சனாதனம் பெண்களுக்கென ஒரு தனி இடத்தைக் கொடுத்திருக்கிறது, அந்த வட்டத்துக்குள் தான் அவர்கள் இயங்க வேண்டி இருப்பதாகச் சிலர் குற்றச்சாட்டு சுமத்துவதை இப்போதும் இணைய தளத்தில், சமூக வலைத்தளங்களில் பார்க்க முடியும்.
அது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, இறைவிகளுக்கும் பொருந்தும் எனப் பலர் பல உதாரணங்களாகக் குறிப்பிடுபவற்றைப் புராணக் கதைகள் நெடுக பார்க்க முடிகிறது.
சீதா தேவி தீ குளித்தது, ஹஸ்தினாபுரத்தில் திரெளபதி மானபங்கப்படுத்தப்பட்டது, அம்பா சிகண்டியாக மாறி பீஷ்மரைப் பழிவாங்கியது... தொடங்கி விநாயகி என ஒரு இறைவியையே புராணங்களும், இதிகாசங்களும் பேச மறந்துவிட்டதாக அல்லது மறைத்துவிட்டதாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அல்லது செப்டம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுக்க பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
ஆனை முகம் கொண்ட ஆண் தெய்வமான விநாயகரைப் போற்றும் இதே நிலப்பரப்பில், விநாயகி என ஒரு பெண் தெய்வம் இருந்திருப்பதாகவும், அத்தெய்வத்தை இந்தியர்கள் வழிபட்டு வந்ததாகவும், அப்பெண் தெய்வம் விநாயகரின் மனைவி என்றும் தி ஸ்க்ரோல் வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சரி, விநாயகி என ஒரு பெண் கடவுளர் இருந்திருக்கிறார் என்றால், அவருடைய திரு உருவச் சிலைகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால்... நம் தமிழ்நாட்டிலேயே சில சிலைகள் இருப்பதாக சில முன்னணி வலைத்தள கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியத் தொல்லியல் துறையினரால் சென்னையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், செங்கல்பட்டில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர்களுக்கு முந்தைய கால, மூன்று அடி விநாயகி சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக 2021 டிசம்பரில் டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் ஒரு செய்தி பிரசுரமாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக வணங்கப்படும் விநாயகர் சிலையைப் போல, விநாயகி சிலைகள் காணக் கிடைப்பதில்லை என்றும், இப்படி விநாயகி சிலை கிடைத்திருப்பது அரிதிலும் அரிதான விஷயம் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதே போன்ற ஆனை முகம் கொண்ட விநாயகி சிலை, சில ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரும்பேடு என்கிற கிராமத்தில் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
விநாயகி கடவுளரை வட இந்தியாவில் வழிபட்டு வந்ததாகவும், தென் இந்தியாவில் விநாயகி தெய்வத்தை வழிபடுவது அரிது என்றும், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் அரிதிலும் அரிது என இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டு நிபுணர் பி டி நாகராஜன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிடம் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கடைக் கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான தானுமாலயன் கோயிலில் ஒரு விநாயகி சிலை இருப்பதாக ஸ்க்ரோல் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், சிறிய இடை, பெண்களைப் பொன்ற மார்பகம், கையில் ஆயுதங்களோடு இருக்கிறது அந்தத் திருவுருவ சிலை. இது போன்றதொரு விநாயகி சிலையைப் பார்ப்பது அரிதிலும் அரிது என்கிறார் ஓய்வுபெற்ற அகழாய்வுத் துறை அதிகாரி சி சாந்த லிங்கம்.
மத்ஸ்ய புராணத்தில் கிபி 550ஆம் ஆண்டு வாக்கில் விநாயகி தெய்வம் பற்றிய குறிப்புகள் இருப்பதாக பாலாஜி முண்ட்குர் என்கிற ஆய்வாளர் ஸ்க்ரோல் வலைத்தளத்திடம் கூறியுள்ளார். அப்புராணத்தில் 200 பெண் தெய்வங்கள் பட்டியலில் விநாயகி ஒருவராகவும், சிவனின் திரு அவதாரங்களில் ஒருவராகவும் பட்டியலிடப்பட்டு இருக்கிறார்.
விநாயகி தெய்வத்தைப் பற்றி மத்ஸ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது போலவே, ராஜஸ்தான் மாநிலத்தில் ராய்ர் (Rairh) பகுதியில் டெரா கோட்டவில் விநாயகி உருவச் சிற்பங்கள் கிடைத்திருப்பதாகவும் ஸ்க்ரோல் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அச்சிற்பங்களும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை.
ஒடிசா மாநிலத்தில் ஹிராபூர் என்கிற பகுதியில் உள்ள தாந்திரீக கோயிலில் 64 யோகினிகளில் ஒருவராக விநாயகி இருப்பதாக அதே தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே போன்ற விநாயகி சிலைகள் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காணக் கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் புலிக் கால் கொண்ட விநாயகி (வியாக்ர பாத விநாயகி) சிற்பம் ஒன்று தூணில் வடிக்கப்பட்டு இருப்பதாக ஸ்க்ரோல் தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இந்து மதத்தில், எல்லா கடவுளருக்கும் ஒரு பின்னணிக் கதை இருக்கும். சிவனை வழிபடுபவர்கள், சிவனிடமிருந்து தான் எல்லாமே தோன்றியது என்பர். விஷ்ணுவை வழிபடும் வைணவர்கள், திருமால் தான் அநாதி, அனந்தன் என்று பெருமை கொள்வர். சக்தி உபாசகர்கள், ஆற்றலின் வடிவாக இருக்கும் ஆதிபராசக்தி தான் எல்லாவற்றுக்கும் மூலம், அவர் தான் அண்டப் பிரம்மாண்ட கோடி அகிலாண்ட நாயகி என்பர்.
அப்படி விநாயகி தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்தகாசுரன் என்பவர், சிவனின் மனைவியான பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அவரை சிவபெருமான் அழிக்க முயன்றாலும் அவரை கொல்ல முடியவில்லை. அந்தாசுரரின் ரத்தம் ஒரு சொட்டு கூட நிலத்தில் படாமல் இருந்தால் தான் அவரை அழிக்க முடியும்.
எனவே பார்வதி தேவி, பிரம்மா, விஷ்ணு, இந்திரன் போன்ற தெய்வங்களின் பலமாகத் திகழும் தேவியர்களின் (அவர்களது மனைவியர்களின்) சக்தியைக் கோருகிறார். அப்படித் தான் கணேசரின் சக்தி உருவாகி, அந்தகாசுரரின் ரத்தத்தைக் குடித்து அவரை வதம் செய்ததாகக் கூறுகிறார் தேவ்தத் பட்நாயக்.
விநாயகி தெய்வம், பார்வதி அம்மையாரின் உதவியாளர்களில் ஒருவரான மாலினி என்றும், இவர் தான் விநாயகப் பெருமானைக் கவனித்துக் கொண்டவரும் என்றும் கூறப்படுகிறது.
இனி விநாயகரை வழிபடும்போதெல்லாம் விநாயகி தேவியையும் ஒரு நொடி நினைத்துக் கொள்ள மறக்காதீர்கள். இனிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட வாழ்த்துகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust