மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் பிரதான சாலையில் ஒரு இளைஞர் தன் கவாசாகி Z900 சூப்பர் பைக்கில் பயணிக்கிறார்.
அவர் பயணிக்கும் வழி நெடுக மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து அவர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுமாறு வற்புறுத்துகிறார்கள்.
ஒரு பெரிய அரசியல் தலைவரைப் போல மக்கள் அவரை மொய்த்து எடுக்கிறார்கள். அதே சமயம் இளைஞர்கள் அவருக்கு வழி விட்டு, அவருடைய திட்டமிடப்பட்ட பிறந்தநாள் விழாவுக்கு வழியனுப்பியும் வைக்கிறார்கள்.
மீண்டும் மற்றொரு கூட்டம் அவரை கட்டாயப்படுத்தி செல்ஃபி எடுத்துக் கொள்கிறது. 'சாமி வழி விடுங்க... சாமி மீட்டப்ல சந்திக்கலாம். ப்ளீஸ் சாமி நேரமாகிறது' என கெஞ்சுகிறார். அவரைச் சூழ்ந்த இளைஞர்கள் ஏதோ தேவதூதன் வந்தது போல அவரைத் தொட்டுத் தொட்டு கொஞ்சி மகிழ்கிறார்கள், படமெடுக்கிறார்கள்.
பெல்லாதி பகுதியை நெருங்கும் போது இளைஞர்களின் ஆராவாரம் தாளவில்லை. கனரக வாகனங்கள் எல்லாம் மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. அப்போது தான் டிடிஎஃப் என்கிற கோஷம் மெல்ல காற்றில் பரவுகிறது. இத்தனை அன்புக்கும், இளைஞர்கள் படையை வசீகரித்த மனிதரின் பெயர் வாசன். இவரது யூடியூப் சேனல் தான் Twin Throttlers. இவர் தன் ரசிகர்களை டிடிஎஃப் (Twin Throttlers Family) என்று அழைக்கிறார்.
டிடிஎஃப் வாசன், பெல்லாதியில் உள்ள டி என் 43 ஹோம்மேட் கடையின் மேல் மாடத்தை அடைகிறார். மஹேந்திர பாகுபலி எனும் நான்... என்கிற போது ஒரு கூச்சல், கும்மாளம், உற்சாகம் பீறிட்டது போல, வாசன் பேசத் தொடங்கியதும் இளைஞர்கள் தங்கள் தலைவன் வந்திறங்கிப் பேசுவது போல ஆர்ப்பரித்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் விஜய் ஒரு வாகனத்தின் மீது ஏறி நின்று ஆயிரக் கணக்கான மக்களோடு ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார் நினைவிருக்கிறதா. அப்படி டிடிஎஃப் வாசனின் காணொளியில் ஒரு சில நொடிகளுக்கு தனக்கு வந்த ஜனத் திரளலைக் காட்டுகிறார். அது விஜய்க்கு கூடியதை விடப் பெரிய கூட்டமோ என நம்மை சற்றே மலைக்க வைக்கிறது.
ஒரு பிரபல ஊடகத்தின் செய்தியாளர் அங்கு டிடிஎஃப் வாசனிடம் பேட்டி எடுக்கிறார். ஷாரூகான் தன் வீட்டின் மேல் மாடியிலிருந்து கொண்டு தன் ரசிகர்களைச் சந்திப்பார். அப்படி டிடிஎஃப் வாசன், வலையிட்டு தடுக்கப்பட்ட மைதானத்துக்குள் நின்று கொண்டு, தடுப்பு வலைக்கு வெளியே அலை அலையாக நின்று கொண்டிருந்த ரசிகர்களைச் சந்திக்கிறார்.
ஒருகட்டத்தில் பெல்லாதியில் ஒரு பெரிய ஜன நெருக்கடி ஏற்படுகிறது. கூட்டம், கட்டுக்கடங்காமல் போக, உதவி ஆய்வாளர் உட்படப் பல காவல்துறை அதிகாரிகள் வாசனிடம் வந்து கூட்டத்தைக் களைக்கச் சொல்கிறார்கள். அக்கூட்டத்தில் இருந்தவர்களின் வயதைப் பார்த்தால் பெரும்பாலும் 24 வயதுக்குள் இருக்கும். மொத்தம் 7,000 - 8,000 பேர் அங்குக் கூடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வாசனோ பாவங்க, வந்த பசங்களுக்கு ஏமாற்றமா போயிடும் என இளைஞர்களுக்கு சாதகமாகப் பேசுகிறார். நீங்கள் இடத்தை காலி செய்தால் தான் கூட்டம் வெளியே போகும், உடனடியாக கிளம்புங்கள் என காவல்துறை வாசனிடம் கூறுகிறது. அடுத்து என்ன ஆனதோ ஏதானதோ தெரியவில்லை.
டிடிஎஃப் வாசன் திடீரென ஒரு காரில் புறப்பட்டுவிட்டார். அவரை சுமார் 20 - 25 பைக்குகள் பந்தோபஸ்து போலப் பின்தொடர்ந்தன. வாசன் ஒரு வாழும் நாயகனாக 2K கிட்ஸ் மத்தியில் வாழ்ந்து வருவதை அவரது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த நாயக பிம்பம் இவருக்கு எப்படி உருவானது? யார் இவர்?
Twin Throttlers Family வாசன் ஒரு நடுத்தர காவல் துறை குடும்பத்தில் கோவை மாவட்டம் காரமடையில் பிறந்தவர். அப்பா காவல் துறையில் உதவி ஆய்வாளர். வாசனுக்கு அப்பாவோடு புல்லட்டில் பயணிப்பது அத்தனை பிடிக்கும்.
வாசன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே அவரது தந்தை காலமாகிவிட்டார் என வாசன் தன் யூடியூப் தளத்தில் பகிர்ந்திருந்த இணைப்பு ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது. அப்பாவின் புல்லட், அவருக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பாகவே இருந்தது.
படிப்பில் சுமாரான வாசனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என அம்மா நினைத்தார். நன்றாகப் படித்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பென் எடுத்தால் அப்பாவின் வாகனத்தை சரி செய்து கொடுப்பதாகக் கூறினார். அடித்துப் பிடித்து 10 & 12 வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களோடு தேறினார்.
அம்மாவின் தோட்டத்தில் வேலை பார்த்ததில் கிடைத்த பணம், மற்றவர்கள் கொடுத்த பணத்தில் சேமித்து வைத்ததை எல்லாம் அம்மாவிடம் கொடுத்து யமஹா R15 V3 வாகனத்தை வாங்கிக் கொண்டார்.
2017ஆம் ஆண்டு 'வாசன் என்ஃபீல்டர்' என்கிற யூடியூப் சேனலில் டிராவல் விலாகுகளைப் பதிவிட்டார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மெல்ல சமூக வலைதளங்களின் நேக்கு போக்குகளைக் கற்றுக் கொண்டார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Twin Throttlers என்கிற பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். கோ ப்ரோ காமரா, அதி நவீன பைக்குகள், வீடியோ எடிட்டிங்குக்கு ஆப்பிள் மேக் புக் என தன்னை முழுமையாக அப்கிரேட் செய்து கொண்டு, தினமும் ஒரு காணொளி என்பதைச் சூளுரைத்துப் பதிவேற்றினார். இன்னும் இரண்டு ஆண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் 27.6 லட்சம் சப்ஸ்கிரைபர்களைத் திரட்டிவிட்டார்.
டிராவல் விலாகுகள், அதிவேகமாக பைக்கை ஓட்டுவது, மருத்துவமனைக்குச் சென்றது, பைக் ஓட்டி விபத்துக்கு உள்ளானது, புதிய பைக் வாங்கியது, ஆர் ஜே பாலாஜி போன்ற பிரபலங்களோடு பேசியது என அனைத்து காணொளிகளாக்கிப் பதிவேற்றி வருகிறார்.
90ஸ் கிட்களுக்கு கோவா செல்வது எப்படி ஒரு பெரிய இலக்காகவே தொடர்கிறதோ, அப்படி 2K கிட்ஸ்களுக்கு லடாக் செல்ல வேண்டும் என்பதை ஒரு இலக்காக உருவாக்கியதில் வாசனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
வாசன், சுமார் 4 - 5 லட்சம் சப்ஸ்கிரைபர்களோடு லடாக் பயணத்தைத் தொடங்கியவர், லடாகில் இருந்து தமிழகத்துக்குத் திரும்பி வந்த போது அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சுமார் 8 - 9 லட்சமாக அதிகரித்து இருந்தது. அன்றிலிருந்து அவர் டிடிஎஃப் வாசனானார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு பிளாக் ஷீப் விருது வழங்கப்பட்டது.
இவரை ஆதரித்து இவர் பின் திரள்பவர்களில் பலரும் நடுத்தர கிராமப் புற இளைஞர்களைப் போல் தெரிகிறது. இவரது சேனல் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்ட போது ஏதோ ஒரு கிராமப்புறத்தில் வைத்து இளைஞர்கள் இவரைக் கொண்டாடித் தீர்த்தனர். இப்போது பெல்லாதியில் ஒரு ஹோட்டலே நிரம்பி வழியும் அளவுக்கு இவர் பின் கூட்டம் திரண்டுள்ளது.
இவர் எந்த ஒரு கட்சி, சாதி மதம் சார் அரசியல் போக்குகளை முன்னெடுக்கவில்லை. பெரிய மீடியா பின்புலம் இல்லை. தன்னை சந்திக்க வருபவர்களுக்கு குவாட்டர், கோழி பிரியாணி, ஆயிரக் கணக்கில் பணம் எல்லாம் செலவழித்துக் கூட்டு வரும் அளவுக்கு வாசன் பணக்காரர் இல்லை.
இவருக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இத்தனை நாள் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கூட நமக்குத் தெரியவில்லை. சத்தமில்லாமல் இப்படி ஒருவரால் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியுமா எனப் பிரமித்துப் போயிருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ்கள்
பிளாக்ஷீப் விருது விழாவில் பெட்ரோல் போட 50 ரூபாய் இல்லாத குடும்பத்திலிருந்த வந்த நான் இன்று சூப்பர் பைக்குக்கு ஃபுல் டேங்க் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்கிற தொனியில் தன் ரசிகர்களுக்கு நன்றி கூறினார் வாசன்.
இன்னும் இவர் என்னவெல்லாம் செய்யவிருக்கிறார், இவரை மற்றவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்? என்பதற்குக் காலம் தான் விடை கொடுக்க வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust