சீமான்

 

Newssense

தமிழ்நாடு

'அரசு அல்ல தரிசு' - சீமான் ; 'சட்டமன்ற தேர்தலை விட மாபெரும் வெற்றி பெறுவோம்' - உதயநிதி

Antony Ajay R

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022க்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை, கோவை பகுதிகளில் சூடுபிடிக்கத்தொடங்கியிருந்தாலும் சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. திரைபிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலப்பாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ''தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அடிப்படைத்தேவை பூர்த்தி செய்யப்பட்டதா? மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அரசு, அரசு அல்ல தரிசு. முதன்மை சாலையிலேயே பயணம் செய்ய முடியவில்லை, உட்புறச் சாலைகளில் எவ்வாறு பயணம் செய்ய முடியும்?

மறைமுக தேர்தலாக இருப்பது பேரம் பேசுவதாகவும், கிளி ஜோசியம் போலதான். சுயேட்சை வேட்பாளர்களை பேரம் பேசும் நிகழ்வு நடக்க உள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாதவது, வேட்பாளராக சீட் பெறவேண்டும் என்றும், வாக்கிற்கு பணம் கொடுத்து வாக்கு பெற தயாராக உள்ளனர். மன்னன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி. ஒவ்வொரு முறையும் ஒதுக்கிய நிதி எங்கே? ஒவ்வொரு ஆண்டும் சாலை போடும் பணி நடைபெறுவது எந்த நாட்டில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளிக்கரனை ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக இருந்தது, ஆனால், குப்பையாகவும், பிளாஸ்டிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தான் உள்ளது.

அதிமுக வாக்கிற்கு பணம் விநியோகம் செய்ய வந்த இருவரை திமுகவினர் காவல் துறையிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அவர்களும் பணம் கொடுக்க வந்தவர்கள்தான். வாக்களிக்கும்போது நல்லவர்கள் யார் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் நன்மை நமக்கு, அயோக்கியர்களுக்கு வாக்களித்தால் அவர்களுக்கு மட்டுமே நன்மை. வாக்களிக்காமல் இருப்பது தேசிய குற்றம். ஊழல், லஞ்சம் ஆகியவை தேசிய மயமாக்கப்பட்டுள்ளது'' என சீமான் கூறினார்.

உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா ஆகியோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். வாக்களித்த பின் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ''சட்டமன்ற தேர்தலை காட்டிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றி திமுகவுக்கு கிடைக்கும். 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். நல்ல வரவேற்பு இருந்தது.

வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு தமிழக மக்கள் உரிய அங்கீகாரம் தருவர் என நம்புகிறோம். மேற்கு மண்டலத்தில் கண்டிப்பாக திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். திமுக பண விநியோகம் செய்வதாக வேலுமணி ஆதாரம் இல்லாமல் புகாரளித்துள்ளார். எனக்கு அமைச்சர் பதவி வழங்கலாமா என்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் , அமைச்சர் பதவி கொடுத்தால் அப்போது அது பற்றி பேசிக் கொள்ளலாம். முடிவெடுக்க வேண்டியது தலைமைதான்'' என்று கூறினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?