சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாளே, சித்திரை 1 - தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வருடங்கள் 60ல் 36வது ஆண்டாக அமைந்துள்ளது இவ்வருட சுபகிருது. சுபகிருது என்றால் நற்செய்கை என்று பொருள். மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று அமைக்கப்பட்டது. இருப்பினும் தமிழ் மாத முறைப்படி, சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை ஆகும்.
சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். மலையாளம், மணிப்பூர், அசாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்று விழாக்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!
சுபகிருது தன்னிலே சோழதேச சம்பாழ்
அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்
நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்
பொருள் : இந்த சுபகிருது ஆண்டில், சோழ நாட்டிற்கு சிறிது பாதிப்பு உண்டாகும். (அப்போதைய சோழ நாடு திருச்சியில் தலை நகராகவும் பிறகு கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலை நகராகக்கொண்டு இருந்தது. பரந்து விரிந்த சோழ ஆளுகை காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுதலும் அடைந்தது)
மண்பாண்டங்களின் விலை குறையும். (இப்பொழுது மண்பாண்டங்களை மட்டும் மனதில் கொள்ளாமல் இதர உலோக பாத்திரங்களையும் சொல்வதாகக் கணக்கில் கொள்க) நல்ல மழை பெய்யும். ஆனால் பாதிப்பு இருக்காது. பல விளைச்சல்கள் பெருகும். என்பது சுபகிருது ஆண்டிற்கான பாடலின் விளக்கமாகும்.
சூரியனை மையமாக வைத்தே அனைத்தும் இயங்கினாலும், சந்திரனான பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமியிலும் சிறப்பு நாட்களாக, வழிபாடுகள் அமைகிறது.
சித்திராப்பெளர்ணமி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டும் வழிபாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது.
மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் சிறப்பான காலமாகும். உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமல்லாமல், அறுவடை செய்யப்பட்டுச் செழிப்புடன் இருக்கும் மகிழ்ச்சியான காலம் இது.
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி! சூரியனின் உதயத்தைக் கொண்டே ஒவ்வொரு நாளும் தொடங்கி முடிகிறது. சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், சித்திரை 1 - தமிழ்ப் புத்தாண்டு.
சரியாக வடகிழக்கு புள்ளிக்குச் செல்லும் காலம்தான், ஆடி 1 - ஆடி பிறப்பு. மீண்டும் கிழக்கு நோக்கி வரும்போது, ஐப்பசி 1 – தீபாவளி பண்டிகையுடன் கொண்டாடப்படுகிறது. மீண்டும் சரியாகத் தென்கிழக்குப் பகுதிக்கு வரும் போது தை 1 – பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இப்படியாக.
வானியல் மாற்றங்களையும், அதைச் சார்ந்த பருவ கால மாற்றங்களையும் கொண்டு சித்திரை ஒன்று அன்றே தமிழ் மாதப்பிறப்பு என வழக்கப்படுத்தி வணங்கி வருகின்றனர்.
வசந்த காலத்தின் தொடக்கமான இந்த இளவேனிற் காலத்தில் பல்வேறு சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புராண காலத்தில் மட்டுமல்லாமல் பல்லவ, சோழ காலத்திலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
கும்பகோணம் அருகிலுள்ள மானம்பாடி என்ற ஊரில் நாக நாதசுவாமி கோவிலில் , சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி ஏராளானமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. மாதத்தின் சித்திரைத் திருநாளுக்கு (சித்திரை நட்சத்திரம் வரும் நாள்) ஏழு
நாட்களுக்கு முன்னரும், சித்திரைத் திருநாளுக்குப் பிறகு ஏழு நாட்களும் என ஆக மொத்தம் 15 நாட்கள் விழா நடத்தப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில் தமிழ்க்கூத்து நடைபெற்றதைத் தெரிவிக்கிறது.
தமிழ்க்கூத்து நடந்ததற்கான சான்றாக, முதலாம் குலோத்துங்க சோழரின் 18ம் ஆட்சியாண்டைக் குறிக்கும் இக்கல்வெட்டு (கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32) குறிக்கிறது.
சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்குச் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகள்,
சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் உள்ள உத்தமசோழரின் செப்பேடுகள், கச்சிப்பேடு நகரின் ஊரகப் பெருமாள் கோயிலில்
சித்திரைத் திருவிழா நடந்த பொழுது ஏற்பட்ட வரவு செலவுகளை ஆவணப்படுத்தியுள்ளது.
சித்திரைத் திருவிழாவிற்கான அனைத்து நாட்களிலும் நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்கும், இறைவன் திரு வீதிஉலா வரும் பொழுது பணி செய்யும்
சிவனடியார்களுக்கும், இறைவனுக்கும் அமுது செய்விக்க நிலம் ஒன்று தானமாக வழங்கப்பட்டதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. விழாக்களில் ஆடற்கலையான கூத்து வகைகள் வரிசைப்படுத்தப்பட்டு விழாக்கோலமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
1. சாந்திக் கூத்து அதில் உட்பிரிவாக, சொக்கம் கூத்து, மெய்க் கூத்து, அவிநயக் கூத்து. போன்றவையும், சாக்கைக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, விநோதக் கூத்து என வகைப்படுத்தப்பட்டு, கோயில் விழாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிகழ்த்தப்பட்டன.
பன்னெடுங்காலமாகவே சிறப்பு மிக்க சித்திரை திருநாளானது விழாக்கள் எடுத்துக் கொண்டாடப்பட்டுள்ளதை அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்வதும், அவர்களுக்கு நாம் தெரியப்படுத்தலும் அவசியமாகும்.
சிலப்பதிகாரத்தில் இந்த சூரியன் பெருமையை விளக்கும் விதமாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரியனைப் போற்றுவோம், சூரியனைப் போற்றுவோம்! காவிரி நாடன், சோழன் ஆணைச் சக்கரம் போலப் பொன் மலை மேருவைச் சுற்றி வருவதால், அந்த சூரியனைப் போற்றுவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோக கலைகளிலும் சூரிய நமஸ்காரம் என்ற முறையை இன்றளவும் மக்கள் கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சித்ரா பௌர்ணமி : சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும். பாவ புண்ணியக்கணக்கு எழுதும் சித்ரகுப்தர் வழிபாடு, இந்த நாளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மனோசக்தி கூடி பலம் பெறும் சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து வழிபடுவதால், மனதை செம்மைப்படுத்துகிறார் சித்ரகுப்தர்.
சித்திரை பரணி விரதம் : சித்திரை பரணி நட்சத்திரத்தன்று பைரவரைப் பூஜித்து விரதமிருந்தால் எதிரிகள் தொல்லை அகலும். முன்னேற்றத் தடைகள் முற்றிலுமாக விலகும்.
அள்ள அள்ளக்குறையாத அட்சய திருதியை நாளில் தன தரும செயல்களை மேற்கொள்வது அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும். அன்றைய நாளில் தயிர்ச்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் பன்னிரண்டு நாட்கள், மதுரையில் ‘சித்திரைத் திருவிழா’ நடைபெறுகிறது. இந்த விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய இரு முக்கிய பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.
சித்திரை மாதம் கோடைக் காலத்தைக் கணக்கில் கொண்டு சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பரசுராமர் அவதாரம் நிகழ்ந்தது. வேதங்களைக் காக்க மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தது எல்லாம் சித்திரை மாதத்தில் தான்.
அதுமட்டுமல்ல… சார்லி சாப்ளின்,மாவீரன் அலெக்ஸாண்டர், விக்டோரியா மகாராணி, ராணி எலிசபெத், காரல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், மார்கோனி, டார்வின், பாவேந்தர் பாரதிதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஜாக்கிசான், தீரன் சின்னலை, பாரதிதாசன், சந்திரபாபு நாயுடு, சச்சின் டெண்டுல்கர்,இன்னும் நிறைய திரைப்பிரபலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள் போன்றோர் பிறந்தது சித்திரை மாதத்தில்- ஏப்ரல் மாதத்தில் தான்.
சிறப்பு மிகுந்த இந்த சித்திரை மாதம், அனைவருக்கும் சீரும் சிறப்புமாக அமையட்டும். !
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.