கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு மேலான 1600 கி.மீ தொடர் ஓட்டத்திற்கு பிறகு கிருணா நகரை அடைந்துவிட்டோம். ஆச்சர்யம் என்னவெனில் மகிழுந்தில் 3 குழந்தைகள் இருந்த இடமே தெரியவில்லை. நாங்கள் தான் குழந்தைகள் போல பாடிக்கொண்டும், கல்லூரிக்காலம் போன்ற குறும்பான பேச்சுக்களோடும் பயணித்துக்கொண்டிருந்தோம்.
கிருணா வருவதற்கு 3 மணிநேரம் முன்பே குழந்தைகள் மீண்டும் விழித்து எழுந்திருந்தாலும், வெண்பனிகளின் அழகிய காட்சிகளை ரசித்துக்கொண்டு வந்ததால், அவர்கள் தனியொரு உலகினில் பயணப்பட்டு வந்தார்கள். இடையிடையே அவர்களுக்கு விருப்பமான பாடல்களை மட்டும் ஒலிக்கக்கேட்டுவிட்டு எங்களுக்கு தொந்தரவில்லாத பயணத்தை வழங்கினார்கள்.
கிருணா நகரின் உள்ளே செல்வதற்கு 8 கி.மீ முன்பே சாலை பனிக்கட்டி கட்டிங்களுக்கான பாதையில் பிரிந்து குறுகலான பாதை வழியே சென்று, இலக்கை அடைந்தோம்!
பனிக்கட்டிக் கட்டிடங்களில் தங்க வந்தோர் தனிக்குழுவாக அவர்களுக்கு உரிய சிறப்பு ஆடைகளை பெற்று மெல்ல மெல்ல நகர்ந்துக்கொண்டிருந்தனர்.
சுற்றிப்பார்க்க மட்டும் வந்திருந்த எங்களை போன்றோர், தனிக்குழுக்களில் நின்று உள்நுழைவுச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு தனி வரிசையில் உள்ளே சென்றோம்.
கடும்குளிரினில் 10 நிமிட நடைக்கு மேல் கை மற்றும் கால்கள் விறைக்கத் தொடங்கிவிடும். சற்று நேரத்தில் கடும் வலிகள் கூட சிலருக்கு ஏற்படும்.
அதேவேளை, பனிக்கட்டிக் கட்டிடங்களை பார்க்கும்பொழுது உண்டாகும் தனிப்பரவசமும் வலியும் மாறி மாறி மூளையினை கிளர்ச்சியுறச் செய்து நம்மை சமநிலையில் வைத்திருக்கும் அவ்வனுபவம் உண்மையிலே வாழ்வில் மகிழ்வின் உச்சம்தான் எனலாம்.
பனிச்சாலைகள், குளிர்காலங்களில் -10லிருந்து -35 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் குளிர்நிலை, உறைந்த பனியிலான வழித்தடங்கள், வெண்பனிச் சுவர்கள், வெண்பனிப்படுக்கைகள், வெண்பனி அறைகளின் உள்ளே அமைதிருக்கும் உருவ வேலைப்பாடுகள், வெண்பனிச்சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள உருவங்களும் அவை கதைச் சொல்லும் விதமும், தூண்களின் வேலைப்பாடுகளும் என ஒவ்வொன்றும் தனித்தனியே ரசித்துப்பார்க்கவே ஒரு நாள் போதாது.
பரவசத்தையும் உணர்ச்சி அலைகளையும் கடந்து கடும்குளிர் ஏற்படுத்தும் உடலின் வலிகள் மட்டுமே அவ்வப்பொழுது போதும் என்ற மனநிலையினையும் ஏற்படுத்தும்.
ஏற்கனவே, 2014இல் நார்வே நாட்டினில் பனிக்கட்டித் தங்குமிடங்களை பார்த்திருக்கிறேன் என்றாலும், கிருணாவில் பார்க்கும் இக்கட்டிடங்கள், தங்குமிடங்கள் அதனினும் அழகிய வேலைப்பாடுகளோடு, பனியில் செதுக்கி உருவாக்கப்பட்டச் சிலைகள், பணித்தூண்களின் வேலைப்பாடுகள், பனிக்கட்டி சுவர்களின் அழகிய வடிவமைப்புகள், ஒவ்வொரு பகுதியிலும் செதுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு விதமான கருத்தாடல்கள் கொண்ட உருவங்கள் என கண்களுக்கான இதமான, உணர்ச்சிப்பூர்வமான மயக்க நிலையினை தந்தது எனலாம்.
உலகில் மொத்தமாக 5 பனிக்கட்டிக் கட்டிடங்கள்/தங்குமிடங்கள் இருக்கிறது.
கனடா நாட்டில் Hotel de Glâce, ரோமானிய நாட்டில் Hotel of Ice, அடுத்த மூன்றும் ஆர்டிக் பகுதியில். ஃபின்லாந்தில் Snowcastle Resort, நார்வேயில் Snowhotel Kirkenes, சுவீடனில் Icehotel Kiruna.
2001இல் திறக்கப்பட்ட கனடா நாட்டு பனிக்கட்டித்தங்குமிடம், ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கப்படும், அதன் வடிவமைப்புகள் மாற்றியமைக்கப்படும், மொத்தமாக 21 தங்கும் அறைக்கள் கொண்ட இடம் இது.
ரோமானிய நாட்டில் கார்பாதியன் மலையின் உச்சியில் இருக்கும் தங்குமிடம் 2005இல் திறக்கப்பட்டது. கிட்டதட்ட டிசம்பர் கிருஸ்துமஸ் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், பயணிகள் தங்குவதற்கு புதிதாக வடிவமைக்கப்பட்டக் கட்டிடங்கள் திறக்கப்படும்.
ஃபின்லாந்து நாட்டின் Snowcastle Resort 365 நாட்களும் பார்வையாளர்களுக்கு திறந்துவைக்கப்பட்டிருந்தாலும், தங்குவதற்கு குளிர்காலங்களிலேயே அனுமதி உண்டு. ஏனைய பனிக்கட்டித் தங்குமிடங்களை விட இங்கே ஒரு சிறப்பம்சம் உண்டு. தங்கும் அறைகளின் கூரை கண்ணாடியிலானதும் இருக்கிறது. பனிப்பொழிவுக்காலங்களில் வெண்மழையை ரசித்துக்கொண்டு எஸ்.பி.பி.யாகவே மாறி ‘புதுவெள்ளை மழை இங்கே பொழிகின்றது’ பாடலைப் பாடலாம்.
நார்வே நாட்டின் Kirkenes Snowhotel 365 நாட்களும் திறந்திருக்கும். 14 அறைகள், அதில் 7 இருவர் தங்கும் அறைகள் 7 குடும்பத்தினருக்கான பெரிய அறைகள் கொண்டவையாக இருக்கிறது.
சுவீடனில் நாங்கள் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் பனிக்கட்டித் தங்குமிடமும் கட்டிடங்களும் 1989இல் கட்டப்பட்டவை. வருடத்தின் 365 நாட்களும் தொடர்ந்து இயங்கும் எனினும் சிற்சில பகுதிகள் வேலைப்பாடுகளுக்காக மூடப்பட்டு, கடும்குளிர் காலங்களில் முழுமையாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
ஏனைய பனிக்கட்டித் தங்குமிடங்களை விட சுவீடனின் பனிக்கட்டித் தங்குமிடங்கள் மிகவும் பிரமாண்டமானவை என்பது என் பார்வை.
சுவீடனின் கிருணா பனிக்கட்டித்தங்குமிடம்
சுற்றிப்பார்க்க நாங்கள் உள்ளே நுழைந்தது முதல் பெரியவர்களான எங்களுக்குத்தான் அவ்வபொழுது உடல் வலிகளும் கை/கால்களை அசைக்க முடியாத கடும்குளிர் விறைப்பும் இருந்தனவே தவிர, குழந்தைகளை கையில் பிடிக்கவே முடியவில்லை.
முதலில், ஒரு பெரிய கூடாரத்தினுள் நுழைந்தோம். அவை, பல திசைகளில் பல கதவுகளை காட்டியது. ஒரு கதவினுள் நுழைந்தால், அங்கே10-15 அறைகளுக்கான கதவுகளை காட்டியது. முழுமையான வெண்பனியில் நிரம்பியக் கட்டிடங்களில் கதவு எப்படி இருக்கும்? என யோசனை செல்கிறதா? வெறும் திரைச்சேலைகள் தான் கதவுகள்.
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் 10-15 அறைகளுக்கென்று தனித்தனி உட்கருத்துகள் (theme) கொண்ட அழகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, உடலியல் கருப்பொருள் பகுதி என்றால், அங்கே ஒரு அறையில் மனிதர்களின் மூளை, இன்னொரு அறையில், சுவாச மண்டலம், இன்னொரு அறையில் இதயம் என இப்படியாக உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை சிலைகள் போல ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. அறையின் சுவார்களில் கருப்பொருள் உருவங்களுக்கு ஏற்ப வடிவமைப்புகளும் செதுக்கப்பட்டிருந்தன.
இவையனைத்தையும் பார்த்து முடிக்கும் முன்பே எல்லோரும் சோர்வடைந்துவிட்டோம். குழந்தைகள் அவ்விடங்களை விட்டு வரவே இல்லை. நாமெல்லாம் சறுக்கல் விளையாட்டினை சிறுவயதில் விளையாடியிருப்போம். முழுமையாக பனிக்கட்டிக்களை செதுக்கி அடுக்கி வைப்பட்டிருந்த பனிச்சறுக்கு இடம் ஒன்றினைக் கண்டதும் அதிலும் விளையாடியே ஆக வேண்டும் என்று 3 குழந்தைகளும் அங்கே ஓடிவிட, உடன் வந்திருந்த ஏனையோர் ஓய்வெடுக்கிறோம் என சிற்றுண்டி உணவகம் ஒன்றினை நோக்கி நகர்ந்தார்கள்.
நானும் தணிகையும் குழந்தைகளோடு நின்றுக்கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து என்னாலும் இயலாத சூழலில் சிற்றுண்டி உணவகம் நோக்கிச் சென்றேன்.
குளிர்பான கோப்பைகள், தட்டுகள், அமரும் இருக்கைகள், மேசைகள் எல்லாமுமே பனிக்கட்டியால் ஆனதை வைத்துள்ளார்கள் என்று அங்கே சென்றதும்தான் தெரிந்தது.
ஓய்வெடுக்கக்கூட பனிக்கட்டியிலான இருக்கைகளே இருந்தன. ஆனால், தங்குமிடங்களில் இருந்த குளிரைவிட சற்றுக் குறைவாக இருந்ததினால், உடலில் வலிமையினை சற்றளவேணும் மீளப்பெற ஏதுவாக இருந்தது எனலாம்.
இங்கே, பனிக்கட்டிக் கட்டிங்களை காண்பதோடு, பல்வேறு விளையாட்டுகளுக்கும் பனி நிலங்களில் மட்டுமே வாய்ப்புள்ளச் செயற்பாடுகளுக்கும் பணம் கட்டினால் வாய்ப்புண்டு.
பனிக்கட்டித் தங்குமிடம் அருகில், ஏரி ஒன்று உள்ளது. முழுக்க முழுக்க உறைந்த பனிகளால் மூடப்பட்டிருக்கும். வெண்பனி நிலத்தினில் ஓடுவதற்கென்றே பனிநிலவாகனம் (SNOWMOBILE) ஒன்று உண்டு. அதில் ஏரி முழுக்க சுற்றி வரலாம், உறைந்த ஏரியில் நடந்துச்செல்லலாம். ஏரியில் துளையிட்டு, மீன் பிடிக்கலாம்.
நாய்கள் இயக்கும் வாகனம் Dog Sledding என்று சொல்வார்கள். அதில், மலைகளிலும் ஏரிகளிலும் சாலைகளிலும் கூட பயணிக்கலாம். இரவு நேரங்களில் இவ்வகை வாகனங்களில் -30 டிகிரி கடும்குளிரில் அழைத்துச் சென்று வடதுருவ ஒளியினைக் காட்டுவார்கள்.
இப்படியாக பல்வேறு செயற்பாடுகளும் விளையாட்டுகளும் என உலகப்பயணிகளைக் கவரும் விதமாக அனைத்தையும் வடிவமைத்து வைத்துள்ளனர்.
வெண்பனிக்கட்டி கட்டிடங்களைச் சுற்றிப்பார்த்ததும், அடுத்து என்ன? ஆம், பல வருடக் கனவுகளோடு உலகப் பயணிகள் பெருந்திட்டம் இட்டு பார்க்க வரும் வடதுருவ ஒளியினைத் தேடி இரவு முழுவதும் அலையப்போகிறோம்!
அதற்கெல்லாம் முன்பு, தங்குமிடம் சென்று நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
நள்ளிரவில் எப்படியும் குறைந்தது 3 மணி நேரம் -20டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து அலைய உடலுக்கு வலிமைத் தேவை.
கிருணா நகரில் எங்கள் 3 குடும்பத்தினருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்று நன்றாக ஓய்வெடுத்தோம்.
இரவு 8 மணிக்கு மேல் எழுந்து 10 மணிக்கு இரவெங்கும் கடுங்குளிரில் வடதுருவ மலைகளில் பயணிப்பது திட்டம்.
வடதுருவ ஒளியினைக் கண்டோமா?
என்ன நடந்தது?
அடுத்துக் கட்டுரையில் பார்ப்போம்!.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust