விருதுநகர் பெண் பாலியல் கொடுமை வழக்கு - முதல்வரின் காட்டமான உத்தரவு
Pexels
இளம்பெண்ணை வீடியோவைக் காட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் 18 வயதுக்கு குறைவானவர்கள். அவர்களை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பியிருக்கின்றனர். இந்நிலையில்,விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியிருக்கிறார்.
Petrol
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்ப சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ 102.96 காசுக்கும் டீசல் 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.92 .95 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலையேற்றத்தால் மக்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
Satellite
சீனா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க, இந்திய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. நேற்று நடைபெற்ற பாதுகாப்புத்துறைக்கான கவுன்சில் கூட்டத்தில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீனா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்கெனவே இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகள் சொந்தமாக கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய ராணுவமும் அமைக்க இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Ukraine Russsia War
உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல். ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாட்டு மக்களும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே நேற்று பெலீஸ் நாட்டுக்குச் சென்றனர்.
அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து ராணுவ பயிற்சி மையத்துக்கு இளவரசர் வில்லியம் நேரில் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார். உக்ரைனை பாதுகாக்கப் போராடி வரும் ராணுவ வீரர்கள், அந்நாட்டு மக்களுடன் தான் ஒன்றாகத் துணை நிற்பதாகக் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf) கட்சியின் ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். இதையொட்டி இம்ரான் கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்ரிருக்கின்றன. 20-க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி உறுப்பினா்களும் இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் அவரது ஆட்சி கவிழுமா என்ற கேள்வி ஏற்பட்டிருகிறது. இதற்கிடையில் இம்ரான் கான்மீது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக கூறி அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், `தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் பலர் பங்கேற்றனர்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி இம்ரான் கான், மந்திரிகள் 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்-ன் இந்த சீசனில் எந்த அணியிலும் இடம்பெறாத சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக களமிறங்கியிருக்கிறார். இதுகுறித்து கூறிய ரெய்னா, ‘வர்ணனையாளராக என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன். இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பிடித்துள்ளார். தேவையான ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வேன். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும். அந்தத் திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். தோனிக்குப் பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்’ என்றார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி அருகே மணல்திட்டு பகுதிக்கு சில மக்கள் தஞ்சமடைந்தனர். மண்டபம் அழைத்து வரப்பட்ட அந்த இலங்கை தமிழர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.