20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகம் எப்படி இருந்தது தெரியுமா? Istock
அறிவியல்

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகம் எப்படி இருந்தது தெரியுமா? - வியக்க வைக்கும் தகவல்

NewsSense Editorial Team

20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய டி என் ஏ மரபணு மூலம் வரலாற்றுக்கு முந்தைய உலகத்தைக் கண்டுபிடித்த அறிவியல் சமூகம்.

பகுத்தறிவு கொண்ட மனிதன் எப்போதும் தன் கடந்த காலத்தை ஆழமாக தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தை கூர்மையாக திட்டமிட்டுக் கொள்ளவும் விரும்புகிறான். 

வரலாற்றை சரியாகவும் ஆழமாகவும் தெரிந்து கொள்ள அறிவியலும் தொழில்நுட்பமும் இன்று பெரிய அளவில் கைகொடுக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஒரு பகுதி எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க சில புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் நம் பார்வையையே மாற்றத் தொடங்கியுள்ளன.

க்ரீன்லாந்து எனும் காடு

இன்று கிரீன்லாந்தின் வடக்குப் பகுதி ஒரு கடுங்குளிர் பாலைவனம். அப்பகுதியில் இருந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட டி என் ஏ மாதிரிகள், ஒருகாலத்தில் அப்பகுதி வளமான செடி, கொடிகள், விலங்கினங்களைக் கொண்டிருந்ததாக சில விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாஸ்டாடூன் என்கிற ராட்சத யானைகள், ரெயின் டீர் என்றழைக்கப்படும் கலைமான்கள், வாத்துகள் போன்ற விலங்கினங்கள், பிர்ச், போப்லர் மரங்களுக்கு இடையில் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளர்னர். இதில் கடலில் வாழக்கூடிய ஹார்ஸ் ஷூ நண்டுகள், ஆல்கே போன்ற பாசிகளும் அடக்கம் என்பது ஆச்சர்யத்துக்குரியது. இந்த ஆய்வு "நேச்சர்" என்கிற அறிவியல் சஞ்சிகையில் முழுமையாக பிரசுரமாகியுள்ளது. 

இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் எஸ்கே வில்லெர்ஸ்லெவ், மித வெப்ப மண்டலத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆர்டிக் பகுதியில் வாழும் உயிரினங்கள் ஓரிடத்தில் கலந்து வாழ்ந்ததற்கு ஒப்பான நிகழ்வுகள் தற்போது எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இந்த ஆய்வு கேப் கொபென்ஹவென் ஃபார்மேஷன் (Kap København Formation) என்கிற பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் கிரீன்லாந்தின் வடகோடிப் பகுதி எனலாம்.

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு


இதுநாள்வரை, அந்தப் பகுதியில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது என காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்பது மிக மிக கடினமான ஒன்றாக இருந்தது. அந்த காலத்தைச் சேர்ந்த விலங்கினங்களின் புதைபடிமங்கள் இப்பகுதியில் கிடைப்பது மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது.

கேப் கொபென்ஹவென் ஃபார்மேஷன் பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முயலின் பல் மற்றும் சாண வண்டு என்றழைக்கப்படும் ஒரு வகையான வண்டு மட்டுமே. எனவே மக்களுக்கு இப்பகுதியில் என்ன மாதிரியான விலங்கினங்கள் வாழ்ந்திருக்கும் என்பதற்கு எந்த ஒரு தெளிவும் இல்லை என்கிறார் பேராசிரியர் வில்லெர்ஸ்லெவ்.

ஆய்வில் இறங்கியவர்கள், இ - டி என் ஏ என்றழைக்கப்படும் சுற்றுச்சூழல் டி என் ஏவை கையில் எடுத்தனர். செடி கொடிகள், விலங்குகளில் இருந்து நிலத்தை வந்தடைந்த டி என் ஏக்கள் இவை. உதாரணத்துக்கு அந்த உயிர்களின் தோலில் இருந்த செல்கள் தொடங்கி எச்சங்கள் வரை சொல்லலாம். 

அறிவியல் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இப்படி மண்ணில் உள்ள டி என் ஏக்களைப் பயன்படுத்துகின்றனர். 

உதாரணத்துக்கு ஒரு சொட்டு கடல் நீரைக் கொண்டு, கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த விலங்கினங்களைப் பட்டியலிட்டு விடலாம். அந்த விலங்கினங்களை நீங்கள் பார்க்க முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. 

அடர்காடும், சில உயிரினங்களும்

கிரீன்லாந்தில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சிக் குழு பழங்காலத்து மண்ணைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் என்ன மாதிரியான விலங்கினங்கள், செடி கொடிகள் வாழ்ந்தன என்பதைப் பார்க்க முனைந்தது.

அப்படிப் பார்க்க முயன்றவர்களுக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தன. அப்பகுதியில் ஒரு காட்டுச் சூழலும், அதனோடு ஆர்டிக் பகுதியைச் சேர்ந்த செடி கொடிகள், பாசிகள் மரங்களோடு மரங்களாக வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செடி கொடிகளோடு, கொறித்துண்ணக்கூடிய விலங்கினங்கள், கலைமான்கள், வாத்துக்களும், மாஸ்டாடான் எனப்படும் அழிந்து போன ராட்சத யானைகளும் அப்பகுதியில் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டன. 

கிரீன்லாந்து பகுதியில், இதற்குமுன் யானை போன்ற பிரமாண்ட உயிரினங்கள் வாழ்ந்ததாக இதுவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை என்று பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார் பேராசிரியர் எஸ்கே வில்லெர்ஸ்லெவ் (Eske Willerslev).

மேலும், சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன், வடக்கு கிரீன்லாந்துப் பகுதி தற்போதைய வெப்பநிலையை விட மிகவும் வெப்பமாக இருந்தது. அப்பகுதியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 11 - 19 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது என்றும் பிபிசி வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஓரிடத்தில் உள்ள சுற்றுச்சூழலுக்கு தகுந்தாற் போல, செடிகொடிகள் அல்லது விலங்கினங்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை அறிவியல் உலகம் plasticity of biological organisms என்கிறார்கள். அப்படி உயிரினங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தது, மனிதர்கள் சிந்தித்ததை விட, வடக்கு கிரீன்லாந்துப் பகுதியில் பெரிதாக இருந்திருக்கிறது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்ணில் இருந்து டி என் ஏ மரபணுக்களை பிரித்தெடுத்து வரிசைப்படுத்துவது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அப்பணிகளைச் செய்வதற்கே ஆராய்ச்சிக் குழுவுக்கு பல ஆண்டு காலமும், சரியான தொழில்நுட்பமும் தேவைப்பட்டன. அதே நேரத்தில் டி என் ஏ மரபணுக்கள் நீண்ட காலத்துக்கு உயிர் வாழாது என்றும் ஒரு பொதுக் கருத்து நிலவியது.

அறிவியலின் மர்மம்

2005ஆம் ஆண்டு காலத்தில் இதே பேராசிரியர் வில்லர்ஸ்லெவ்வே ஓர் ஆய்வறிக்கையில் டி என் ஏ மரபணுக்கள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழாது என எழுதி இருந்தார். ஆனால் இப்போது அவருடைய சொந்த ஆய்விலேயே, டி என் ஏ மரபணுக்கள் மண்ணில் 20 லட்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கின்றன என்பது அறிவியலின் மர்மம் கலந்து ஆச்சர்ய முரண்.

மண் மற்றும் டி என் ஏ மரபணுக்களுக்கு இடையிலான சில ரசாயண மாற்றங்களால் டி என் ஏ மரபணுக்கள் செத்துப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார் பேராசிரியர் எஸ்கே வில்லெர்ஸ்லெவ்.

ஆக இப்போது அறிவியல் உலகம் தெளிவாக மனித இனத்துக்குச் சொல்வது ஒன்றைத் தான்... எந்த அளவுக்கு சுற்றுச்சூழல் டி என் ஏ மரபணுக்களைக் கண்டுபிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை பார்க்கும் நம் பார்வையை அறிவியல் மாற்றுமென கூறுகிறார் பிபிசி அறிவியல் ஆசிரியர் ரெபெகா மொரெல் (Rebecca Morelle).

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?