Covid 19 Twitter
இந்தியா

கொரோனா : இந்தியப் பொருளாதாரம் பாதிப்புகளிலிருந்து மீள 15 ஆண்டுகள் ஆகலாம் - RBI அறிக்கை

மீண்டு வருவது மற்றும் மறுகட்டுமானம் செய்வது தான் இந்த அறிக்கையின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் படி, இந்தியா தற்போது ஏழு முக்கிய பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது மத்திய ரிசர்வ் வங்கி.

NewsSense Editorial Team

இந்தியப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார மந்தநிலையில் தொடங்கி கொரோனா வைரஸ் பிரச்சனை வரை ஒட்டுமொத்த பொருளாதாரமே ஸ்தம்பித்தது வரை இதில் அடங்கும்.

கொரோனாவிலிருந்து இந்தியா உட்பட உலக நாடுகள் மீண்டு கொண்டிருக்கும் வேளையில், விலை வாசி, பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், உக்ரேன் ரஷ்யா போர் என பல்வேறு காரணிகளால், கொரோனா பெருந்தொற்ரு பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை.

கடந்த ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை அன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

'ரிப்போர்ட் ஆன் கரன்ஸி அண்ட் ஃபைனான்ஸ் 2021 - 22' என்கிற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில் இந்தியப் பொருளாதாரம் குறித்துப் பல முக்கிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Lockdown

இந்தியப் பொருளாதாரம் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீள சுமார் 15 ஆண்டுக்காலம் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது ஒட்டுமொத்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டு வருவது மற்றும் மறுகட்டுமானம் செய்வது தான் இந்த அறிக்கையின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியா தற்போது ஏழு முக்கிய பொருளாதார விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது மத்திய ரிசர்வ் வங்கி.

இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் தேவை, விநியோகம், அமைப்புகள், இடைத்தரகர்கள் மற்றும் சந்தைகள், மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கொள்கைகள் ஒருங்கிணைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றம், அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவையே அந்த ஏழு முக்கிய பொருளாதார காரணிகள்.

அதேபோல இந்தியப் பொருளாதாரம் ஒரு வலுவான மற்றும் நிலைத்த வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டுமானால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிலையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Corona

அதோடு ஜெனரல் கவர்மெண்ட் கடன் (General Government Debt) என்றழைக்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் ஒட்டுமொத்த கடன் அளவு இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 66 சதவீதத்திற்கும் குறைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வர வேண்டும், அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த சில ஆண்டுகளில் வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதை உறுதி செய்ய அவசியமானதாகிறது.

தொழில் முனைவோர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்தியப் பொருளாதாரத்தை வெறுமனே பெரிய ஏற்ற இறக்கங்கள் இன்றி நிலைநிறுத்துவது மற்றும் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்த அளவுக்குக் கொண்டு செல்வது மட்டும் போதாது என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

2020 - 21 காலத்தில் 6.6% பொருளாதாரம் வளர்ந்தது, 2021 - 22 ஆண்டுக் காலத்தில் 8.9%, 2022 - 23 காலகட்டத்தில் 8.2 சதவீதம் வளரும் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 7.5% வளரும் என்றால் கூட... கொரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் சமாளித்து மீண்டும் அதே நிலையை எட்டிப் பிடிக்க 2034 - 35 வரை கால அவகாசம் தேவைப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 - 24 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் 6.3 சதவீதம் வளர்ச்சி காணும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால் சர்வதேச பன்னாட்டு நிதியமோ தன்னுடைய சமீபத்தைய உலக பொருளாதார அவுட்லுக் அறிக்கையில் அதே 2023 - 24 காலகட்டத்தில் இந்தியா 6.9 சதவீதம் வளர்ச்சி காணும் என கணித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தில் பணக் கொள்கைகள் மற்றும் நிதிக் கொள்கைகளை மறு சீரமைப்பது மற்றும் மறு சமநிலைப்படுத்துவதுதான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என ஆர்பிஐ தரப்பு கூறுகிறது.

எது எப்படியோ, விரைவாக இந்தியப் பொருளாதாரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, விலைவாசிகள் கட்டுக்குள் வந்தால் நம்மைப் போன்ற வெகுஜன மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட முடியும். விரைவில் நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?