Captain Lakshmi Sahgal Twitter
இந்தியா

கேப்டன் லட்சுமி சாகல்: துப்பாக்கி ஏந்திய சுதந்திரப் போராளி - யார் இவர்?

Gautham

இந்தியாவிற்கான சுதந்திரத்தை ஆங்கிலேயர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பெற முடியாது. ஆயுதமேந்தினால் தான் இந்திய சுதந்திரம் அடையும் என இந்தியாவிற்கு ஒரு தனி ராணுவத்தை அமைக்க சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பு விடுத்த போது பெயர் கொடுத்த பெண்களில் முன்னோடி கேப்டன் லட்சுமி சாகல்.

ஒரு ராணுவ வீராங்கனையாக தன் வாழ்கையைத் தொடங்கி, மருத்துவராக சேவையாற்றி, மனிதத்தைப் பேசி, மருத்துவ கல்லூரிக்கு தன் உடலை தானம் செய்து உலகைவிட்டுப் பிரிந்த அந்த பெண்மணியைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

மனிதர்கள் அனைவரும் சமம்

1914 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சுவாமிநாதன் மற்றும் அம்மு குட்டி என்கிற தமிழ்நாடு கேரள தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமம் என மிக இளம் வயதிலேயே மனிதத்தின் தத்துவத்தை புரிந்து கொண்டவர்.

சாதிய கட்டமைப்பு அழுத்தமாக கடைபிடிக்கப்பட்டு வந்த கேரளத்தில் வசித்து வந்த போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரோடு பழகக் கூடாது என வீட்டில் இருந்தவர்கள் கூறியதையும் மீறி, மிக இளம் வயதிலேயே ஒரு மலைவாழ் பெண்ணின் கையைப்பிடித்து விளையாடினார். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் கடிந்து கொண்ட போதும், லட்சுமிதான் கடைசியில் வெற்றி பெற்று அப்போதே கலகத் தலைவி ஆனார்.

இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார்

அப்பா மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குரைஞர், அம்மா சமூக சேவகர் மற்றும் சுதந்திரப் போராட்ட செயற்பாட்டாளர்.

குயின்ஸ் மேரி கல்லூரியில் படித்துவிட்டு பின்னாளில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1938 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கச் சேர்ந்தார். இன்று சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை என்று அழைக்கப்படும் அதே மருத்துவமனையில் தான் மருத்துவராக பணியாற்றினார்.

1940களில் சிங்கப்பூருக்கு சென்றவர் அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்த போது அவரை நேரில் சந்தித்து அவருடைய இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர், ஜான்சியின் ராணி படைப் பிரிவுக்கு (பெண்கள் படை) தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது தான் அவருக்கு கேப்டன் பட்டம் கொடுக்கப்பட்டது. லட்சுமி சுவாமிநாதன் கேப்டன் லட்சுமி ஆனார்.

கேப்டன் லட்சுமி சாகல்

1945 காலகட்டங்களில் பல்வேறு போர் நடவடிக்கைகள் காரணமாக பிரிட்டிஷாரால் கேப்டன் லட்சுமி சாகல் கைது செய்யப்பட்டார் சில பல மாதங்களுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சில வலைதளங்கள் சொல்கின்றன.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரேம்குமார் சாகல் என்பவரை லாஹூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார் லட்சுமி சுவாமிநாதன். அன்று முதல் கேப்டன் லட்சுமி, கேப்டன் லட்சுமி சாகல் ஆனார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கான்பூரில் வாழ தொடங்கினர். கேப்டன் லக்ஷ்மி மீண்டும் ஸ்தெத்தஸ்கோப்பை கையில் எடுத்து மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். விளிம்பு நிலை மக்களுக்கு தன்னால் இயன்றவரை சேவை செய்தார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவிற்குள் வந்த பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இலவசமாக மருத்துவ முகாம் அமைத்து உதவினார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இந்தி சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஷாத் அலி இவருடைய பேரன்.

கம்யூனிஸ்ட் தோழராக லட்சுமி சாகல்

சுதந்திரம் 3 வகைப்படும். 1. அரசியல் ரீதியிலான சுதந்திரம், 2. பொருளாதார சுதந்திரம், 3. சமூக சுதந்திரம். இந்தியா அரசியல் ரீதியிலான சுதந்திரத்தை மட்டுமே அடைந்திருக்கிறது என தன் தள்ளாத வயதிலும் தெளிவாகக் கூறியதாக 'தி இந்து' நாளிதழில் குறிப்பிடப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

1971 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. 1971 ஆம் ஆண்டு வங்கதேச நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்குள் வந்து கொண்டிருந்த அகதிகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.

1981 ஆம் ஆண்டு ஆல் இந்தியா டெமாக்ரடிக் உமன்ஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பை நிறுவிய நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

அதேபோல 1984 ஆம் ஆண்டு போபால் நகரத்தில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதல் தொடர்ந்து அங்கும் மருத்துவ முகாம்களை நடத்தி தன்னால் இயன்ற உதவியை செய்தார். 1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியை அவரது சொந்த மெய்க்காப்பாளர்களே சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து இந்தியா முழுக்க சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. கான்பூர் நகரத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தன்னால் முடிந்த வரை களத்தில் இறங்கி போராடினார் அமைதிப் பேச்சு வார்த்தைகளை நடத்தி சமாதானப்படுத்தினார்.

1996 ஆம் ஆண்டு பெங்களூரில் மிஸ் வேர்ல்ட் உலக அழகி போட்டி நடப்பதை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏபிஜே அப்துல் கலாம் முன்மொழியப்பட்டபோது அவரை எதிர்த்துப் இடதுசாரி கட்சிகள் மற்றும் இயக்கங்களால் முன்னிறுத்தப்பட்டு போட்டியிட்ட ஒரே போட்டியாளர் கேப்டன் லட்சுமி சாகல் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு கேப்டன் லட்சுமி சாகலுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் 2010 ஆம் ஆண்டு அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

கேப்டன் லட்சுமி சாகலின் ஒரு இறை நம்பிக்கை இல்லாதவர் என அவருடைய சொந்த மகளே கூறியதாக சில வலைதளக் குறிப்புகளில் பார்க்க முடிகின்றன.

அப்பேற்பட்ட போராளி, கடந்த 2012 ஜூலை 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக செயல்பட முடியாமல் படுக்கையில் கிடத்தப்பட்டு, 2012 ஜூலை 23ஆம் தேதி தன் 97வது வயதில் கான்பூரில் உயிரிழப்பதற்கு ஒரு சில வருடங்கள் முன்பு வரை கூட தன்னுடைய மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

கேப்டன் லட்சுமி சாகல் உயிரிழந்த பிறகும் அவருடைய உடலை தீக்கிரையாக்கவோ, நல்லடக்கம் செய்யவோ இல்லை. அந்த மருத்துவர் தன்னுடைய உடலை கணேஷ் சங்கர் வித்யார்த்தி மெமோரியல் மெடிக்கல் காலேஜ் என்கிற மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு தானம் செய்திருந்தார். கேப்டன் லட்சுமி சாகல் அன்றும், இன்றும், என்றும் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?