மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் டிசம்பர் 25, 1991 அன்றுதான் சோவியத் கொடி கடைசியாகப் பறந்தது. சோவியத் குடியரசுகளின் (உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்) பிரதிநிதிகள் தாங்கள் இனி சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். மாறாக, அவர்கள் ஒரு காமன்வெல்த் சுதந்திர நாடுகளை நிறுவுவதாக அறிவித்தனர். மூன்று பால்டிக் குடியரசுகள் (லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா) ஏற்கனவே சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பிரிந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் சோவியத் யூனியனின் 15 குடியரசுகளில் ஒன்றான கஜகஸ்தான் மட்டுமே எஞ்சியிருந்தது.
சோவியத் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஆறு ஆண்டுகளில் செயல்படுத்திய பல தீவிர சீர்திருத்தங்களின் காரணமாக, ஒரு காலத்தில் வலிமையுடன் இருந்த சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், கோர்பச்சேவ் தனது தேசம் கலைக்கப்பட்டதில் ஏமாற்றமடைந்தார். அதனால் டிசம்பர் 25 அன்று தனது பணியை ராஜினாமா செய்தார். இது உலக வரலாற்றில் ஒரு நீண்ட, திகிலூட்டும் சகாப்தத்தின் அமைதியான முடிவாகும். 73 ஆண்டுகளாக உலக அரசியலில் தீர்மான சக்தியாக இருந்த சோவியத் யூனியனின் இருப்பு முடிவுக்கு வந்தது.
லெனின்
1917-ம் ஆண்டு நடந்த புரட்சியில் புரட்சிகர போல்ஷ்விக் கம்யூனிசக் கட்சியினர் ரஷிய ஜார் அரசை தூக்கி எறிந்தனர். இதன் பிறகு நான்கு சோசலிச குடியரசுகள் நிறுவப்பட்டன. 1922 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனை உருவாக்க ரஷ்யா அதன் தொலைதூர குடியரசுகளுடன் இணைந்தது. இந்த சோவியத் அரசின் முதல் தலைவர் மார்க்சியப் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் ஆவார். ஆரம்பத்தில் சோவியத் யூனியன் “உண்மையான ஜனநாயகத்தின் சமூகம்” என்று கருதப்பட்டது. ஆனால் ஜாரிச எதேச்சதிகாரத்திலிருந்தது போன்ற அடக்குமுறையும் சமூகத்தில் அவ்வப்போது நிலவத்தான் செய்தது. இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு ரஷ்ய குடிமகனின் விசுவாசத்தைக் கோரும் ஒற்றைக் கட்சி – கம்யூனிசக் கட்சியால் – சோவியத் யூனியன் ஆளப்பட்டது
தொழிலாளிகள், விவசாயிகள் அல்லாத முதலாளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு இடமில்லை என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்கான நியாயம் விளக்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு மக்கள் பிரிவின் கட்சிகள் சோவியத் யூனியனில் இருந்தாலும் பின்னர் ஒரு கட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டது.
ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பொருளாதாரத்தின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. அனைத்து தொழிற்துறைகளையும் நிர்வகித்ததோடு கூட்டுப்பண்ணைகளையும் நிறுவியது. பெரும் நிலங்களை வைத்திருந்தோர் நிலவுடைமையிலிருந்து அகற்றப்பட்டு ஆரம்பத்தில் நிலங்கள் விவசாயிகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு அந்நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டுக் கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. நிலங்களை இழந்த பணக்கார குலாக்குகள் எனப்படும் விவசாயிகள் சோவியத் யூனியனுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். இப்படியாக அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கம்யூனிஸ்டுக் கட்சியும், சோவியத் அரசும் கட்டுப்படுத்தியது. ஸ்டாலினின் கொள்கைகளுக்கு எதிராக வாதிட்டவர்கள் கைது செய்யப்பட்டு குலாக்ஸ் எனப்படும் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் சில தூக்கிலிடப்பட்டனர்.
கம்யூனிசம்
மேலும் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரினை எதிர்கொண்டார். வளர்ந்து வரும் இளம் சோவியத் யூனியனை அழிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் விரும்பின. அதை ஹிட்லரை வைத்துச் செயல்படுத்துவதற்கு அவை திட்டமிட்டன. ஆனால் ஜெர்மனியின் ஹிட்லர் சோவியத் யூனியனை மட்டும் குறிவைக்கவில்லை, மேற்குலகையும் சேர்த்தே குறி வைத்தார். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இல்லாமலேயே சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போரில் கடும் இழப்புகளுடன் ஜெர்மனியை வெற்றி கொண்டது.
இந்த சிக்கலான அரசியல் சூழல் காரணமாக உள்நாட்டில் கம்யூனிசக் கட்சியின் எதிரிகள் வேட்டையாடப்பட்டனர். போர் முடிந்த பிறகு இழந்த பொருளாதாரத்தைக் கட்டியமைக்க ஸ்டாலின் முடிவு செய்தார்.
ஆனால் கிராமங்கள் – நகரங்கள், விவசாயிகள் – தொழிலாளிகள், தொழிற்துறை – விவசாயம், உடல் உழைப்பு – மூளை உழைப்பு ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகள் கம்யூனிசக் கட்சிக்கு எதிரிகளை அளப்பறிய அளவில் உருவாக்கிக் கொடுத்தது. பிறகு எதிரிகளைக் களையெடுக்க வேண்டி ஸ்டாலின் நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் அப்படிக் களையெடுக்கும் போது கம்யூனிசத்தின் ஆதரவாளர்கள் கூட களையெடுக்கப்பட்டனர். இதற்குக் கேட்பார் கேள்வி இல்லாத வகையில் செயல்பட்ட ரகசிய போலீசு ஒரு முக்கியமான காரணமாகும். 1953 இல் ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு, சோவியத் தலைவர்கள் அவரது சர்வாதிகாரமான கொள்கைகளைக் கண்டித்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றை ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். அவர்கள் குறிப்பாக மேற்கத்திய சக்திகளுடனான பனிப்போரில் கவனம் செலுத்தினர். அமெரிக்காவுடன் செலவு பிடிக்கும் மற்றும் அழிவுகரமான “ஆயுதப் போட்டியில்” ஈடுபட்டனர். அதே நேரத்தில் கம்யூனிச எதிர்ப்பை அடக்குவதற்கும் கிழக்கு ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் இராணுவ சக்தியைப் பயன்படுத்தினார்கள்.
கோர்பச்சே
மார்ச் 1985 இல், நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சி அரசியல்வாதியான மிகைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் தேக்கமான பொருளாதாரத்தைக் கொண்டிருந்த நாட்டை ஆளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அதே நேரம் சோவியத் யூனியனின் அரசியல் கட்டமைப்பு எவ்வித சீர்திருத்தத்தையும் அனுமதிக்காத அளவிற்கு இறுகிப் போயிருந்தது. இதுதான் கோர்பச்சேவ் பதவி ஏற்கும் போது இருந்த நிலைமை. கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியம் மிகவும் வளமான, உற்பத்தி நாடாக மாற உதவும் என்று நம்பிய இரண்டு கொள்கைகளை அறிமுகப் படுத்தினார். இவற்றில் முதலாவது கிளாஸ்னோஸ்ட் அல்லது அரசியல் வெளிப்படைத்தன்மை என அறியப்பட்டது. கிளாஸ்னோஸ்ட் கொள்கையின் மூலம் கோர்பச்சேவ் அடக்குமுறையின் தடயங்களை அகற்றினார்.
புத்தகங்களை தடை செய்தல் நிறுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டது. எங்கும் இருந்த இரகசிய போலீஸ் தடை செய்யப்பட்டது. இவையெல்லாம் சோவியத் குடிமக்களுக்கு புதிய சுதந்திரத்தை அளித்தன. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். செய்தித்தாள்கள் அரசு குறித்த விமர்சனங்களை வெளியிட அனுமதிக்கப்பட்டன. முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்ற கட்சிக் தேர்தலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது சீர்திருத்தங்கள் பெரெஸ்ட்ரோயிகா அல்லது பொருளாதார மறுசீரமைப்பு என அறியப்பட்டது.
சோவியத் யூனியன்
சோவியத் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழி, அரசாங்கத்தின் பிடியைத் தளர்த்துவது என்று கோர்பச்சேவ் நினைத்தார். தனியார் முன்முயற்சி புதுமைக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார், எனவே தனிநபர்களும் கூட்டுறவுகளும் 1920 களுக்குப் பிறகு முதல் முறையாக வணிகம், தொழிற்துறைகளைச் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். சிறந்த ஊதியம் மற்றும் இதர கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. சோவியத் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டையும் கோர்பச்சேவ் ஊக்குவித்தார். இத்தகைய சீர்திருத்தங்கள் ஏன் வெற்றியடையவில்லை, இதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் எப்படி வீழ்ந்தது என்பதையும் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust