மல்லிகார்ஜுன கார்கே Twitter
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கே : காங்கிரஸுக்கு ஒரு தென் மாநில தலைவர் - என்ன மாற்றத்தை ஏற்படுத்துவார்?

Gautham

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் 80 வயதான கர்நாடக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேரளாவைச் சேர்ந்த சசி தரூரை வென்று தலைமைப் பதவிக்கு வந்துள்ளார்.

தற்போது மாநிலங்களவைப் பிரதிநிதியாக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்கு முன் பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர்.

1995 - 96 காலம் வரை தென் இந்தியாவைச் சேர்ந்த பி வி நரசிம்மா ராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தார்.

அவருக்கும் பின் இதுநாள் வரை ஒரு தென் இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கவே இல்லை. கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தென் இந்திய அரசியல்வாதியான மல்லிகார்ஜுன கார்கே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போலக் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராவதும் 24 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல்முறை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஒரு தலித் தலைவராவது பாபு ஜெகஜூவன் ராமுக்குப் பிறகு இதுவே இரண்டாவது முறை என்கிறது இந்தியா டுடே.

யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?

தென் இந்தியாவின் பிரதான மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் ஓரளவுக்கு இன்னும் இந்தியத் தேசிய காங்கிரஸ் செல்வாக்கோடு இருக்கும் மாநிலம் கர்நாடகா. அம்மாநிலத்தின் வலுவான காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே.

1942ஆம் ஆண்டு கர்நாடகாவின் பிடார் மாவட்டத்தில், ஒரு தலித் சமூகத்தில் பிறந்த இவர் குல்பர்கா மாவட்டத்தில் தன் குடும்பத்தினரோடு குடியேறினார். அங்குதான் பள்ளி, கல்லூரி (பி ஏ & இளங்கலை சட்டம்) எல்லாம் படித்தார். தன் தொடக்க நாட்களில் ஒரு லேபர் யூனியன் தலைவராக பொது வாழ்கையில் அடியெடுத்து வைத்தார். படித்த சட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் யூனியன்களுக்கு வாதாடி மெல்ல மக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதித்தார்.

1969ஆம் ஆண்டு முறையாக இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் குர்மித்கல் (Gurmitkal) தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியவர் தேவராஜ் அர்ஸ் தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மல்லிகார்ஜுன கார்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் குர்மித்கல் தொகுதியோ முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களால் நிறைந்த தொகுதி.

தொடக்கத்தில் சற்றே சுணங்கினாலும், சரிப்பட்டு வருமா என தேவராஜ் அர்ஸிடமே பேசினாலும், கட்சித் தலைவரின் பேச்சைத் தட்ட முடியாமல், இளைஞரான மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் முழுவீச்சோடு பிரசாரம் மேற்கொண்டார். தேவராஜ் அர்ஸின் கணக்கு பலித்தது. மல்லிகார்ஜுன கார்கே வென்றார்.

காலப் போக்கில் குர்மித்கல் தொகுதியே அவரது கோட்டையானது. 1972 முதல் 2004 வரை அதே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 8 முறையும் வென்றார். 2008ஆம் ஆண்டு சித்தபூர் சட்டமன்றத் தொகுதியிலும், 2009 & 2014ஆம் ஆண்டுகளில் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் வென்றார். சுருக்கமாக 1972 முதல் 2014ஆம் ஆண்டுவரை மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டினார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே குல்பர்கா தொகுதியில் தோற்றது மட்டுமே மல்லிகார்ஜுன கார்கேயின் ஒரேயொரு தேர்தல் தோல்வி.

மல்லிகார்ஜுன கார்கே தலித் சமூகத்திலிருந்து, அரசியலில் பதவிக்கு வந்தாலும், ஒரு சிறந்த நிர்வாகியாக பல தரப்பினரோடு இணைந்து செயல்பட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்பவர் என்கிறது பிபிசி ஆங்கில வலைதளம்.

1976ஆம் ஆண்டு கர்நாடக மாநில கல்வித் துறை அமைச்சராக பணியாற்றிய போது 16,000 எஸ் சி, எஸ் டி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பி ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத் ராஜ், வருவாய்த் துறை, உள்துறை என பல கர்நாடக அரசாங்கங்களில், பல முதல்வர்களின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவிகளையும் வகித்தவர்.

மத்திய அரசில் கூட ரயில்வே, தொழிலாளர் நலத் துறை போன்ற முக்கிய இலாக்காக்களை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். அரசு அதிகாரிகளோடு நாகரிகமாகப் பேசுவது, பல தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்றாலும் சுயமாக சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது, எதற்கு முன்னுரிமை தர வேண்டும், தரக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருப்பவர் என ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் பிபிசி ஊடகத்திடம் மல்லிகார்ஜுன கார்கே குறித்துப் பேசியுள்ளார்.

மல்லிகார்ஜுக கார்கே முன்னிருக்கும் சவால்கள்?

தான் காந்தி குடும்பத்தின் கைப்பாவை அல்ல என்பதை நிரூபிப்பது தொடங்கி, மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கட்சிக்குள் தக்க வைப்பது, கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப் பூசல்களை சமாளிப்பது, ஒரு தென் இந்தியர், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற முக்கிய இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களையும் அரவணைத்து நிர்வகிப்பது என பல பஞ்சாயத்துகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் சமாளிப்பாரா? காங்கிரஸ் கட்சியில் என்ன மாற்றங்கள் வரும்..? பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?