எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்? Twitter
அறிவியல்

எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

NewsSense Editorial Team

(இந்த கட்டுரை நாராயணி சுப்ரமணியன் என்பவரால் பேஸ்புக்கில் பகிரப்பப்பட்டது)

2023 மார்ச் 29ம் தேதியன்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், செயற்கை அறிவு பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பொறியாளர்கள், மானுடவியலாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் கையெழுத்திட்ட ஒரு கடிதம் வெளியானது.

அதில் "செயற்கை அறிவை உருவாக்குபவர்களாலேயே அதன் அடுத்த கட்டத்தைக் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆகவே செயற்கை அறிவு சம்பந்தமாக உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கும் ஆராய்ச்சியை இப்போதைக்கு நிறுத்தி வையுங்கள். ஆறு மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டு சில வரைமுறைகளை வகுத்தபின்பு ஆராய்ச்சியை மீண்டும் தொடரலாம்" என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.

எலான் மஸ்க், ஆப்பிளின் தலைவர்களுள் ஒருவரான ஸ்டீவ் வாஸ்நியாக், மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி, முன்னாள் தொழில்நுட்ப உயரதிகாரிகள் போன்ற பலர் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை சமீபத்தில் எழுதியிருக்கிறார் செயற்கை அறிவின் நிறுவனர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் விஞ்ஞானி எலீஸர் யுட்கோவ்ஸ்கி. "ஆறு மாதம் போதாது, இப்போதைக்குக் காலவரையின்றி செயற்கை அறிவு ஆராய்ச்சியை ஒத்திவைக்கவேண்டும்" என்கிறார்.

Elon Musk

இந்த நிலை எப்படி வந்தது?

இப்போது உலகமெங்கும் ஒரு செயற்கை அறிவுப் பந்தயம் நடந்துகொண்டிருக்கிறது. அதீதமான செயற்கை அறிவு அம்சங்களை யார் முதலில் உருவாக்குவது என்பதில் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இது நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியாக மட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையிலான போட்டியாகவும் மாறிவிட்டது. அவரவர் புதுப்புது மேம்பாடுகளோடு செயற்கை அறிவு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்க, "மனித இனம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறது" என்று எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள்.

AI Black Box

"செயற்கை அறிவால் விளையப்போகும் ஆபத்துகளை நினைத்தால் சிலநேரம் இரவில் தூக்கமே வருவதில்லை. எங்களது செயற்கை அறிவு அமைப்பான பார்டிடம் (Bard) சில கேள்விகளைக் கேட்கும்போது அது முற்றிலும் கோணலான, வித்தியாசமான பதில்களைத் தருகிறது. இந்த பதில்கள் அதனுடைய அறிவில் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. செயற்கை அறிவின் இதுபோன்ற அறியாத அம்சங்களைக் கறுப்புப் பெட்டி (Black Box) என்போம். அப்படிப்பட்ட ஒரு மர்மமான இடம் பார்டிலும் இருக்கிறது " என்று கவலை தெரிவித்திருக்கிறார் கூகுளின் சுந்தர் பிச்சை.

"மனிதனுக்கு நிகரான அறிவு" என்ற இடத்திலிருந்து "மனிதனை மிஞ்சிய அறிவு" என்ற இடத்துக்கு இவை நகரும்போது என்னவாகும்? அதை நம்மால் கணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிற வேகத்தைப் பார்த்தால் அந்த இடத்துக்கு இவை சீக்கிரம் நகர்ந்துவிடும் என்பதாகத் தெரிகிறது. அப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே வல்லுநர்களின் கவலை. இந்த எச்சரிக்கைகளின் அடிப்படை இதுதான்.

சினிமாவில் வருவதுபோல மனித இனத்தை அழித்து பூமியெங்கும் ஆதிக்கம் செலுத்துகிற ரோபாட்கள் உருவாகும் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை.

செயற்கை அறிவு அமைப்புகள் மனிதனைப் பொருட்படுத்தாதவையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவற்றின் பொதுவான இலக்குகளும் மனிதர்களின் இலக்குகளும் வேறுபட்டவையாக இருந்தாலே நிச்சயம் அழிவுதான்.

இதை ஒரு அட்டகாசமான உதாரணத்தோடு விளக்குகிறார் செயற்கை அறிவு பேராசிரியர் மாக்ஸ் டெக்மார்க். "மேற்கு ஆப்பிரிக்க கறுப்பு காண்டாமிருக இனம் நம்மால்தான் அழிந்தது. ஏன்? மனிதர்கள் காண்டாமிருகத்தை வெறுக்கிறார்கள், அதைத் தேடித் தேடி அழிக்கிறார்கள் என்பதாலா? இல்லை. காண்டாமிருகங்களை விட மனிதர்கள் புத்திசாலிகள், அந்த விலங்குகள் இருக்கும் சூழலையும் அவற்றின் கொம்புகளையும் எப்படிப் பயன்படுத்துவது என்ற இலக்குகள் மனிதர்களுக்கு வேறுபட்டதாக இருந்தன. மனிதன் தன் இலக்கைத் துரத்த, அதன் பக்க விளைவாகக் காண்டாமிருகம் அழிந்தது. இதே நிலைமை செயற்கை அறிவு மேம்படும்போதும் நடக்கலாம். தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவை செய்யும் செயல்பாடுகள் நம்மை அழிக்கலாம்" என்கிறார்.

இந்த புகைப்படம் ஆர்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது சாதாரண மனிதர்கள் பயந்த கதையோடு இதை ஒப்பிட்டு நிராகரிக்க முடியவில்லை. செயற்கை அறிவு பற்றிய எச்சரிக்கை மணியை ஒலிப்பவர்கள் எல்லாருமே அந்தத் துறையில் முக்கியமான வல்லுநர்கள். நமக்கே புரியாத ஒரு தொழில்நுட்பம் எனும்போது ஒரு போட்டிக்காக அதை மீண்டும் மீண்டும் மேம்படுத்துவது நெருப்போடு விளையாடும் மனநிலைதான். மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை எடுத்துக்கொள்வது, தனிநபர் உரிமைகளில் தலையிடுவது, தவறான தகவல்களைப் பரப்புவது, படைப்பூக்கத்தை பாதிப்பது, மனிதர்களின் தனித்துவமான பண்புகளை இல்லாமல் ஆக்குவது என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட எல்லா ஆபத்துகளும் அப்படியேதான் இருக்கின்றன, அவற்றைக்கூட நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது. ஆனால் இதன் அடுத்த கட்டப் பாய்ச்சல் கவலை தருகிறது.

செயற்கை அறிவு பற்றிய எச்சரிக்கை மணியை ஒலிப்பவர்கள் எல்லாருமே அந்தத் துறையில் முக்கியமான வல்லுநர்கள்.

தன்னை விட புத்திசாலியான ஒன்றை மனிதன் எதிர்கொண்டதே இல்லையே? அந்த சூழலில் அவன் பிழைக்கும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம் இருக்கும்? யோசித்துப் பார்த்தால் பல கேள்விகள் எழுகின்றன.

"செயற்கை அறிவால் ஏற்படும் அழிவு" என்ற தலைப்பில் செயற்கை அறிவு செயலி மூலம் வரையபட்ட ஓவியம்

அணுகுண்டு ஆராய்ச்சியின்போது சில விஞ்ஞானிகள் தொடர்ந்து அதன் பாதிப்புகளைப் பற்றி எச்சரித்தனர். முதல் அணுகுண்டு வெற்றிகரமாக வெடித்தபின்பு "இனிமேல் உலகம் பழையமாதிரி இருக்காது" என்று எழுதினார் ராபர்ட் ஆப்பன்ஹெய்மர். அறிவியல் சுவாரஸ்யத்துக்காக ஆராய்ச்சியில் பங்குகொண்ட விஞ்ஞானிகள்கூட அணுகுண்டு உருவாக்கும் அழிவைப் பார்த்தபின்பு வருத்தம் தெரிவித்துப் பின்வாங்கினர். அப்போதும் இதே போட்டி மனநிலைதான் ஆராய்ச்சி தொடர்வதற்குக் காரணமாக இருந்தது.

என்னென்னவோ செய்து அணு ஆயுதங்களை (ஓரளவாவது) இப்போது கட்டுக்குள் வைத்திருக்கிறோம். ஆனால் அதே யுத்தி செயற்கை அறிவை எதிர்கொள்வதற்குக் கை கொடுக்காது.

ஏனென்றால் அணு ஆயுதங்களைப் போலல்லாமல் செயற்கை அறிவுகளுக்கு நாம் சுயமாக சிந்திக்கக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறோம்.

- Narayani Subramaniyan

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?