Rahul Narvekar Twitter
இந்தியா

சிவசேனா டூ பா.ஜ.க : மகாராஷ்டிரா புது சபாநாயகர் ராகுல் நவ்ரேக்கரின் அடடே பயணம்

பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், மிக இளம் வயதில் அவைத்தலைவராகத் தேர்வுபெற்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே வேளை இந்த வயதுக்குள்ளேயே இவரின் அரசியல் பயணம் பல கட்சிகளைக் கண்டுவிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

NewsSense Editorial Team

பரபரப்பான மகாராஷ்டிர அரசியலில் சில நாட்களாக முக்கியமாக அடிபட்டது, நர்வேக்கர் எனும் பெயர். ஆனால், சம்பந்தப்பட்டவர் ஒருவர் அல்ல, இரண்டு பேர்.

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய ஷிண்டே அரசாங்கம் பதவியேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கிலும் வெற்றி பெற்றது. அதில் அதிருப்தி சிவசேனா பக்கம் போய்விட்டார் எனப் பேசப்பட்டவர், உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கையான விசுவாசி மிலிந்த் நர்வேக்கர். அவர் தரப்பில் இதற்கு எந்த மறுப்பும் வராதநிலையில், அந்த ஊகச் செய்திக்கு உயிர் இருந்தபடியே இருந்தது.

ஆனால் கடந்த 3ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தின்போது, அவைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சரும் உத்தவின் மகனுமான ஆதித்ய தாக்கரே மிலிந்துடன் எப்போதும்போல இயல்பாகப் பேசினார். இரண்டு பேரும் அப்படி சர்வசாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்ததே அன்றைய செய்திப் படக் கண்களுக்கு அரிய காட்சியாக அமைந்தது.

இன்னொரு முக்கிய நர்வேக்கர், சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 45 வயதான அவர், இராகுல் நர்வேக்கர்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், மிக இளம் வயதில் அவைத்தலைவராகத் தேர்வுபெற்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே வேளை இந்த வயதுக்குள்ளேயே இவரின் அரசியல் பயணம் பல கட்சிகளைக் கண்டுவிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினராக இருந்துள்ள இராகுல் நர்வேக்கர், கொலாபா சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். இப்போது கட்சி சார்பற்றவராக ஆகிவிட்டாலும், நேற்றைக்கு முன்தினம் காலைவரை இராகுல் ஒரு பா.ஜ.க.காரர்.

இவருடைய அரசியல் நுழைவே சிவசேனா கட்சியில்தான் தொடங்கியது. வழக்குரைஞரான இராகுலின் தந்தை, மும்பை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் நவ்ரேக்கர் என்பவர். அவரைப் போலவே மகனும் சிவசேனா கட்சியில் சேர்ந்தார். 2010ஆம் ஆண்டில் ஆதித்ய தாக்கரேவை அரசியலில் நுழைத்து, யுவசேனா தொடங்கப்பட்ட நேரம் அது. அப்போது அந்த அணியில் ஆதித்ய தாக்கரேவுடன் ஐக்கியமானார், இராகுல்.

யுவசேனாவின் அதிகாரபூர்வப் பேச்சாளர்களில் ஒருவராகவும் இராகுல் நியமிக்கப்பட்டார். அந்தக் கட்சியில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் சில பிரமுகர்களில் இவரும் ஒருவராக ஆனார். அத்துடன் ஆதித்ய தாக்கரே சட்டக்கல்லூரியில் படித்தபோது அவருக்கு உதவியாக இராகுல் இருந்தார். பால்தாக்கரேவின் பேரனுடன் மிக அணுக்கமாக இருந்தபோதும், சிவசேனாவின் உட்கட்சி அரசியலை இராகுலும் எதிர்கொண்டார்.

எதிர்பார்த்தபடி 2009, 2014 மாநிலங்களவைத் தேர்தல்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிலையில், சட்டமேலவைத் தேர்தலில் தன்னுடைய மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டார். ஆனால் அவர் என்னதான் முயற்சி செய்தாலும் தோல்வி அடையவே நேரிடும் என பலரும் கூறியுள்ளனர். அதை முழுக்க நம்பியதால் இராகுல் அந்த முடிவுக்கு வந்திருந்தார்.

சரியாகச் சொல்வதென்றால், அரசியல் வானில் பறக்க நினைத்த அவரின் எண்ணச் சிறகுகளை சிவசேனா தலைவர்கள் வெட்டிவிட்டனர் என்கிற நிலை... தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் இராகுல் நர்வேக்கர். மாவல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். அவரின் இந்த முடிவால் ஆதித்ய தாக்கரே வருத்தம் அடைந்ததாகப் பேசப்பட்டது.

எனினும் அப்போது பா.ஜ.க. அணியில் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைமையுடன் பேசிமுடித்தபடி சட்டமேலவைக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால், 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குத் தாவினார், இராகுல். பழைய கொலாபா தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

மரபுப்படி மூத்த, அனுபவம் வாய்ந்த சட்டப்பேரவை உறுப்பினரையே அவைத்தலைவராக ஆக்குவார்கள் என்றாலும், இராகுலின் சட்டப் பின்னணி இந்தத் தேர்வுக்குக் காரணமாக முன்வைக்கபடுகிறது.

குறிப்பாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரப்புக்கும் அதிருப்தியாளர் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கும் இடையே யார் உண்மையான சிவசேனா எனும் விவகாரம் அடுத்தகட்டமாக பெரும் பிரச்னையாக வந்து நிற்கக்கூடிய நிலையில், அதை நர்வேக்கர் எளிதாகக் கையாள்வார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, இராகுலின் புதிய பதவியேற்பை முன்னிட்டு ஆதித்ய தாக்கரே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் வாழ்த்துச்செய்தியில், “ சட்டப்படிப்பு தேர்வுகளுக்கு முன்னர் தனிப்படிப்புக்காக உங்களிடம் வந்த அந்த நாள்களை நினைத்துப்பார்க்கிறேன். அப்போது தேசிய அரசியலை விவாதிக்க பயனுள்ள காலமாக இருந்தது.

சிவசேனா சார்பிலோ அல்லது தேசியவாத காங்கிரஸும் பாஜக சார்பிலோ நீங்கள் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கச் செல்லும்போது, பலமான ஆளாக உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று சொல்வோம். இப்போது உண்மையில் நீங்கள் எல்லாவகையிலும் மேலான பலமான இடத்தை அடைந்திருக்கிறீர்கள்.” என்று விவரித்துள்ளார்.

பி காம், எல்எல்பி படித்தவரான இராகுல் நர்வேக்கர் சரோஜினி என்பவரைத் திருமணம் செய்தார். அவருடைய அப்பா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் சட்டமேலவைத் தலைவருமான இராம்ராஜே நாயக் நிம்பல்கார். நாயக் நிம்பலார் குடும்பமானது, மகாராஷ்டிரத்தின் முன்னாள் அரச குடும்பங்களில் ஒன்று என்பதும் முக்கியமானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?