வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் சீசன் ஒன்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது சென்னை அணி. ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தாவிடம் செமத்தியாக அடி வாங்கியிருந்தாலும் லக்நௌவை ஊதித்தள்ளி முதல் வெற்றியை சுவைத்துவிடலாம் என கணக்கு போட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆனால் ஒரே ஓவரில் ஆப்பை சொருகி சென்னை அணியின் கனவை தவிடு பொடியாக்கிவிட்டது லக்னோ. சென்னையை அணியை வென்றதை கண்டு லக்நௌ அணியின் ஆலோசகர் கம்பீர் ஆர்ப்பரித்தார். பின் சில நிமிடங்கள் இடைவெளியில் சென்னையை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.
சென்னை அணியின் தோல்வியை விட கம்பீர் - தோனி சந்திப்பும், கம்பீரின் ஆர்ப்பரிப்பு காட்சிகளும் தான் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்டாய் அமைந்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது எப்படி?
டாஸை இழந்தாலும் மாஸாக முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி அட்டகாசமாய் இன்னிங்ஸை தொடங்கியது மஞ்சள் படை. உபாயம் - உத்தப்பா.
முதல் ஓவரில் மூணு பௌண்டரி, இரண்டாவது ஓவரில் ஒரு பௌண்டரி, சிக்ஸர் என எடுத்த எடுப்பிலேயே உத்தப்பா பின்னி பிடலெடுக்க, மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜோ ஒரு ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு மொயின் பாய் வந்தார். இந்த இரு பேட்ஸ்மேன்களிடம் சிக்கி சின்னாபின்னமாயினர் லக்நௌ ஃபீல்டர்கள். பவர்பிளேவிலேயே 73 ரன்கள் குவித்தது சென்னை.
எட்டு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 27 பந்துகளில் அரைசதம் விளாசிய கையோடு உத்தப்பா நடையை கட்டினார். அவர் விட்ட இடத்தில் இருந்து ஷிவம் துபே தொடங்கினார்.
மொயின், ராயுடு, ஜடேஜா என யாருமே நேரத்தை வீணடிக்காமல், பந்துகளையும் மென்று முழுங்காமல் அதிரடியாய் விளையாட, சென்னை அணியின் ரன்ரேட் வேகம் குறையாமல் சீராய் சென்றது.
துபே ஒரு ரன் எடுத்தால் அரை சதம் என்ற சூழலில், அவரது ஆசையில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டார் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான். துபே கனவு கானல் நீராய் போனது.
துபே வெளியேற, மகேந்தர சிங் தோனி களம்புகுந்தார். முதல் பந்தையே சிக்ஸருக்கு தூக்கினார். ஐபிஎல் வரலாற்றில் தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸர் அடிப்பது இதுதான் முதல் முறை.
இந்த ஒன்னு போதும் இந்த சீசன் முழுக்க பேசும் என கொண்டாடி தீர்க்க தொடங்கினர் தோனி ரசிகர்கள்.
உத்தப்பா பௌண்டரியுடன் ஆரம்பித்து வைத்த சென்னை அணியின் இன்னிங்க்ஸை, பௌண்டரி வைத்து முடித்துக் கொடுத்தார் தோனி.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.
பெரிய இலக்கை துரத்தினாலும் எந்த பதற்றமும் இன்றி நேர்த்தியாய் சேசிங் செய்ய தொடங்கியது லக்நௌ.
முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை லக்நௌ.
ஆட்டத்தில் முதல் முறையாக அப்போது பிரிட்டோரியஸ் பந்து வீச வந்தார். கே.எல். ராகுல் தான் சந்தித்த பிரிட்டோரியஸ் ஓவரின் முதல் பந்திலேயே வீழ்ந்தார்.
ஆனாலும் லக்நௌ நம்பிக்கையுடன் ஆட்டத்தில் ஷாட்டுகளை விளாசியது. 18 ஓவர்கள் முடிவில் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை கையில் தான் அப்போது ஆட்டம் இருந்தது.
மேட்ச்சை ஈசியாக ஜெயித்தால் ரசிகனுக்கு எப்படி பிபி ஏறும் என கவலைப்பட்டதோ என்னவோ, 19வது ஓவரை வீச ஷிவம் துபேவை அழைத்தது சென்னை அணி.
அந்த ஒரே ஓவரில் 25 ரன்கள் எடுத்து ஷிவம் துபேவை வைத்துச் செய்தார் எவின் லெவிஸ்.
இறுதியில் மூன்று பந்துகள் மீதம் வைத்து சென்னையை வென்று, ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது லக்நௌ. ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்று சென்னை ரசிகர்களின் கிட்னி, இதயத்தை மட்டும் வென்றது மஞ்சள் படை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் தீபக் சாகர், ஷர்த்துல் தாக்கூர், ஹேசில்வுட் இல்லாமல் திசை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.