China Wall NewsSense
அறிவியல்

Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

ஆல்கஹால் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி குளிர்பிரதேசங்களுக்கு போய் சரக்கடித்தால் உடல் சூடாகும் என்பது மூட நம்பிக்கை.

Govind

நம் வாழ்வில் நம்பிக் கொண்டிருக்கும் உண்மைகள் பல, உண்மையில் கட்டுக்கதைகள் என்பதை அறிவீர்களா? இத்தகைய புனைவுகளிலிருந்து உண்மைகளை பிரிப்பது கடினம்.

உண்மை போலத் தோன்றும் இவற்றை நாம் பெற்றோரிடமோ, பள்ளிகளிலோ, நண்பர்களிடத்திலோ ஏன் வாட்ஸ்அப்பிலோ கற்றுக் கொண்டிருக்கலாம். அவை மாடு முட்டுவதிலிருந்து மனிதனுக்கு பரவும் கொரோனா வரை பல வகைகளாக நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு முட்டுமா?

ஸ்பானிஷ் காளைச் சண்டைகளை பார்த்திருப்போம். வீரர்கள் தாம் வைத்திருக்கும் சிவப்பு துணியை அசைக்கும் போது காளைகளின் கோபத்தைத் தூண்டும் பிரகாசமான நிறம் அது என்று நாம் நம்புகிறோம். நாம் மட்டுமல்ல முழு உலகமும் அப்படி நம்புகிறது.

ஆனால் அமெரிக்க அறிவியல் வழிகாட்டியின் படி காளைகளும் மற்ற கால்நடைகளும் சிவப்பு - பச்சை நிறத்தை பார்க்க முடியாத பார்வை உடையவை (நிறக்குருடு). உண்மையில் காளையின் கோபத்தைத் தூண்டுவது அவர்கள் வைத்திருக்கும் தொப்பி அல்லது துணியின் அசைவுகள்தான்.

bull

மூளையில் 10% மட்டும்தான் மனிதர்கள் பயன்படுத்துகிறார்களா?

2014 ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்த லூசி எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் படி மனிதர்கள் தமது மூளையில் 10% மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த படத்தின் இறுதியில் லூசி 100% மூளையை பயன்படுத்தும் ஆற்றல் பெற்று ஒரு சூப்பர் பெண்ணாக மாறுவார். இருப்பினும் இது ஒரு கட்டுக்கதை தவிர வேறு இல்லை.

நரம்பியல் நிபுணர் பேரிகார்டன் கூற்றுப்படி, மனிதர்கள் மூளையின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்துகிறார்கள், மூளையின் பெரும்பகுதி எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார். இப்படியான தவறான கருத்துக்களை அறிவியல் புனைகதை என்ற பெயரில் திரைப்படங்கள் பரப்புகின்றன.

human brain

உங்களால் எட்டு கிளாசுக்கு மேல் தினமும் நீர் குடிக்க முடியவில்லையா?

உங்களால் எட்டாவது கோப்பை குடிநீரை அருந்துவதற்கு சிரமப்படுகிறீர்களா? வருத்தப் படவேண்டாம். ஒரு நாளைக்கு இப்படி குடிக்க வேண்டும் என்று இத்தகைய தண்ணீர் திட்டம் எதுவும் உண்மையில் கிடையாது.

மேயோ கிளினிக்கின் கூற்றுப்படி உங்களுக்கு தினசரி தேவைப்படும் தண்ணீரின் அளவு உங்களது ஒட்டு மொத்த ஆரோக்கியம், உங்களது செயல்பாடுகள், வசிக்கும் இடம், தட்பவெப்பநிலை, உடலுழைப்பு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

ஆகவே அனைவருக்கும் இத்தனை கிளாஸ் நீர் என்பது பொருந்தாது. சிலருக்கு எட்டுக்கும் குறைவாக, சிலருக்கு எட்டுக்கும் அதிகமான நீர் தேவைப்படலாம்.

drinking water

உங்கள் செல்ல நாய்க்குட்டிக்கு கருப்பு வெள்ளை மட்டும்தான் தெரியுமா?

இல்லை, உங்கள் நாய்க்குட்டி உலகை கருப்பு மற்றும் வெள்ளையில் பார்க்கவில்லை. கால்நடைமருத்துவர் பார்பரா ராயலின் விளக்கப்படி நாய்கள் நாம் பார்க்கும் அனைத்து வண்ணங்களையும் பார்க்காது. ஆனால் அவைகள் உண்மையில் வண்ணங்களை வேறுபடுத்தி அறிய முடியும்.

பெரியவர்கள் பபிள் கம்மை சாப்பிட்டால் ஜீரணித்து விடுவார்களா?

இதுவும் உண்மை இல்லை. மேயோ கிளினிக்கின் கூற்றுப்படி குழந்தைகளோ, பெரியவர்களோ பபிள் கம்மை மென்று விழுங்கினால் அதை ஜீரணிக்க முடியாது. அது நமது வயிற்றில் தங்காது. நமது செரிமான அமைப்பு வழியாக நகர்ந்து மலத்தின் வழியாக அது வெளியேறி விடும்.

விண்வெளியில் இருந்து பார்க்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரே கட்டிடம் சீனப் பெருஞ்சுவரா?

இதையும் பலர் நம்புகின்றனர். ஆனால் அது அவ்வாறு இல்லை. ஸ்னோப்ஸின் கூற்றுப்படி, இந்த தவறான உண்மை, பெரும்பாலும் சுவரின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் முயற்சி மட்டுமே.

விண்வெளியில் 180 மைல் உயரத்தில் உள்ள தாழ்வான இடத்திலிருந்து, பெரிய சுவர் மட்டுமே காணக்கூடிய பொருள் அல்ல. "நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், அணைகள் மற்றும் கென்னடி விண்வெளி மையத்தையும் " நீங்கள் பார்க்க முடியும் என்பதை நாசா படங்கள் நிரூபிக்கின்றன.

நீங்கள் இன்னும் உயரமான விண்வெளிக்குச் சென்றால், சீனப் பெருஞ்சுவரை ரேடார் படங்களில் மட்டுமே அடையாளம் காண முடியும். மனிதக் கண்ணால் அல்லது புகைப்படத்தால் கூட அடையாளம் காண முடியாது.

சீனப் பெருஞ்சுவர்

பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் உயரம் குறைந்த மனிதரா?

நெப்போலியன் போனபார்ட் வழக்கத்திற்கு மாறாக சிறிய உயரம் கொண்ட ஒரு ஆக்ரோஷமான மனிதராக அடிக்கடி சித்தரிக்கப்படுகிறார். இதைத்தான் "நெப்போலியன் காம்ப்ளக்ஸ்" என்று வழக்கத்தில் சொல்கிறார்கள். ஆக்கிரமிப்பு உணர்வுடன் உயரம் குறைவாக இருக்கும் ஆண்களை விவரிக்க இந்த வழக்கு பயன்படுகிறது.

இருப்பினும், நெப்போலியன் சராசரியாக 5'5" உயரத்தில் இருந்திருக்கலாம் என வரலாறு கூறுகிறது. 1800களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் ஜேம்ஸ் கில்ரேயின் தொடர்ச்சியான கேலிச்சித்திரங்களில் இருந்து அவர் வழக்கத்திற்கு மாறாக உயரம் குறைவானவர் என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன்

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பள்ளி கணித வகுப்பில் தோல்வி அடைந்தாரா?

டைம் கட்டுரையின்படி, இந்த வதந்தி மிகவும் பரவலாக பரவியது. இது 1935 ஆம் ஆண்டு "ரிப்லியின் நம்பினால் நம்புங்கள்!" தொடர் கட்டுரையில் கூறப்பட்ட புனைவு. அப்போதே ஐன்ஸ்டீன் தான் ஆரம்பப் பள்ளியில் தனது வகுப்பில் முதலிடத்தில் இருந்ததாகக் கூறி, கட்டுரையை மறுத்தார். "எனக்கு 15 வயதிற்கு முன்பே, நான் வேறுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த கால்குலஸில் தேர்ச்சி பெற்றேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ஐன்ஸ்டீன்

இறந்த பிறகும் ஒருவரது முடி மற்றும் நகங்கள் வளருமா?

ஒரு நபரின் முடி மற்றும் நகங்கள் அவரது மரணத்திற்குப் பிறகு நீண்டதாக தோன்றும் என்பது உண்மைதான். ஆனால், மருத்துவ அறிவியலுக்கான ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, ஒரு நபரின் நகங்கள் மற்றும் முடியைச் சுற்றியுள்ள தோல் காலப்போக்கில் உடலின் நீரிழப்பு காரணமாக பின்வாங்குகிறது அல்லது சுண்டிப் போகிறது. ஆனால் அவர்களின் முடி மற்றும் நகங்கள் உண்மையில் வளருவது இல்லை. தோல் சுருங்குவதனால் அப்படி நீண்டு விட்டது போலத் தோன்றும் அவ்வளவுதான்.

மது அருந்தினால் உடல் சூடாகுமா?

நீங்கள் மது அருந்தும் போது நீங்கள் சூடாக உணரலாம். காரணம் சாராயம் மற்றும் உங்கள் மூளை ஒன்றுசேர்ந்து அப்படி நினைக்க வைக்கிறது. உண்மையில், ஆல்கஹால் குடித்தால் உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்கிறது.

இது 2005 ஆம் ஆண்டு ஆய்வின்படி, ஆல்கஹால் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட அறிவியல் உண்மையாகும். எனவே குளிர்பிரதேசங்களுக்கு போய் சரக்கடித்தால் உடல் சூடாகும் என்பது மூட நம்பிக்கை.

alcohol

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?