நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 23). இந்திய தாய் திருநாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என பலரும் பல வகைகளில் போராடினர். இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்கள் அகிம்சை வழியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்.
அவரோடு முரண்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், ஆயுதப் போராட்டமே ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து விரட்டி அடிக்கும் என நம்பினார்.
அதோடு தான் நம்பிய வழியில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவும் செய்தார். அப்படித் தான் இந்திய தேசிய ராணுவம் கட்டமைக்கப்பட்டது. அப்பேற்பட்ட மாமனிதர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இறந்ததாக பல்வேறு பொது தளங்களில் கூறப்படுகிறது, அவருக்கு நினைவஞ்சலிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு தரப்பினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக நம்புகின்றனர் மற்றொரு தரப்பினரோ நேதாஜி அப்படி இறக்கவில்லை என்கிறார்கள். கிட்டத்தட்ட எட்டு தசாப்த காலங்களுக்கு பிறகும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மம் இப்போதும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
Netaji Subash Chandra Bose’s Life, Politics & Struggle என்கிற புத்தகத்தை முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணா போஸ் அவர்கள் எழுதி வெளியிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்கை குறித்தும், அவருடைய போராட்ட குணம் குறித்தும், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் நிறைய விவரங்கள் தேடித் தேடிச் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய மரணம் தொடர்பாகவும் அப்புத்தகத்தில் ஒரு தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் சரத் சந்திர போஸ். சரத் சந்திர போஸ் அவர்களின் மகன்தான் சிசிர் சந்திரபோஸ். இவருடைய மனைவி தான் கிருஷ்ணா போஸ். கிருஷ்ணா போஸ் 1996 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், நாளடைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தாயார் பிரபாவதி போஸ் அவர்களிடமிருந்து தொடங்கும் இப்புத்தகம், மெல்ல அவருடைய அண்ணி பிபாவதி போஸ் அவர்களுடன் நேதாஜிக்கு இருந்த அன்பை குறித்தும் அவருடைய மனைவி எமிலியோடு இருந்த உறவை குறித்தும் விவரிக்கிறது.
இந்தப் புத்தகம், அப்போது இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களாக இருந்த மகாத்மா காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்களோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இருந்த உறவு முறைகள், சமன்பாடுகள் குறித்தும் தொட்டுச் செல்கின்றன.
மிக முக்கியமாக நேதாஜி அவர்களுக்கும் அவருடைய படையில் இருந்த வீரர்களுக்குமான உறவு குறித்தும் இப்புத்தகத்தில் நிறைய செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. நேதாஜியின் தனிச் செயலராக இருந்த அபித் ஹசன் குறித்த செய்திகளும் இதில் அடக்கம்.
சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உருவாக்கிய ராணுவப்படையில் உள்ள வீரர்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள ஒரு பொது பிரார்த்தனை அறையை கட்டலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்ட போது, அதை நேதாஜி அவர்கள் எதிர்த்ததாகவும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மதம் என்பது மிகவும் ஆழமான ஒரு தனிப்பட்ட விஷயம் என்று நேதாஜி அவர்கள் கருதியதால் பொது பிரார்த்தனை அறைக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
நேதாஜி அவர்களின் மரணம் தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள சிசர் போஸ் ஜப்பான் மற்றும் தாய்பெ (Taipei) நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாகவும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போதும் நேதாஜி அவர்களின் சாம்பல், ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ நகரத்துக்கு அருகிலுள்ள ரெங்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை இந்தியாவிற்கு அனுப்பப்படவில்லை என்றும் ஜெனரல் கடக்குரா (Katakura) என்பவர் கூறியதாகவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் கிருஷ்ணா போஸ்.
இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்த சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய பிறந்த நாளில், அவரை நெஞ்சில் நிறுத்துவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust