முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சரின் உறவினர்கள், நெருக்கமான அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் சோதனை நடைபெற்றது. கோவையில் மட்டும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடந்தது. சென்னையில் 7, சேலத்தில் 4, திருப்பூரில் 2, திருப்பத்தூரில் 1, நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரள மாநிலம் ஆனைக்கட்டியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பின் சொகுசு பங்களா என மொத்தம் 59 இடங்களில் ஒரேநேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை அறிந்தவுடன் எஸ்.பி.வேலுமணியின் வீடு முன்பு அதிமுகவினர் திரண்டனர். அவர்கள் போலீஸாரையும், திமுக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன், அதிமுக எம்எல்ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், பிஆர்ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகியோரும் வேலுமணி வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு வரை சோதனை நீடித்தது.
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சராக இருந்தபோது, 2016 ஏப்ரல் 26 முதல் கடந்த ஆண்டு மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில், 12 நபர்களின் துணையுடன் கூட்டுச்சதி புரிந்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 அளவுக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் 59 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் வராத பணம் என்ற அடிப்படையில் ரூ.84 லட்சம், சான்றுப் பொருட்களான அலைபேசிகள், பல வங்கிகளில் உள்ள லாக்கர் சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sonia Gandhi
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பாஜக-வும் வெற்றிபெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது.
காங்கிரஸின் இந்த வீழ்ச்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், தற்போது அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஓமிக்ரான்
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. இதையடுத்து சீனா லாக்டவுனைக் கையில் எடுத்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது. பல நகரங்களிலும் தீவிரமான லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று சீனாவில் புதிதாக 5280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்ட்டது. இது திங்கள்கிழமை ஏற்பட்ட தொற்றை விட 2 மடங்கு அதிகமாகும். இதனால்தான் சீனா பீதியடைந்துள்ளது. அதிக வேகத்தில் பரவக் கூடிய ஓமைக்ரான்தான் தற்போது சீனாவில் மீண்டும் பரவி வருகிறது. மிகுந்த சிரமப்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்திய நாடு சீனா. தற்போது மீண்டும் அங்கு கொரோனா வேகமாக பரவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளன
கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்தால் சீனாவின் பொருளாதார நிலை கவலைக்குள்ளாகும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். லாக்டவுன்கள் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
America
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 136 இந்தியர்களை காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு புள்ளிவிவரத் தின்படி அமெரிக்காவில் சுமார்ஒரு கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 5.87 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமா குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குஜராத்தின் அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 37 குடும்பங்களை சேர்ந்த 136 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற திட்டமிட்டனர். கடத்தல் கும்பல் மூலம் துருக்கி- மெக்ஸிகோ வழித்தடம் வாயிலாக அமெரிக்காவுக்கு செல்ல அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அண்மையில் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்ற அவர்களை காணவில்லை. அனைவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. இதுகுறித்து குஜராத் போலீஸார் கூறியதாவது:
குஜராத்தில் இருந்து 37 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கடந்த ஜனவரி 10 முதல் 20-ம் தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுள்ளனர். அவர்களின் பயண ஏற்பாடுகளை கடத்தல் கும்பல் செய்திருக்கிறது.
துருக்கியில் இருந்து மெக்ஸிகோவுக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிடப்பட் டுள்ளது.
ஆனால் துருக்கியை சேர்ந்த சில சமூகவிரோத கும்பல்கள், இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளன. அவர்களை விடுவிக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைபிணைத் தொகை கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இவ்வாறு போலீ ஸார் தெரிவித்தனர்.
குஜராத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், கடந்த ஜனவரியில் அமெரிக்க எல்லையில் கடுங்குளிரில் உயிரிழந்தனர். இதன்பிறகே இந்தியாவில் செயல்படும் மனித கடத்தல் கும்பல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இந்த கும்பல்களோடு தொடர்புடைய துருக்கி, மெக்ஸிகோ கடத்தல்காரர்கள் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு இந்தியர்களை அமெரிக்காவுக்கு கடத்தி வருகின்றனர். ஆனால் எல்லையை கடக்கும்போது அமெரிக்க பாதுகாப்பு படையினரால் இந்தியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
பயணத்தின்போதும் ஏராளமான இந்தியர்கள் உயிரிழக்கின் றனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பினர் வலியுறுத்தி யுள்ளனர்.
துருக்கியை சேர்ந்த சில சமூகவிரோத கும்பல்கள், இந்தியர்களை கடத்தி சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர்.
பீஸ்ட்
பீஸ்ட் - இசை வெளியீட்டு விழா இல்லையா?
தளபதி விஜய்யின் பட ரிலீஸுக்கு முன்னாள் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும். அதில் குட்டி கதைகளுடன் கொஞ்சம் அரசியலும் பேசுவார் விஜய். சில காலமாக விஜய் ஆடியோ லாஞ்ச்சில் அரசியல் பேசுவதன் மூலம் ரசிகர்களை தூண்டி, படத்தை ஓட வைத்து விடுகிறார். அதன் பின் தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கப்சிப் என காதை பொத்திக்கொள்கிறார் என்ற விமர்சம் எழுந்திருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'பீஸ்ட்'. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலர் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழா வருகின்ற 23ம் தேதி நடைபெறும் என சமூக வலைதளங்களில் ஒரு அரங்கின் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
வாட்சப்பில் வந்த அரங்கு மெர்சல் பட இசைவெளியீட்டு விழா நடைபெற்ற அரங்கு என்றும் படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்மூரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் படக்குழு கூறியுள்ளது.