மனித குல நாகரீகங்கள் உலகில் எங்கு தோன்றின? தென் அமெரிக்காவில் இன்கா நாகரீகம், எகிப்தில் நைல் நதி நாகரீகம், ஈராக் - ஈரானில் யூப்ரடிஸ் - டைக்ரீஸ் நதிக்கரையில் தோன்றிய பாரசீக நாகரீகம், இந்தியா - பாகிஸ்தானில் சிந்து நதிக்கரையில் தோன்றிய ஹரப்பா நாகரீகம், சீனாவில் மஞ்சள் நதிக்கரை நாகரீகம் போன்றவற்றை சொல்லலாம்.
இதன்படி பார்த்தால் இன்றைய மேற்குல நாடுகளில் கிரேக்கத்தை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளுமளவு பழங்கால நாகரீகங்கள் எங்கேயும் தோன்றவில்லை.
கீழை நாடுகளில் கிமு கால வரிசையில் மக்கள் நதிக்கரைகளில் நகரவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த போது மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து வந்தனர். மத்திய காலத்தில் அதாவது 15வது நூற்றாண்டு வாக்கில்தான் ஐரோப்பிய நாடுகள் கடல்வழி கண்டுபிடிப்புகள் மூலம் கீழை நாடுகளுக்கு வர்த்தக வழி கண்டுபிடித்தனர்.
பின்னர் கீழை நாடுகள் ஐரோப்பிய வல்லரசுகளின் காலனி நாடுகளாக மாறின. கீழை நாடுகளில் அளப்பறிய செல்வம் மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. கூடவே அரிய தொல்பொருள் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன.
இன்றைக்கும் கீழை நாடுகளின் வரலாற்றுச் சான்றுகள், சிலைகள், உலோக பொருட்கள் மேலைநாடுகளின் அருங்காட்சியகத்தில்தான் அதிகம் இருக்கின்றன. அவற்றில் அரிதாக ஒரிரண்டு பொருட்கள் பல வருட போராட்டங்களுக்கு பிறகு கீழை நாடுகள் திரும்புகின்றன. நாம் நமது நாட்டின் செல்வ வளத்தை மட்டுமல்ல, வரலாற்று வளத்தையும் மேலைநாடுகளிடம் பறிகொடுத்திருக்கிறோம்.
அப்படித்தான் தாய்லாந்துக்குச் சொந்தமான 500 ஆண்டு பழமையான ஒரு புத்தர் சிலையின் தங்க கிரீடம் அமெரிக்காவிலிருந்து தாய்லாந்து திரும்பியிருக்கிறது. அமெரிக்க அரசின் உதவியோடு இந்த தங்க கிரீடம் திரும்பியிருப்பதாக தாய்லாந்து நாட்டின் கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் தெரிவித்திருக்கிறார்.
இந்த தங்க கிரீடம் 95 சதவீத தூய தங்கத்தால் லன்னா கலை வடிவத்தில் செய்யப்பட்டதாகும். லன்னா என்பதற்கு தாய்லாந்தில் மில்லியன் கணக்கிலான நெல் வயல்களைக் குறிக்கும். அதன் கலை என்பது தாய்லாந்தில் பல நூற்றாண்டுகள் நிலவிய மண்பாண்டங்களை புனையும் ஒரு கலையாகும்.
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய இந்த தங்க கிரீடத்தின் எடை சுமார் 42.6 கிராம் ஆகும். தற்போது இந்த அரியவகை பழங்கால கிரீடம் தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் இத்திபோல் கூறியிருக்கிறார்.
மேலும் தாய்லாந்தின் வடகிழக்கு மாநிலமான புரி ராமில் உள்ள பிரகோன் சாய் தொல்லியல் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில வெண்கலச் சிலைகள் அமெரிக்காவின் டென்வர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இந்த சிற்பங்களை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அந்தச் சிற்பங்கள் தாய்லாந்து திரும்பலாமெனவும் கூறப்படுகிறது.
இப்படி பழங்கால சிற்பங்கள் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை இது தொடர்பான அனைத்து சட்டரீதியாக விவகாரங்களை தீர்க்க விரும்புவதாக அமைச்சர் இத்திபோல் கூறினார்.
தாய்லாந்திலிருந்து இப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கலைப் பொருட்களை மீட்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்தக்குழுதான் தொடர்ந்து போராடி இப்படி மீட்டு வருவதாக அமைச்சர் இத்திபோல் பாராட்டினார். அதற்கு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறையும் ஒத்துழைப்பதாக அவர் நன்றி தெரிவித்தார்.
அமெரிக்காவின் உதவியோடுதான் அங்கே இருக்கும் ஆசிய கலை அருங்காட்சியகத்திலிருந்த இரண்டு கேமர் லின்டெல்ஸ் பொருட்கள் மீட்கப்பட்டன.
லிண்டெல் எனப்படுவது பொதுவாக கெமர் கட்டிடக் கலையில் கோவிலின் வாசலுக்கு மேலே நெடுவரிசைகளால் அலங்கரிக்கப்படும் ஒரு செவ்வக கல் வடிவமாகும். அமெரிக்காவிலிருந்து திரும்பிய இந்த இரண்டு கேமர் லின்டெல்ஸ் கலைப் பொருட்கள் தற்போது தாய்லாந்தில் இரண்டு வரலாற்றுப் பூங்காக்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இதே போல மீட்கப்பட்ட 164 பழங்கால மட்பாண்டங்களும் தற்போது தாய்லாந்தின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் பழம் பெருமையையும், கலாச்சார மரபுகளையும் நிறுவுவதற்கு இப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொல் பொருட்களை மீட்பது அவசியம் என்பதை தாய்லாந்து நாட்டின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust