தான் சமீபத்தில் நடித்து வெளியான படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எல்லாராலும் பேசப்படுகிறது என்பது கூட தெரியாமல், தேனி ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோவில் கிராமத்தில்,தன் அடுத்த பட ஷூட்டிங் பிரேக்கில் வேப்பமர நிழலில்,கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் பாட்டியின் நடிப்பு பேசப்பட , "நான் என்னத்த கண்டேன் தம்பி, இன்னும் படமே பார்க்கல, இது மட்டும் இல்ல, இதுவரை நான் நடிச்ச எந்த படத்தையுமே உடனே பார்த்தது இல்ல," என வெள்ளந்தித்தனம் மாறாத பேச்சிலிருந்து தொடங்கியது எங்களது உரையாடல்.
"எனக்கு சொந்த ஊரு காரியாபட்டி பக்கத்துல ஆவாரங்குளம் தான், வீட்டுக்காரர் இறந்து பதினைஞ்சு வருஷத்துக்கிட்ட ஆகப்போகுது,பதினஞ்சு வருசத்துக்கு முன்னயே நடிக்க வந்துட்டேன். நடிக்க வந்துட்டேன் அப்டின்னா, நடிக்கணும்னு சினிமாவுக்குள்ள வரல,அப்போ எங்க ஊருல தான் மிருகம்னு ஒரு படம் ஷூட்டிங் எடுக்க வந்தாங்க. அப்போ சினிமா செட்டுக்காக வீடு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க, அந்த வீட்டுக்கு செம்மண் முழுகுற வேலைக்குத்தான் என்னய கூட்டி வந்தாங்க. என்கூட இன்னும் எழுபது பேரு இருந்தோம். திடிருனு ஒரு நாள் தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் வேலை நடக்குற இடத்துக்கு வந்தாரு, எல்லாரையும் வரிசையில நிக்கவச்சு பார்த்துக்கிட்டே வந்தவரு, இந்தம்மா சரியா வரும்யானு சொல்லிட்டு போயிட்டாரு,என்னானு விசாரிச்சா, ஹீரோ ஆதிக்கு அம்மாவா நடிக்கத்தான் என்னய ஓகே சொல்லிட்டு போயிருக்காருன்னு தெரிஞ்சது"
எனக்கு பேச்சு மூச்சு இல்ல, நான் வீட்டு வேலைக்குத்தான் வந்தேன்,இந்த நடிப்பெல்லாம் நமக்கு வராது என்னய விட்டுருங்கன்னு சொன்னேன்., யாரும் கேட்குறமாதிரி இல்ல, அவ்ளோ பயத்துல எனக்கு அழுகையே வந்துருச்சு, அழுகையோட தான் என்னோட முதல் டயலாக்க பேசுனேன், முதல் டேக்குலயே ஓகே சொல்லிட்டாங்க,அங்க ஆரம்பிச்ச்சது தான் , ஒரு கிடாயின் கருணை மனு, மெர்சல்,விசுவாசம்னு முப்பது நாப்பது படத்துக்கு மேல நடிச்சுட்டேன்,
எல்லா டைரக்டருமே ஸ்பாட்டுக்கு போயி நிக்கும்போது ஒரு பயத்தோடதான் கேள்வி கேட்பாங்க, டயலாக் எல்லாம் சொல்லிருவீங்க் தானேன்னு, எனக்கு தெரிஞ்சத செய்யுறேன்னு சாமின்னு தான் நடிப்பேன், நடிச்சு முடிச்சதும் ரொம்பவே சந்தோஷப்படுவாங்க.அது மட்டும் தான் நான் வாங்குன ஒரே பேரு,
இப்போ இந்த ராமே ஆண்டாலும் படத்துக்கும் டைரக்டரு கூப்பிட்டு விட்டாரு, நான் போன அன்னைக்கு திருவிழா சீன் எடுத்தாங்க.நடிக்கிற வரை எல்லாருக்கும் இருந்த சந்தேகம் ஷூட்டிங் முடிஞ்சதும் ரொம்ப சந்தோசப்பட்டு போயிட்டாரு. இந்த படத்துக்கும் சூர்யா தம்பி தான் தயாரிப்பாளர், ஏற்கனவே சூரரைப்போற்று படத்துல பிளைடுல போற சீன்ல நடிச்சுருப்பேன். ஆத்தா ஆத்தான்னு சொல்றப்போலாம் என் சொந்த பேரன் மாதிரியே எனக்கு உள்ளுக்குள்ள துடிக்கும்.
இப்போ கூட அடுத்த படத்துலயும் சூர்யா தம்பி சத்யராஜ் கூட ஒரு சீனு நடிச்சேன், நடிச்ச முடிச்சதும் அன்னைக்கு சாயங்காலம் மேனேஜரு போன் பண்ணி, சூர்யா சார் சொல்லிட்டாரு,இனி நீங்களும் நம்ம குடும்பத்துல ஒரு ஆளு, கண்ணுக்கு பிரச்சனையாமே அதை சரி பண்ண சொல்லிருக்காரு ஒரு போன் ஒன்னு வாங்கி குடுக்க சொல்லிருக்காருன்னு சொன்னாரு.
இந்த கிழவிக்கு ,அந்த புள்ள செய்யணும்னு என்ன இருக்கு, சொந்தமா பந்தமா என்ன? மறுநாள் என்னய கூட்டிப்போயி ரெண்டு பவுனுக்கு சங்கிலி எடுத்துக்குடுத்துச்சு, இத்தன வருஷத்துல குண்டுமணி தங்கம் வாங்குறதுக்கு கூட நகைக்கட வாசல்ல போயி நின்னது இல்ல, இந்த புள்ள ரெண்டு பவுனுக்கு செயினு எடுத்துப்போட்டு ,ஆத்தா காலத்துக்கும் கழுத்துல கிடக்கணும்னு சொல்லி அனுப்பி வச்சச்சு, அது குடுத்த நகைக்காக சொல்லல, காலத்துக்கும் சூர்யா தம்பியும் அவுக குடும்பமும் நல்லா இருக்கணும்னு நான் கும்புடுற சாமிய எல்லாம் பார்த்து தெனம் வேண்டிக்கிறேன்.
இப்போ நிறைய பேரு போன் பண்ணுவாங்க,படம் நல்லாருக்கு நல்லா நடிச்சுருக்கன்னு, நான் என்னத்த கண்டேன் சொல்லுங்க, அந்த படம் ஷூட்டிங் முடிச்சுட்டு எதற்கும் துணிந்தவன்னு ஷூட்டிங் போயிட்டேன், இப்போ இந்த படத்துக்கு வந்துருக்கேன், கடைசி வரை எதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு கிளம்பி வந்துருவேன்.
எங்கள மாதிரி ஆளுகளுக்கு சம்பளம்னு ஒண்ணும் பேரு சொல்ற மாதிரி கெடயாது. அதுக்கும் சூர்யா சொல்லுச்சு, இனிமே ஐயாயிரத்துக்கு கொறஞ்சு நடிக்காத பாட்டின்னு, நம்ம காலம் போயிருச்சு,எனக்கெடுத்து என் மகள் ஊருல இருக்கா, கூலி வேலைக்கு போயிட்டு இருக்கா ரெண்டு புள்ளைகள வச்சுக்கிட்டு ,அதுக காலமாச்சும் நல்லா இருக்கணும்.