செங்கோல் - கொடுங்கோல் - தர்ம தண்டம்- வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் சொல்லும் வேறுபாடுகள் என்ன? Twitter
இந்தியா

செங்கோல் - கொடுங்கோல் - தர்ம தண்டம்: வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் சொல்லும் வேறுபாடுகள் என்ன?

உண்மையிலேயே செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் ஆட்சிப் பீடத்தில் நிறுவப்பட்டதா? இது தொடர்பாக சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளனவா? சோழ மன்னர்களின் ஆட்சிக்கால செங்கோல் போன்றுதான் அந்த செங்கோல் வடிவைக்கப்பட்டதா? நிர்மலா சீதாரமன் சொல்வது போல், தர்ம தண்டமும் செங்கோலும் ஒன்றுதானா?

NewsSense Editorial Team

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் சொல்வது போல், தர்ம தண்டமும் செங்கோலும் ஒன்றுதானா ?


பலநூறு கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, மே 28, ஞாயிற்றுக்கிழமையன்று திறந்து வைக்கிறார். அதற்கு முன்னதாக ஏகப்பட்ட சர்ச்சைகளையும் திறந்துவைத்துவிட்டார்கள்.

’குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை?

சாவர்க்கர் பிறந்த நாளில் ஏன் திறக்க வேண்டும்?

அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவருக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும்!’

இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே, மிகவும் பரபரப்பாகிக் கிடக்கிறது செங்கோல் சர்ச்சை!

'சுதந்திரம் பெற்று, முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றபோது, அவரிடம் கொடுக்கப்பட்ட செங்கோல், அதே மரபு படி பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்படும். அதை, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மோடி நிறுவுவார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

கூடவே, 'சோழர் மன்னர்களின் செங்கோல் பாணியில் 1947-ம் ஆண்டு வடிவைக்கப்பட்ட செங்கோல்' என்றும் அமித் ஷா சொல்ல, 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்' என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் பி.ஜே.பி-யினர்.

இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’’1947ம் வருஷம் ஆட்சி மாற்றத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என நேருவிடம் ஆங்கிலேயர்கள் கேட்டுள்ளனர். உடனே, ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் நேரு. தமிழ்நாட்டின் மிகவும் பழமையான திருவாவடுதுறை ஆதினத்துடன் ராஜாஜி கலந்தாலோசிக்கவே... தர்ம தண்டம் எனப்படும் செங்கோலை உருவாக்கியுள்ளார்கள்’’ என்று தெரிவித்தார்.  



சரி... உண்மையிலேயே செங்கோல் என்பது தமிழ் மன்னர்களின் ஆட்சிப் பீடத்தில் நிறுவப்பட்டதா? இது தொடர்பாக சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளனவா? சோழ மன்னர்களின் ஆட்சிக்கால செங்கோல் போன்றுதான் அந்த செங்கோல் வடிவைக்கப்பட்டதா? நிர்மலா சீதாரமன் சொல்வது போல், தர்ம தண்டமும் செங்கோலும் ஒன்றுதானா?



இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதருமான மணிமாறனிடம் கேட்டபோது, விரிவாகவே பதிலளித்தார்.

''செங்கோல் என்பது தமிழர்களின் வாழ்வியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சங்க காலத்தில் இருந்து இணைந்தே வந்துள்ளது. இதுதொடர்பாக, பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. குறிப்பாக, தமிழர் மரபில் சோழர், சேரர், பாண்டியர் ஆகிய முவேந்தர்களின் ஆட்சிக் காலத்திலும் செங்கோல் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி உள்ளிட்ட நூல்களில் உள்ளன. திருக்குறள், தேவாரம் ஆகிய நூல்களிலும் செங்கோல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோல் என்பதன் பொருள், செம்மையான கோல். நீதி, நேர்மை தவறாமல் ஆட்சி நடப்பதை பறைச்சாற்றும் விதமாகவும். மன்னர்கள் தங்களுக்கு தாங்களே உணர்த்திக்கொள்ளும் விதமாகவும்தான் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.

ஆட்சி-அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட மணிமகுடம், சிம்மாசனம் போன்றவற்றின் வரிசையில் செங்கோலுக்கும் முக்கிய இடமுண்டு. செங்கோல் என்பதற்கு எதிர்சொல், கொடுங்கோல். ஆம், மக்களை மதிக்காமல், நீதி தவறி, சுயலாபத்துக்காக ஆட்சியை நடத்தினால், அது கொடுங்கோல் ஆட்சி. அப்படிப்பட்ட மன்னனை 'கொடுங்கோல் மன்னன்' என்று அழைப்பார்கள். அதற்கும் வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் உள்ளன.  



தொல்காப்பியத்தில்... ’தெரிவுகோல் செங்கோல், அரசர்க்கு உரியன’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ’கோடா செங்கோல், சோழர்தம்  குலக்கொடி’ எனவும்... 'செங்கோல் காட்டி, செய்தவம் புரிந்த' எனவும் மணிமேகலையில் குறிப்படப்பட்டுள்ளது. அதேநூலில்... 'செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சிலப்பதிகாரத்தில்... பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பு குறித்து, ’வளையாத செங்கோல் வளைந்ததே’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  முத்தொள்ளாயிரம் என்ற நூலில்... ‘சீர் ஒழுகி, செங்கொல் செழியர்க்கே’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதுபோல் இன்னும் ஏராளமான சான்றுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி, தற்போதைய செங்கோல் விஷயத்துக்கு வருவோம். நேருவிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செங்கோல், தமிழ் மன்னர்களின் செங்கோல் பாணியில் இல்லை. குறிப்பாக, சோழ மன்னர்களின் செங்கோலை உணர்த்தக்கூடிய அம்சங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. சோழ மன்னர்கால செங்கோல் என்றால், அவர்களுடைய புலி சின்னம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது எந்த உருவமும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதில் நந்தி உருவம் இடம்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள். தங்களுடைய பகைவர்களாக கருதிய, பல்லவர்களின் சின்னம்தான் நந்தி. அதுதான் அந்த செங்கோலில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்கள் நந்தியை கடவுளாக வணங்கினார்களே தவிர, தங்களின் சின்னமாக அடையாளப்படுத்தவில்லை.

'தர்ம தண்டம்' என அழைக்கப்படும் செங்கோல் எனவும் சிலர் பிழையாக சொல்கிறார்கள். செங்கோலும் தண்டமும் ஒன்றல்ல. மடாதிபதிகளின் கையில் இருப்பதே தண்டம். சாதாரணமான ஒரு மரக்குச்சியின் நுனியில் துணி சுற்றப்பட்டிருப்பதற்கு பெயர்தான் தண்டம். ஆனால், செங்கோல் என்பது முழுவதும் உலோகத்தால் செய்யப்பட்டதாகும்.



பழங்கால தமிழ் இலக்கிய நூல்களில், நீதிநெறி தவறாத ஆட்சியை குறிக்கும் வகையில் தண்டம் குறித்து குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், செங்கோலுக்கும் ஆதின மடங்களுக்கும் தொடர்பு உள்ளது. துத்துக்குடி மாவட்டம், பெருங்குளத்தில் செங்கோல் ஆதின மடம் உள்ளது.

பொதுவாக ஆதினங்கள் அனைத்தும் சைவ மடங்களே. நந்தி என்பது சைவத்தை அடையாளப்படுத்தும் ஓர் உருவம். சைவ மடாதிபதிகள்தான் நந்தியைக் கொண்டாடுவார்கள். அந்த வகையில், நந்தி உருவத்துடன் உருவாக்கப்பட்ட அந்த செங்கோல், மடாதிபதிகளின் அறிவுரைக்கேற்பத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ’’ என்று தெரிவித்தார்.

- கு.ராமகிருஷ்ணன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?