Deep Sea NS
அறிவியல்

கும்மிருட்டு, உறையவைக்கும் குளிர் - ஆழ்கடல் எப்படி இருக்கும்?

NewsSense Editorial Team

நிலத்தை பற்றி நாம் தெர்ந்து கொண்ட அளவிற்கு நம்மில் பலருக்கு கடலை குறித்து தெரியாது. அதுவும் குறிப்பாக ஆழ்கடல் குறித்து. உண்மையில் ஆழ்கடல் எப்படி இருக்கும்? சுனாமியை நினைவுகூரும் இந்நாளில் ஆழ்கடல் குறித்த சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

ஆழ்கடல் குறித்து எளிமையாக இங்கே விளக்குகிறார் ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான முனைவர் நாராயணி சுப்பிரமணியம்.

முனைவர் நாராயணி சுப்பிரமணியம்

ஆழ்கடல் என்றால் என்ன?

200 மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்ட இடமே ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட வாழிடம்.

சூரிய ஒளி

·        200 மீட்டருக்கும் கீழே சூரிய ஒளியால் பயணிக்க முடியாது, ஆகவே இந்தப் பகுதிகளில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருக்கும். 1000 மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதி "Twilight zone" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயருக்கு "இருளும் ஒளியும் கலந்த பகுதி" என்று பொருள். இந்தப் பகுதியையும் தாண்டிய ஆழத்தில் எல்லாமே கும்மிருட்டுதான்.

மரியானா பள்ளத்தாக்கு

·        கடலின் ஆழம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்றால், இருப்பதிலேயே ஆழமான கடற்பகுதி எது? அந்த இடம் மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கிறது. மரியானா பள்ளத்தாக்கு என்ற இடத்தில் இருக்கும் Challenger Deep  என்ற இந்தப் பகுதியின் ஆழம் 10,920 மீட்டர்! அதாவது கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர்கள்! நிலத்தின் மிகவும் உயரமான சிகரமான எவரெஸ்டை இந்த இடத்தில் தூக்கிப் போட்டால்கூடக் கடற்பரப்பைத் தொட 2 கிலோமீட்டர் மீதம் இருக்குமாம்!

மனிதர்களால் தாக்குப்பிடிக்க முடியாது

·        கடலுக்குள் செல்ல செல்ல, ஒவ்வொரு 10 மீட்டர் ஆழத்துக்கும் 1 அட்மாஸ்பியர் அழுத்தம் அதிகரிக்கும். இதையே வைத்துக் கணக்குப் போடுங்களேன். சேலஞ்சர் டீப் பகுதியின் சராசரி அழுத்தம், கடற்பரப்பைப் போல 1000 மடங்கு இருக்குமாம்! மனிதர்களால் அந்த அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கவே முடியாது, அந்த அழுத்தமே நம் உடலை  நசுக்கிவிடும்.

வெப்பநிலை

·        கடலுக்குள் செல்லச் செல்ல வெப்பநிலையும் குறைந்துகொண்டே இருக்கும். ஆழ்கடலின் தரைப்பகுதிகளில் சராசரி வெப்பநிலையே 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்தான். அதாவது, தண்ணீர் ஐஸாக மாறும் வெப்பநிலையை விடக் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான். இந்த உறையவைக்கும் குளிர்தான் ஆழ்கடலில் அதிகமாகக் காணப்படுகிறது.

உணவு

·        சூரிய ஒளியே இல்லை என்பதால் ஆழ்கடலில் தாவரங்களும் வளராது. அதனால் இங்கு உணவுத்தட்டுப்பாடும் அதிகம்.

·        குளிர், அழுத்தம், உணவுத் தட்டுப்பாடு போன்ற எல்லா பிரச்சனைகளையும் மீறி, இங்கே இருக்கக் கூடிய உயிரினங்கள் தாக்குப் பிடிக்கின்றன. "என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா" என்றபடி பல்வேறு தகவமைப்புகளோடு ஆழ்கடல் சூழ்நிலையை எதிர்கொண்டு பீஸ்ட் மோடிலேயே வாழ்கின்றன.

நீரும் நெருப்பும்

·        நீரும் நெருப்பும் சேருமா? அப்படி ஒரு சூழலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆழ்கடலின் குளிரில்கூட எரிமலைகள் உண்டு, தெரியுமா?! கடலுக்கு அடியில், வேதிப்பொருட்கள் கொண்ட அதிவெப்பமான நீரை உமிழும் வெந்நீர் ஊற்றுகள் உண்டு. இவற்றின் சராசரி வெப்பநிலையே 400 டிகிரி இருக்குமாம்! இந்த வெப்பத்திலும் உயிரினங்கள் வசிக்கின்றன!

பள்ளத்தாக்குகள்

·        நிலத்தில் இருப்பது போலவே ஆழ்கடலிலும் பள்ளத்தாக்குகள், மலைச்சிகரங்கள், மலைத்தொடர்கள் எல்லாமே உண்டு. அட, இவ்வளவு ஏன், கடலுக்கு அடியில் குளங்கள்கூட உண்டு! அதிகமான உப்புத்தன்மை கொண்ட நீர், சுற்றியுள்ள கடல்நீரை விட அதிக அடர்த்தி கொண்டது என்பதால், அது தனியான ஒரு குளமாகக் கடலுக்கு அடியிலேயே தேங்கிவிடும்.

·        ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்ய நிறைய உபகரணங்களும் நிதி உதவியும் தேவை என்பதால் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளையே நாம் சில ஆண்டுகளாகத்தான் செய்துகொண்டிருக்கிறோம். அதனால் ஆழ்கடல் பற்றி நமக்குத் தெரிந்தது ரொம்பவே குறைவு. நிலவையும் செவ்வாய்கிரகத்தையும் நாம் புரிந்துகொண்ட அளவுக்குக் கூட நம்முடைய பூமியிலேயே இருக்கும் கடலைப் பற்றி நமக்குத் தெரியாது.

இப்போது வந்துகொண்டிருக்கும் அறிவியல் முன்னேற்றங்களால் ஆழ்கடல் ஆராய்ச்சி இன்னும் மேம்படும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இதுவரை கிடைத்த தகவல்களே நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. "ஆனால் இதெல்லாம் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் இன்னும் அமர்க்களமா இருக்கும்" என்று ஆழ்கடல் விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?