரிவாக்கப்பட்டது. ஜி டி பிர்லா என செல்லமாக அழைக்கப்படும் இவரால் தான் பிர்லா குழுமம் டெக்ஸ்டைல், ஃபைபர், அலுமினியம், சிமெண்ட், ரசாயணம் என பல துறைகளில் கால் பதித்தது.

இன்று குமார் மங்கலம் பிர்லா என்பவர் பிர்லா குழுமத்தை நிர்வகித்து வருகிறார். அக்குழுமம் இன்று கிட்டத்தட்ட 36 நாடுகளில் தன் வியாபாரத்தை செய்து வருகிறது. பிர்லா குழுமத்தின் மொத்த வருவாயில் சுமார் 50 சதவீத வருவாய் வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 1892

இந்த பெயரை கேட்டதுமே இது ஒரு பிரிட்டன் நிறுவனம் என பலர் நினைக்க வாய்ப்புண்டு ஆனால் உண்மையில் இது ஒரு இந்திய நிறுவனம். 1892 இல் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் இன்று வரை அதனுடைய பிரமாதமான பிஸ்கட்டுகளுக்காக நினைவு கூறப்படுகிறது. இன்றும் இந்தியர்களின் தேநீர் நேரங்களில் பிரிட்டானியாவின் பிஸ்கெட்டுகள் அழகாக்கிக் கொண்டிருக்கின்றன.

இன்று சென்னை மும்பை டெல்லி கொல்கத்தா உத்தராகண்ட் போன்ற பல இடங்களில் தன்னுடைய பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது பிரிட்டானியா. ஒரு சாக்லெட் பேக்கெட் குட் டே பார்சல்.

கோத்ரேஜ் 1897

ஒரு சாதாரண பூட்டு நிறுவனமாக 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று பீரோ, ரியல் எஸ்டேட், வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருட்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ், விவசாயப் பொருட்கள்... என பல தளங்களில் தன் வியாபாரத்தை விரிவாக்கியுள்ளது.

நீல்கிரிஸ் 1905

இந்த பட்டியலில் தமிழர்களே இல்லையா என நம் வருத்தத்தை போக்க முதலில் உள்ளே வருகிறார் எஸ் ஆறுமுக முதலியார். 1905 ஆம் ஆண்டு ஆறுமுகம் என்பவர் தென் இந்தியாவில் நீல்கிரிஸ் என்கிற பெயரில் ஒரு கடையைத் தொடங்கினார்.

முதலில் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை மட்டுமே விற்கத் தொடங்கப்பட்ட இந்த கடை, பிற்காலத்தில் மளிகை சாமான் உட்பட பல்வேறு பொருட்களையும் விற்கத் தொடங்கியது. இன்று தமிழகத்தை தாண்டி தென்னிந்திய முழுக்கவே பல கிளைகளை பரப்பி உள்ளது.

2007 - 08 காலகட்டத்தில் ஒரு பிரிட்டன் நிறுவனம் நீல்கிரிஸ் நிறுவனத்தில் 51% பங்குகளை வாங்கியது. பிறகு 2014 ஆம் ஆண்டு ஃப்யூச்சர் குழுமம் அந்த பிரிட்டன் நிறுவனத்தையே வாங்கியது. தற்போது ஃபியூச்சர் ரீடைல் நிறுவனம் தான் நீல்கிரிஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக இருக்கிறது.

ரூ ஆப்ஸா 1907

தென்னிந்தியர்களுக்கு ரூ ஆப்ஸா என்பது அத்தனை பிரபலம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் வட இந்தியாவில் இன்று வரை ரூ ஆப்ஸா ஒரு பிரபலமான சர்பத் பானம். 1907 ஆம் ஆண்டு ஹக்கீம் அப்துல் மஜீத் என்பவரால் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஹம்தார்த்.

பின்னாளில் ஹந்தாரது நிறுவனம் ரூ ஆப்ஸா ஆனது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஹக்கீம் அப்துல் மஜீத்தின் குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இந்தியாவிலேயே தங்கிய குடும்பம் ஹம்தார்த் என்கிற நிறுவனத்தின் பெயரை மாற்றி, ரூ ஆப்ஸா என்கிற பெயரில் இந்த பானத்தை விற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த குடும்பம் ஹம்தார்த் லெபாரட்டரீஸ் என்கிற பெயரில் பாகிஸ்தானில் ஒரு நிறுவனத்தை தொடங்கியது.

லைசன்ஸ் ராஜாங்கம், 1991 எல் பி ஜி கொள்கை மாற்றங்கள், சர்வதேச குளிர்பான கம்பெனிகள், இன்று ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் டெட்ரா பாக்கெட் ஜூஸ்கள்... என எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மக்களின் விருப்பமான பானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ரூ ஆப்ஸா.

டி வி எஸ் குழுமம் 1911

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இந்திய பொருளாதாரத்திற்கு கணிசமாகப் பங்களித்து வந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உலகின் பல நாடுகளில் சிறிதும் பெரிதுமாக தமிழர்கள் தொழில் செய்து வந்தனர். ஆனால் இந்திய அளவில் பெருநிறுவனங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் டிவிஎஸ் குழுமத்தைக் கூறலாம்.

மலிவு விலை இருசக்கர வாகனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களில் இன்று வரை டிவிஎஸ் குழுமத்திற்கென ஒரு தனி இடம் உண்டு. டிவிஎஸ் 50 நினைவிருக்கிறதா... அப்படிப்பட்ட மொபெட் என்று அழைக்கப்படும் இருசக்கர வாகனங்களை இன்று வரை டிவிஎஸ் தயாரித்து வருகிறது. டிவிஎஸ் எக்ஸ் எல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

பார்லி 1929

இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்து சுதந்திர தாகம் அதிகரிக்க தொடங்கியது. 1920கள் மற்றும் 30 களில் இந்தியா முழுக்க ஸ்வராஜ்யம், சுதேசி போன்ற தத்துவங்களும் கருத்தியல்களும் தீவிரமாகப் பரவத் தொடங்கின. சாதாரண மக்கள் கூட உணர்வுபூர்வமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க தொடங்கினர், குறைந்தபட்சம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை மறைமுகமாகவாவது காட்டத் தொடங்கினர்.

மோகன்லால் தயாள் என்பவர் 1920 களில் ஜெர்மனிக்கு சென்று பேக்கிங் போன்ற இனிப்பு உணவு தயாரிக்கும் கலையையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்தார்.

அப்படி 1929 ஆம் ஆண்டு மோகன்லால் தயாள் என்பவர் மும்பையில் பார்லி என்கிற பகுதியில் ஒரு இனிப்பு தயாரிப்பகத்தை விலைக்கு வாங்கினார். ஒரு நிறுவனத்தை வாங்கி கடகடவென என்ன தயாரிப்பது, எதை தயாரிப்பது, எவ்வளவு தயாரிப்பது போன்ற விஷயங்களில் எல்லாம் கவனம் கொடுத்தவர்கள்... அந்த நிறுவனத்துக்கு என்ன பெயரிட வேண்டும் என கடைசியாகத் தான் யோசித்தனர். அப்போதுதான் தங்களுடைய உற்பத்தியகம் இருக்கும் இடமான பார்லியையே தங்கள் நிறுவனத்தின் பெயராக வைத்துக் கொண்டனர்.

முதல் முதலில் ஒரு ஆரஞ்சு மிட்டாயை தயாரித்தது பார்லி நிறுவனம். அது இந்திய சந்தையில் சக்கை போடு போட, மற்ற நிறுவனங்களும் அவர்களைப் பின் தொடரத் தொடங்கின. இதே நிறுவனம்தான் பின்னாளில் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்கப்படும் பார்லிஜி என்கிற தன்னுடைய பிஸ்கட்டை தயாரித்தது. இன்று இந்திய அளவில் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனங்கள் பட்டியலில் பார்லிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

சிப்லா 1935 ஆம் ஆண்டு

1935 ஆம் ஆண்டு டாக்டர் கே ஏ ஹமீத் என்பவரால் இந்தியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிறுவனங்களில் ஒன்றான சிப்லா தொடங்கப்பட்டது. மருந்துகளை தயாரிக்க தேவையான முக்கிய ரசாயனங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த இந்த நிறுவனம், 1944 ஆம் ஆண்டு உலக தரத்திலான பரிசோதனை கூடங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளை மும்பையில் நிறுவியது. இன்று உலகில் கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் தங்களுடைய மருந்துகளை விற்பனை செய்து வருகிறது சிப்லா நிறுவனம்.

மஹிந்திரா குரூப் 1945

ஜெகதீஷ் சந்திர மகேந்திரா, கைலாஷ் சந்திர மஹிந்திரா, மாலிக் குலாம் முஹம்மத் என மூன்று பேர் சேர்ந்து இந்தியாவில் 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தான் மஹிந்திரா. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், சைக்கிள்... என பல வாகனம் சார்ந்த நிறுவனங்களை மஹிந்திரா நடத்தி வருகிறது. தற்போது ஆனந்த் மஹிந்திரா இதன் தலைவராக பொறுப்பில் இருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?