Rajasthan Royals Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : இப்படியும் ஒரு அணி தோற்க முடியுமா? அதிரவைத்த கொல்கத்தா | RR vs KKR

NewsSense Editorial Team

இந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தான் இந்தியாவில் தீபாவளி. ஆனால் ஐபிஎல் ரசிகர்கள் நேற்று இரவே தீபாவளி கொண்டாடிவிட்டனர்.

மும்பையின் பிரபோர்ன் மைதானம் வானவேடிக்கையால் அதிர்ந்தது.

ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா என இரு அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு பந்துகளைக் கொளுத்தினர்.

36 பௌண்டரி, 18 சிக்ஸர்கள், 40 ஓவர்களில் 417 ரன்கள் என ரசிகர்களை மிரளவைத்தனர்.

வெறும் ரன் மழை மட்டும் பொழிந்த ஆட்டம் என நினைக்கவேண்டாம். ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள், அதுவும் ஹாட்ரிக்குடன்.

இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நிறைந்திருந்த ராஜஸ்தான் கொல்கத்தா இடையிலான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது எப்படி?

அந்த கதையைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

KKR


நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சேஸிங்கை தேர்ந்தெடுத்தது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பட்லர் - படிக்கல் இணை களமிறங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இரண்டு ரன்கள் தான். ஷிவம் மவி வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பௌண்டரி அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்தார் படிக்கல். மூன்றாவது ஓவரில் இருந்து பட்லரின் ஆட்டம் ஆரம்பமானது. பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்.

பத்தாவது ஓவரை வீசிய நரைன் பந்தில் படிக்கல் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். ஆம் படிக்கல் அடித்த 24 ரன்கள் போக மீதம் அடித்த ரன்கள் எல்லாம் பட்லர் உடையது தான்.

'யார் பந்து வீசினாலும் அடி, ஃபீல்டர்களை நாலாபுறமும் ஓடவிட்டு டயர்டாக்கு' - இதுதான் பட்லரின் ஆட்ட பாணியாக இருந்தது.

யார் பௌலிங் போட்டாலும் அடிக்கிறார், எப்படி பௌலிங் போட்டாலும் விளாசுகிறார் எனக் கொல்கத்தா அணியின் கேப்டனிடம் கெஞ்சாத குறையாக பௌலர்கள் கதறினர்.

RR

பட்லருடன் இணைந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் தனது பாணியில் தனக்கு கிடைத்த பந்துகளை எல்லாம் பறக்கவிட ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் அடங்க மறுத்தது.

15 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். ரசிகர்களே Get Ready Folks; 1st Half முடிந்து Interval வரப்போகிறது , இனிமேல் ஆட்டத்தின் உச்சக்கட்ட அதிரடிக்கு ரெடியாகுங்க என சரமாரி விளாசல் மூலம் சிக்னல் கொடுத்தனர் பட்லர் - சாம்சன் இணை.

அப்போது முதல் முறையாக இந்த ஆட்டத்தில் பந்துவீச வந்தார் ரஸ்ஸல். 16வது ஓவரின் இரண்டாவது பந்தில் சாம்சனை தூக்கினார். 19 பந்துகளில் மூணு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 38 ரன்கள் எடுத்து வெளியேறினார் சாம்சன்.

அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார் பட்லர். ஆனால், அதே ஓவரில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அவர் 61 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார்.

பட்லர்

அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் 18,19 ஓவர்களில் சோர்ந்தது ராஜஸ்தான். இந்த இரு ஓவர்களில் சேர்த்து மொத்தமாக 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும், இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆனால், கடைசி ஓவரில் ஹெட்மேயர் இரு சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி.

ஆட்டத்தின் முதல் பாதி முடிய, ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வெறி ஏற்றிக்கொண்டது கொல்கத்தா.

இமாலய இலக்கை சேசிங் செய்ய புது திட்டத்துடன் சுனில் நரைன் மற்றும் ஆரோன் பின்சை அனுப்பியது கொல்கத்தா நிர்வாகம்.

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார் சுனில் நரைன். கொல்கத்தா கூடாரம் அதிர்ச்சி அடைந்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அணிக்கு தெம்பூட்ட தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து பௌண்டரிக்கு அனுப்பினார்.

KKR

இரண்டாவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச, மீண்டும் அடுத்தடுத்து இரு பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பி வைத்தார் ஷ்ரேயாஸ் அய்யர்.

மூன்றாவது ஓவரை போல்ட் வீச, தனது பங்குக்கு இரு பௌண்டரி அடித்தார் ஃபின்ச்.

நான்காவது ஓவரில் பௌண்டரி ஏதும் இல்லை; ஐந்தாவது ஓவரில் ஆளுக்கொரு பௌண்டரி அடித்தனர். பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச அஷ்வின் வந்தார். அய்யர் ஒரு பௌண்டரி அடிக்க; ஃபின்ச் ஒரு சிக்ஸர் விளாச ஆறு ஓவர்கள் முடிவில் 57 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

அங்கிருந்து ஃபின்ச் ஆடிய ஆட்டம் வேற ரகம். சாஹல் வீசிய ஏழாவது ஓவரில் மூன்று பௌண்டரிகள் உட்பட 17 ரன்கள்.

மெக்கோய் வீசிய எட்டாவது ஓவரில் 19 ரன்கள் எனக் கொல்கத்தாவின் ஸ்கோர் சிறுத்தை பாய்ச்சலில் இலக்கை நோக்கி நகர்ந்தது.

ஒன்பதாவது ஓவரை பிரசித் வீசினார். ஃபின்ச் இந்த ஓவரில் இரு பௌண்டரி வைத்தார்; ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரசித் வலையில் சிக்கினார் . 28 பந்துகளில் 9 பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என 58 ரன்கள் அடித்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா 9 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

சஹல்


அவர் விட்ட இடத்திலிருந்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்திரமாக ரன்ரேட்டை பார்த்துக் கொண்டார். சாஹல் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்துவிட்டு அவரிடமே வீழ்ந்தார் நிதிஷ் ராணா. அப்போது மூன்று விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 7 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கொல்கத்தாவின் வேகத்தைப் பார்த்தால் 18-வது ஓவரிலேயே மேட்சை முடித்துவிடும் எனத் தோன்றியது

நிதிஷ் ராணா வெளியேறியதும் ஆண்ட்ரே ரஸ்ஸல் களம்புகுந்தார். ஆனால் தான் சந்தித்த முதல் பந்திலேயே அஷ்வினிடம் வீழ்ந்தார்.

14-வது ஓவரை வீசிய அஷ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

ஆனால் அய்யர் ரன்ரேட் குறைவதை பொறுக்க முடியாமல் 15வது ஓவரில் விளாசி தள்ளினார். 15 ரன்கள் கிடைத்தது. கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன்கள்

அப்போது வெற்றிக்குத் தேவை ஐந்து ஓவர்களில் 51 ரன்கள். கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது.

போல்ட் வீசிய 16வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு தேவை 4 ஓவர்களில் 40 ரன்கள் ஆனது.

யுவேந்திர சாஹல் 17வது ஓவரை வீச வந்தார். அப்போது தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது.

முதல் பந்தில் வெங்கடேஷ் அய்யரை வீழ்த்தியவர், அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் மவி, பேட் கம்மின்ஸ் ஆகியோரையும் அனுப்பி வைத்தார். அதுவரை ரன் மழையில் நனைந்த ரசிகர்களுக்கு ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி விக்கெட் மழை என்றால் என்ன என்பது குறித்து புரியவைத்தார் சாஹல்.

ஹாட்ரிக் விக்கெட்டுடன் நான்கு பேரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் சாஹல் பறித்ததால், கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலையில் இருந்தது கொல்கத்தா. ஆனால் அதன் கைவசம் இப்போது இரண்டே விக்கெட்டுகள் தான்.

உமேஷ் யாதவ்

டிரென்ட் போல்ட் பந்து வீச வந்தார். அவரை ஒரு ஜோக்கர் போல ட்ரீட் செய்தார் உமேஷ் யாதவ். இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரியுடன் 20 ரன்கள் எடுத்தார். ஒரே ஓவரில் ஆட்டம் மீண்டும் தலைகீழானது.

கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பு 100-ஐ தாண்டி பறந்தது. இப்போது கொல்கத்தா வெற்றிக்குத் தேவை இரண்டு ஓவர்களில் 18 ரன்கள்.

பிரசித் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்தார். 20வது ஓவரை ஒபெட் மெக்கோய் வீச வந்தார். கொல்கத்தாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இருவரின் விக்கெட்டையும் பறித்தார் மெக்கோய். ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கொல்கத்தா.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு 40 ஓவர்களுமே விருந்தாய் அமைந்தன. ரன்கள் களமாக இருந்த ஆட்டத்தில் ரணகளத்தை ஏற்படுத்திய யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதற்காக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் 51 பந்துகளில் ஏழு பௌண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 85 ரன்கள் அடித்தார் ஷ்ரேயாஸ் அய்யர், ஆனால் அவை கொல்கத்தாவின் தோல்வியை தடுக்க முடியவில்லை.

மாஸ் வெற்றியால் பாயின்டஸ் டேபிளில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான். ஏழாவது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா 4 தோல்விகளுடன் தற்போது ஆறாமிடத்தில் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?