நிர்பயா வழக்கு நினைவிருக்கிறதா? 2012 டிசம்பர் மாதம் டெல்லியில் ஒரு பேருந்து பயணத்தின் போது நிர்பயா என்ற மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
சில நாட்கள் கழித்து அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாலும் அங்கே சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்தியாவையே உலுக்கிய இச்சம்பவம் மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளில் ஒருவர் போலிஸ் காவலில் தற்கொலை செய்து கொள்ள, ஒருவர் சிறார் என விடுதலை செய்யப்பட மீதி நான்கு பேரும் 2020ஆம் ஆண்டு திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள். இந்தியாவை மட்டுமல்ல உலகையும் உலுக்கிய வழக்கு இது.
இது போன்ற மற்றொரு வழக்குதான் 1978 ஆம் ஆண்டு நடந்த கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா வழக்கு. இதில் குற்றவாளிகளான பில்லா, ரங்கா இருவரும் 1982 ஆம் ஆண்டு இதே திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள்.
இப்போது நிர்பயா வழக்கு மக்களிடேயே பேசப்பட்டது போல பில்லா, ரங்கா வழக்கும் 70களின் கடைசியிலும், 80களின் ஆரம்பத்திலும் மக்களிடையே பிரபலமாகப் பேசப்பட்ட வழக்காகும். இப்போது போல அப்போதும் ஊடகங்கள் இவ்வழக்கு குறித்துத் தொடர் செய்திகளையும் தலைப்பு செய்திகளையும் வெளியிட்டன.
பில்லாவும், ரங்காவும் சிறிய திருட்டுச் சம்பவங்களைச் செய்யும் கிரிமினல்கள். அவர்கள் மும்பை சிறையிலிருந்து வெளியாகி டெல்லி வந்தனர். 1978 ஆம் ஆண்டில் அவர்கள் டெல்லியில் ஒரு காரில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கீதா சோப்ரா எனும் 16 வயது இளம் பெண்ணும், அவரது 14 வயது தம்பி சஞ்சய் சோப்ராவும் ஒரு கப்பற்படை அதிகாரியின் பிள்ளைகள். அவர்கள் சம்பவம் நடந்த அன்று இந்திய அரசின் வானொலியான ஆகாஷ்வாணிக்கு செல்ல வேண்டியிருந்தது.
அங்கு யுவவாணி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகத் திட்டம். பொதுவாக காரில் லிஃப்ட் கேட்பது போல இந்த இரு பிள்ளைகளும் ஒரு காரில் லிஃப்ட் கேட்டனர். ஆனால் அந்தக் கார் பில்லா, ரங்கா இருந்த கார். இருவருக்கும் லிஃப்ட் கொடுத்த பில்லாவும் ரங்காவும் முதலில் இந்த பிள்ளைகளைக் கடத்தி பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று முதலில் நினைத்தார்கள்.
ஆனால் அந்த இளம் பெண்ணை பார்த்ததும் அவர்களிடம் இருந்த மிருக வெறி விழித்துக் கொண்டது. ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்குக் கொண்டு சென்று அந்த சிறுவனைக் கொடூரமாகக் கொன்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரையும் கொன்று விடுகிறார்கள்.
தமது இராணுவக் குடியிருப்பிலிருந்து பிள்ளைகள் ஆகாஷ்வாணிக்கு சென்று ஏன் திரும்பவில்லை எனத் தந்தை எம்.எம்.சோப்ரா தேட ஆரம்பித்தார். பிறகு போலீசாரிடம் புகார் கொடுக்க, பல மாநில போலீசார் இணைந்து தேட ஆரம்பித்தனர்.
பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரது உடல்களும் கிடைத்தன. பிரேதப் பரிசோதனையில் கீதா சோப்ராவின் உடலில் ஐந்து காயங்களும், சஞ்சயின் உடலில் மொத்தம் 21 காயங்களும் இருந்தன.
பிறகு ஊடகங்களில் செய்தி வர இந்திய அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்னார் என்றால் அந்த சம்பவம் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
இதன் பிறகு பில்லாவும் ரங்காவும் பயந்து டெல்லியை விட்டு மும்பைக்குத் தப்பிச் செல்கிறார்கள். அப்புறம் மும்பையிலிருந்து ஆக்ராவுக்குச் சென்று அங்கிருந்து இறுதியாக டெல்லிக்கு வருகிறார்கள்.
டெல்லிக்கு அவர்கள் வந்த ரயிலில் இருந்த இராணுவ வீரர்களோடு தகராறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள். இப்படியாக அவர்கள் போலீசிடம் பிடிபடுகிறார்கள்.
வழக்கு நடந்து இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. பிறகு உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன.
அவர்களுடைய கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி நிராகரித்தார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் தூக்குத் தண்டனை கைதிகள் வைக்கப்படும் கடுங்காவல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இருவரையும் தூக்கிலிடுவதற்காக ஃபரீத்கோட்டைச் சேர்ந்த ஃபகிரா மற்றும் மீரட்டிலிருந்த காலு ஆகிய இருவரும் வரவழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் அனுபவம் பெற்றவர்கள். தூக்கிலிடுவதற்கான கயிறு பீகாரின் பக்ஸர் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டது.
இறுதியில் 1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி திஹார் சிறையில் இரண்டு கொலைகாரர்களும் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் யாரும் முன்வராததால் சிறையிலேயே எரிக்கப்பட்டது.
இதற்குப் பின்னும் இந்திய ஊடகங்களில் பில்லா, ரங்கா கதைகள் நெடுங்காலம் வந்து கொண்டிருந்தன. இரண்டு இளம் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டது போலவே 2012 இல் நிர்பயாவும் கொலை செய்யப்படுகிறார். இரண்டு இளம் பெண்களும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். இரண்டு நிகழ்வுகளும் இந்திய மக்களிடையே ஆத்திரத்தையும், போராட்டத்தையும் கிளப்பி விட்டன.
ஆனால் ஆண்டுகள் இத்தனை ஆகியும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்பது வெட்கக் கேடு. சட்டமும், போலீசும், சமூகமும் இந்தியப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும் என்பதையே இந்த இரண்டு சம்பவங்களும் காட்டுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust