Diamond
Diamond Pixabay
அறிவியல்

வைர மழை பொழியும் இந்த இடம் குறித்து தெரியுமா? - விஞ்ஞானிகள் சொல்லும் ஆச்சர்ய தகவல்

NewsSense Editorial Team

ஒரு காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறியதை இன்று சாத்தியப்படுத்தி இருக்கிறது அறிவியல். 100 பேர் செய்யும் வேலையை இரண்டு ரோபாட்கள் 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று சாத்தியமில்லை என்று கூறும் விஷயங்களை, நாளை சாத்தியப்படுத்த விஞ்ஞானிகள் அறிவியலை ஆழ்ந்து தியானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, இப்போது நம் கண் முன்னே ஜோவென வைர மழை பொழிந்தால் எப்படி இருக்கும். தரத்தைப் பொருத்து ஒரு சில மூட்டைகளைக் கட்டினால் போதும் அடுத்த 5 தலைமுறைக்கான சொத்தைச் சேர்த்துவிடலாம் என்று மகிழ்வோம் தானே.

அப்படி உண்மையிலேயே ஒரு இடத்தில் வைர மழை பொழிந்திருக்கலாம் என்கிறது அறிவியல் உலகம். அவ்வப்போது வைர மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது நம் பூமியில் இல்லை, நம் சூரியக் குடும்பத்தில் தொலை தூரக் கோள்களாகக் கருதப்படும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் பெய்யலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Solar System

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதால் அக்கோள் நீல நிறத்தில் தென்படுகின்றன. இந்த இருகோள்களும் திரவங்களாலும் வாயுக்களாலும் சூழப்பட்டுள்ளன. அக்கோள்கள் ஒரு பாறை போன்ற மையப் பகுதியைக் கொண்டுள்ளன.

அக்கோள்களில் எப்போதும் அதிகப்படியாகக் காற்று வீசும். வாயேஜர் 2 என்கிற செயற்கைக் கோள் ஒரு முறை நெப்டியூனில் கடும் புயல் வீசியதைப் பதிவு செய்ததாக நாசா கூறுகிறது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் நிலவும் அதிகப்படியான அழுத்தம் நிறைந்த சூழல் ஹைட்ரஜன் மற்றும் கார்பனை ஒன்றாக இணைத்து, வைர மழை பொழியச் செய்யலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.

வைரம் உருவாகிறதா இல்லையா எனக் கண்டுபிடிக்க ஒரு புது சோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக 'நேச்சர் ஆஸ்டிரானமி' என்கிற சஞ்சிகையில், அந்த ஆய்வு குறித்த விவரங்கள் கடந்த 2017 காலகட்டத்திலேயே பிரசுரமானது.

Pluto

விஞ்ஞானிகளும் அதே காலகட்டத்தில் செயற்கை முறையில் வைரத்தை உருவாக்கும் சோதனையைத் தொடங்கினர்.

இந்த ஆய்வு, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எஸ் எல் ஏ சி நேஷனல் ஆக்சிலரேட்டர் லெபாரட்டரியில் நடந்தது. பிளாஸ்டிக்கில் Linac Coherent Light Source எனப்படும் உலகின் முதல் எக்ஸ் ரே இல்லாத எலெக்ட்ரான் லேசரைப் பயன்படுத்தி ஷாக் அலைகளைப் பாய்ச்சினர். இந்த ஆய்வில் 15 பேர் சுமார் ஐந்து நாட்களுக்கு, நிலத்துக்கடியில் ஒரு சின்ன இடத்தில் தங்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

இறுதியில் பிளாஸ்டிக்கில் இருந்த கார்பன் அணுக்கள் சிறிய வைர கட்டமைப்புகளை உருவாக்கின. அதை நானோ வைரம் என்கிறது அறிவியல் உலகம். இரண்டு ஷாக் அலைகள் ஒன்றன்மீது ஒன்று அனுப்பப்பட்டபோது வைரம் உருவானதாக CNN வலைத்தளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டே ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நானோ வைரங்கள், பொதுவாக ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவுக்கான வெடிப்புகள் போன்ற தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களின் போது உருவாகும்.

Diamond Rain

இந்த ஆய்வின் தலைமை ஆசிரியர் டாமினிக் க்ராஸ், இந்த ஆய்வின் தரவுகளில் ஒரு சிறிய குறியீடு போன்ற விஷயங்களையே பார்க்க முடியும் என்று எதிர்பார்த்தார். ஒரு தெளிவான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டாமினிக் Helmholtz - Zentrum Dresden - Rossendorf என்கிற ஜெர்மானிய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி.

அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும் வைரம் உருவாவதைப் பார்க்க முடியாமல் கூடப் போகலாம் என்று கருதினர். ஆனால் தங்கள் அறிவியல் சோதனையைத் தொடங்கிய உடனேயே டாமினிக் க்ராஸுக்கு வைரம் தொடர்பான சமிக்ஞைகள் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

"தெள்ளத் தெளிவாக வைரத்துக்கான அறிகுறிகள் எங்களுக்குக் கிடைத்தது மிக ஆச்சரியமாக இருக்கிறது. வைரம் அத்தனை வேகமாக உருவானது" என டாமினிக் க்ராஸ் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். மேலும் "இது என் அறிவியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய தருணம்' என்றும் கூறினார்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களில் வைரம் பெரிதாக இருக்கலாம். மில்லியன் கேரட் எடை கொண்ட வைரத்தை நினைத்துப் பாருங்கள்.

புளூட்டோ

சரி வைர மழை எப்படி இருக்கும்.

"வைர மழை திடமாகத் தான் இருக்கும். சொல்லப் போனால் அது பட்டை தீட்டப்படாத வைரமாக, வானிலிருந்து அக்கோள்களின் மையப் பகுதியில் விழும் வரை வளர்ந்து கொண்டிருக்கும் வைரமாக இருக்கும்" என டாமினிக் கூறினார்.

"அக்கோள்களில் விழும் வைரங்கள் நம் பூமியில் விழுவது போல வானத்திலிருந்து சட்டென நிலத்தில் விழாமல், மிக அடர்த்தியான மற்றும் அதீத வெப்பநிலை கொண்ட திரவத்தில் விழுகிறது. அது ஒரு பிரமாண்ட பணி அடுக்கைக் கிரகத்துக்குள்ளேயே உருவாக்க வழிவகுக்கிறது" என்று கூறினார்.

இருப்பினும், இந்த வைரத்தால் கூட அக்கோள்களின் மையப்பாறை போன்ற பகுதியைத் துளைக்க முடியவில்லை என்பதால், அப்பகுதியைச் சுற்றி வைரங்கள் ஓர் அடுக்கை உருவாக்குகின்றன.

நெப்டியூன் கோள் வெப்பமாக இருப்பதற்கான அடிப்படை என்னவென இதுவரை விஞ்ஞானிகளுக்கு ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை. அதற்கான விடை காண இது உதவலாம் என டாமினிக் நம்புகிறார்.

வைர மழையின் ஈர்ப்பு சக்தி, அது அடர்த்தியான அதீத வெப்பநிலை கொண்ட திரவத்தில் மூழ்கும் போது வெப்ப சக்தியாக மாறி, அதுவே நெப்டியூனின் வெப்பத்துக்கான ஆற்றல் சக்தியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சரி, செயற்கையாக வைரம் தயாரிக்கத் தொடங்கிவிடோம். அது நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறதா?

ஆம், நானோ வைரங்கள் மருத்துவத் துறையில், குறிப்பாகப் பரிசோதனைகளிலும், மின்சார சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நானோ வைரங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகிறது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்குச் செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது நாசா. ஒருவேளை அக்கோள்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டால், அப்போது வைர மழை பார்க்கவும் நாசா ஆலோசிக்கும் என்றே கருதப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?