பிரிட்டனின் நீண்ட கால முடியாட்சியின் குறியீடாக இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 96வது வயதில் காலமானார். இவர் 70 ஆண்டுகள் பிரிட்டனின் மகாராணியாகப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி லண்டன் நகரத்தில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர் என்கிற இயற்பெயரோடு பிறந்தார் இரண்டாம் இலிசபெத் மகாராணி. 1947ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி கிரீஸின் இளவரசராக இருந்த பிலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய 99 ஆவது வயதில் கிட்டத்தட்ட 74 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு உடல் நலக் குறைவால் காலமானார் இளவரசர் பிலிப்.
1948 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு சார்லஸ் பிறந்தார். அவரைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு இளவரசி ஆனெ பிறந்தார். 1960 ஆம் ஆண்டு இளவரசர் ஆண்ட்ரூவும் 1964ஆம் ஆண்டு இளவரசர் எட்வர்ட்டும் பிறந்தனர். இந்தப் பிள்ளைகள் வழி மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்புக்கு மொத்தம் எட்டு பேரக் குழந்தைகள் மற்றும் 12 கொள்ளு பேரன் பேத்திகள் பிறந்தனர்.
1952 ஆம் ஆண்டு இளவரசி எலிசபெத் கென்யாவில் இருந்த போது அவருடைய தந்தை காலமானார். அதன் பிறகு தான் பிரிட்டனின் மகாராணியாக எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் ஆபேயில் இளவரசி எலிசபெத் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டப்பட்டார் அப்போது அவருக்கு வயது 27 மட்டுமே.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனின் மகாராணியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாம் இலிசபெத் அவர்களின் காலத்தில் தான், பிரிட்டன் சாம்ராஜ்யம் காமன்வெல்த் ஆகப் பரிணமித்தது, பனிப்போர் முடிவுக்கு வந்தது, அவருடைய காலத்தில் தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்தது, அவருடைய காலத்திலேயே தான் பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் தனி நாடாகப் பிரிந்து வந்தது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் ட்ராஸ் வரை 15 பிரதமர்களோடு பணியாற்றியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை தான் லிஸ் ட்ராஸை மகாராணியார் முறைப்படி பிரிட்டன் பிரதமராக நியமித்தார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில் மொத்தம் 3 பெண்கள் பிரதமராக பணியாற்றியுள்ளனர்.
லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணிக்கு யூனியன் கொடி, அறை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. பக்கிங்காம் அரண்மனையே மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு மகாராணியாரின் மரணச் செய்தியை உறுதி செய்தது.
மகாராணி இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை மதியம் ஸ்காட்லாந்தில் உள்ள எஸ்டேட் ஒன்றில் அமைதியாக காலமானார். இந்த எஸ்டேட்டில் தான் அவர் தன்னுடைய பெரும்பாலான கோடை காலங்களை கழிப்பார் என பிபிசி ஊடகங்களில் செய்து வெளியாகி உள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமான செய்தியை அவரது மகன் மற்றும் அரசர் மூன்றாம் சார்லஸ் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் தன்னுடைய தாயாரின் மரணம் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா கூடிய விரைவில் லண்டனுக்கு திரும்புவார் என பக்கிங்காம் அரண்மனை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தேச மக்களுக்கு தன்னுடைய தாயாரின் மரணம் குறித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பால்மோரலில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நலம் குன்றத் தொடங்கிய போதே பல்வேறு அரசு குடும்பத்தினர் அங்கே கூடத் தொடங்கிவிட்டனர். இளவரசர் வில்லியம் முதல் இளவரசர் ஹாரி வரை இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் நவீன கால வளர்ச்சி, வலுவான முடியாட்சியின் மீது தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்குத் தேவையான நிலைத்தன்மையையும் வலிமையையும் கொடுத்தவர் மகாராணி இரண்டாம் எலிசபெத் எனப் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ள லிஸ் ட்ராஸ் பிபிசியிடம் கூறியுள்ளார். மேலும், அடுத்து வரவிருக்கும் அரசருக்கும் தாங்கள் விசுவாசமாக இருப்போம் என்றும் கூறியுள்ளார் லிஸ் ட்ராஸ்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust