ஜமால் கஷோகி ட்விட்டர்
Long Read

ஜமால் கஷோக்ஜி : செளதி மன்னர்களை நடுங்க வைத்த ஊடகவியலாளர் தூதரகத்தில் கொல்லப்பட்ட கதை

2017 காலகட்டத்தில் சவுதி அரேபிய அரசுக்கும் ஜமால் கஷோகிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் இருந்தபடியே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

NewsSense Editorial Team

ஒரு காலத்தில் சவுதி அரேபிய அரசின் ஆலோசகராக இருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, 2018 அக்டோபர் 2ஆம் தேதி துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்த மாதங்களில் ஜமால் கஷோகி ஏன் கொல்லப்பட்டார்? யாரால் கொல்லப்பட்டார்? கொலை செய்யப்பட்ட அவரது உடல் என்ன ஆனது? இந்த கொலைக்கு யார் காரணம்? என்கிற பல கேள்விகளுக்கு பல்வேறு விடைகளும் கருத்துக்களும் கூறப்பட்டன.

ஜமால் கஷோகி

யார் இந்த ஜமால் கஷோகி?

சவுதி அரேபியாவில் பிறந்த ஜமால் கஷோகி, சவுதியிலேயே தன் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். அமெரிக்காவிலுள்ள இண்டியானா மாகாண பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார்.

அதன்பிறகு சவுதி கேசட் (Saudi Gaxette) என்கிற பத்திரிகையில் செய்தியாளராக தன் பணியை தொடங்கினார். நாளடைவில் அராப் நியூஸ் என்கிற பிரபல ஊடகத்தின் டெபுடி எடிட்டர் இன் சீப் பதவியில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ஜமால் கஷோகி சவுதி அரேபிய நாட்டின் உளவுத்துறை முகமைகளோடும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்கிறது விக்கிபீடியா பக்கம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தபோது அமெரிக்காவோடும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமால் கஷோகி

அல் - கொய்தாவின் பிரபல தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சி மற்றும் அமெரிக்கா மீதான தாக்குதல், ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் சோவியத் படையெடுப்பு போன்ற பல முக்கிய சர்வதேச பிரச்சனைகளை குறித்து பல்வேறு செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி பிரபலமடைந்தவர் ஜமால் கஷோகி.

ஒரு கட்டத்தில் சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தினரோடு ஜமால் கஷோகிக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. காலப்போக்கில் சவுதி அரசின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஆனால், 2017 காலகட்டத்தில் சவுதி அரேபிய அரசுக்கும் ஜமால் கஷோகிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.

அமெரிக்காவில் இருந்தபடியே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதி வந்தார். அப்படி செப்டம்பர் 2017 காலகட்டத்தில் எழுதிய ஒரு கட்டுரையில், சவுதி அரேபிய அரசுடனான தன் கருத்து வேறுபாடுகள் காரணமாக தான் கைது செய்யப்படலாம் என அஞ்சுவதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.

ஜமால் கஷோகி

சவுதி அரேபிய தூதரகத்திற்கு ஏன் சென்றார்?

2018 செப்டம்பர் 28-ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு முதன்முறையாக சென்றார் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி.

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹதிஸ் செங்கிஸை (Hatice Cengiz) திருமணம் செய்து கொள்ளவிருந்தார் ஜமால்.

ஜமால் கஷோகி விவாகரத்துப் பெற்றவர் என்று குறிப்பிடும் சவுதி அரேபிய ஆவணம் ஒன்றைப் பெறுவதற்குத் தான், அவர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றார்.

ஜமால் கஷோகி-ஹதிஸ் செங்கிஸ்

அக்டோபர் 2ஆம் தேதி வாருங்கள்:

2018 அக்டோபர் 2ஆம் தேதி ஜமால் கஷோகிக்கு வேண்டிய விவாகரத்து தொடர்பான ஆவணத்தை தயார் செய்து வைப்பதாகவும், அன்று மீண்டும் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தூதரக அதிகாரிகள் ஜமாலிடம் கூறினர்.

அதேபோல ஜமால் கஷோகி தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஹதீஸ் உடன் மீண்டும் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு, உள்ளூர் நேரப்படி அன்று மதியம் 1:14 மணிக்கு சவுதி அரேபிய தூதரகத்துக்குள் சென்றதை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் காட்டுகின்றன.

தூதரகத்துக்குள் செல்லும் நான் திரும்பி வரவில்லை எனில், துருக்கி நாட்டின் அதிபர் ரசீப் தயீப் எர்டோகனின் ஆலோசகரை அழைத்து பேசுமாறு, தன்னுடைய இரு மொபைல் போன்களையும் தன் வருங்கால மனைவி ஹதீஸிடம் கொடுத்து விட்டுச் சென்றார் ஜமால் கஷோகி.

அக்டோபர் 2ஆம் தேதி ஜமால் கஷோகி சவுதி தூதரகத்துக்குள் சென்ற பின், சுமார் 10 மணி நேரம் தன் வருங்கால கணவனுக்காக காத்திருந்தார் ஹதீஸ். அடுத்த நாள் காலையும் இஸ்தான்புல்லில் இருந்த சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்று ஜமாலுக்காக காத்து இருந்தார் ஹஹீஸ். ஆனால் அவர் வெளியே வரவே இல்லை.

ஜமால் கஷோகி செல்லும் CCTV காட்சிகள்

ஜமாலுக்கு என்ன நடந்தது - தொற்றிக் கொண்ட பரபரப்பு:

அக்டோபர் 3ஆம் தேதி சவுதி அதிகாரிகள் ஜமால் கஷோகி காணாமல் போனது தொடர்பாக ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டனர். அந்த செய்தியறிக்கையில் அவர் சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சவுதி அரேபிய தூதரகத்தில் இருந்து அவர் வெளியே வரவில்லை என துருக்கி அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

துருக்கி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் துருக்கி நாட்டுக்கான சவுதி அரேபியாவின் தூதரை அழைத்து ஜமால் கஷோகி மாயமானது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதும் சவுதி தரப்பு ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், மேற்படி தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அதை துருக்கி அரசோடு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தது சவுதி அரேபியா.

ஜமால் கஷோகி சவுதி அரேபிய தூதரகத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார் என்றும், இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றும் ப்ளூம்பெர்க் நேர்காணல் ஒன்றில் கூறினார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான. இந்த நேர்காணல் அக்டோபர் 5ஆம் தேதி ஒளிபரப்பானது.

ஜமால் கஷோகிக்கு ஆதரவாக போராட்டங்கள்

கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்:

இதற்கிடையில் 2018 அக்டோபர் 7 ஆம் தேதி துருக்கி நாட்டின் அதிபர் ரசீப் தயிப் எர்டோகனின் ஆலோசகர் யாசின் அக்டாய் (Yasin Aktay), ஜமால் கஷோகி சவுதி அரேபிய தூதரகத்திற்கு உள்ளேயே வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தான் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். மேலும் இதில் 15 பேர் கொண்ட ஒரு பெரும்படையே ஈடுபட்டிருக்கலாம் என்றும் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

ஜமால் கஷோகியை கடத்துவதற்கு சவுதி அரேபியா அதிகாரிகள் திட்டமிடுவது தொடர்பான விஷயங்களை அமெரிக்க உளவுத் துறை முகமைகள் ஒட்டு கேட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. மறுபக்கம் துருக்கி அதிகாரிகள் ஜமால் கஷோகி சவுதி அரேபியாவின் தூதரகத்துக்குள் தேட அனுமதி அளித்தது.

அக்டோபர் 10ஆம் தேதி வாக்கில் ஜமால் கஷோகியின் கொலையோடு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 15 பேர் கொண்ட குழுவினரின் படங்கள் மற்றும் சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் தொடர்பான காணொளிப் பதிவுகளை ஒரு முன்னணி துருக்கி ஊடகம் வெளியிட்டது.

அக்டோபர் 15-ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திலும் அக்டோபர் 17ஆம் தேதி சவுதி அரேபியாவின் தூதரகத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளின் வீட்டிலும் துருக்கிய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் ஜமால் கஷோகி நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே அவர் கொல்லப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஜமால் கஷோகிக்கு ஆதரவாக போராட்டங்கள்

அக்டோபர் 2 இரண்டாம் தேதியே ஜமால் கஷோகி சவுதி அரேபிய தூதரகத்துக்குள்ளேயே கொல்லப்பட்டதாக சவுதி அரேபியாவும் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இளவரசர் முகமது பின் சல்மானோடு மிக நெருக்கமாகப் பழகி வந்த அரசவை ஊடக ஆலோசகர் செளத் அல் கத்தாணிக்கு (Saud al - Qahtani) இந்த சம்பவத்தோடு தொடர்பு இருப்பதாகச் செய்தி வெளியானது.

இச்சம்பவத்தை தொடர்ந்து துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் கேள்வி எழுப்பினார். அக்டோபர் 2ஆம் தேதி ஜமால் கஷோகி கொலை செய்யப்படுவதற்கு முன்பே சவுதி அரேபியா அதை திட்டமிட்டதாக துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார். மேலும் யார் இந்த கொலையை செய்யச் சொன்னது என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆடியோ ஒலிப்பதிவை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளோடு பகிர்ந்து கொண்டதாக துருக்கி 2018 ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாவது வாரத்தில் கூறியது. ஜமால் கஷோகியின் உடலை தேடுவதையும் அத்தோடு நிறுத்திக் கொண்டது துருக்கி.

சவுதி அரேபியா கூறியது என்ன?

ஜமால் கஷோகியைக் கொல்வதற்கான உத்தரவு சவுதி அரேபியாவின் உளவுத்துறை முகமையின் துணைத் தலைவர் அஹமத் ஆசிரி, ஜமால் கஷோகியோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட அணியின் தலைவர் உத்தரவிட்டதாக 2018 நவம்பர் 15ஆம் தேதி சவுதி அரேபியாவின் துணைப் பொது வழக்குரைஞர் சலான் அல் சலான் (Shalaan al-Shalaan) கூறினார். ஜமால் கஷோகியை அமைதியான முறையில் பேசி சமாதானப்படுத்தியோ அல்லது வலுக்கட்டாயமாகவோ சவுதி அரேபியாவிற்கு அழைத்து வருவதற்கு இப்படி ஒரு படையை அஹமத் ஆசிரி அனுப்பியதாகவும் கூறினார் சலான்.

மேலும் ஜமால் கஷோகியோடு பேச்சுவார்த்தை நடத்திய அந்தக் குழு ஒரு கட்டத்தில் அவரை வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு வர கட்டாயப்படுத்தினர். அப்போது ஜமால் கஷோகிக்கு ஒரு விதமான மருந்து கொடுக்கப்பட்டது. மருந்து அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதால் அவர் இறந்து போனதாக சவுதி அரேபியா தரப்பில் சலான் கூறினார்.

மேலும் ஜமால் கஷோகி இறந்தபின் அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி இஸ்தான்புல்லில் இருந்த சவுதி அரேபிய தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஹதிஸ் செங்கிஸை

ஐந்து பேர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கு ஜமால் கஷோகி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார் சலான்.

ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதி அரேபிய தரப்பில் 31 தனி நபர்கள் விசாரிக்கப்பட்டு அதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அஹமத் ஆசிரி மற்றும் சவுத் அத்தாணி உட்பட ஐந்து அரசு உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் பெயர் வெளியிடப்படாத 11 பேர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். அதில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

டிசம்பர் 2019 காலகட்டத்தில் 5 பேருக்கு மரண தண்டனையும் மூன்று பேருக்கு மொத்தம் 24 நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டன. மூன்று பேர் மீது எந்தவித குற்றமும் இல்லை என விடுவிக்கப்பட்டனர்.

ஆக்நஸ் கள்ளமார்ட்

சவுதி அரேபியாவின் உளவுத்துறை உயர் அதிகாரிகளில் ஒருவரான அஹமத் ஆசிரி மீது வழக்கு தொடுத்து விசாரிக்கப்பட்டது, ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர் விடுவிக்கப்பட்டார். செளத் அல் கத்தானி மீது விசாரணை மட்டுமே நடந்தது, அவர் மீது வழக்குகள் ஏதும் தொடுக்கப்படவில்லை.

இந்த வழக்கு திரைக்குப்பின் விசாரிக்கப்பட்டது, மேலும் இதில் எந்த ஒரு சர்வதேச தரநிலைகளும் பின்பற்றப்படவில்லை என பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின.

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஜமால் கஷோகி கொலையை விசாரித்த ஆக்நஸ் கள்ளமார்ட் (Agnes Callamard), ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி அரேபிய அரசுதான் பொறுப்பு என தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் மற்றும் சில சவுதி அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார் அக்நஸ். சவுதி அரேபியாவின் விசாரணை எந்தவித சர்வதேச தர நிலைகளையும் பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார் ஆக்நஸ்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?