பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் தான் அவர் இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகமானது ஒரு சீர்திருத்தவாதியாக அம்பேத்கர் மற்றும் மோடியின் பங்களிப்பை ஒப்பிட்டுப் பேசுகிறது. அதற்கு முன்னுரை எழுதி உள்ள இளையராஜா மோடியின் பங்களிப்பு குறிப்பாக முத்தலாக், இலவச எரிவாயு திட்டம் , தற்சார்பு இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது என இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. சாலைகள், ரெயில்பாதை, மெட்ரோ ரயில் மற்றும் அதிவேக சாலைகள் போன்ற உலக தரமான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
சமூக நீதி என்று வரும்பட்சத்தில், பல சட்டங்களைக் கொண்டு வந்தது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் போன்ற நடவடிக்கைகளால் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு நரேந்திர மோடி சட்டப்பாதுகாப்பை வழங்கியுள்ளார்.
ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு மோடி அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதனால் பெண்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிப்பைத் தொடர முடியும்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சிந்திக்கும் போது, இலவச எரிவாயு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூகத்திற்கு அவர் வழங்கியுள்ள செய்திகள் தான் நியாபகத்திற்கு வரும்.
‘குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார்.
ஆளுமைகளாக, அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. இருவரும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்ததுடன் அதை ஒழிப்பதற்காகப் பாடுபட்டவர்கள்.
இருவரும் இந்தியா பற்றி பெரிதாகக் கனவு கண்டவர்கள். செயலின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.
இவ்வாறாக அப்புத்தக முகப்புரையில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com