northern light ( representational ) Canva
உலகம்

தேசாந்திரியின் தடங்கள்: உறையும் குளிரில் வடதுருவ ஒளியைத் தேடி 250 கிமீ ஓட்டம் | பகுதி 6

இரண்டாயிரம் கிலோ மீட்டர், இரண்டு நாள் பயணித்துக் காண வந்த வடதுருவ ஒளியினை விடவும் அங்கே கிடைத்த வடதுருவ மானின் உணவின் சுவையில் மதிமயங்கிக் கிடந்தது ஏமாற்றமே எனினும், அடுத்த 3 மணி நேரம் மலைகளில் தொடர்ந்து பயணிக்கும் பொழுது கட்டாயம் வடதுருவ ஒளி தென்படுமென்று ஆறுதல் அடைந்தோம்.

விஜய் அசோகன்

கிருனா நகரில் பனிக்கட்டிக் கட்டடங்களையும், தங்குமிடங்களையும் பார்த்து முடித்துவிட்டு, மதியம் முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்தோம். அடுத்து? ஆம், எதற்காக வந்தோம்? அதேதான், ஆர்டிக் பகுதிகளில் மட்டுமே தென்படும் வடதுருவ ஒளியைக் (NORTHERN LIGHT) காண வேண்டுமே! உலகமே, கிருனா வருவது, அங்கே தங்கி, வடதுருவ ஒளியினைக் காணவே! ஆனால், நாங்கள் தான் மகிழுந்து வச்சிருக்கோமே! கடுமையான குளிரிலும், கடும் வெண் பனிப்பொழிவிலும், கடும் இருட்டு வேளைகளிலும் நார்வேயில் பல வருடங்கள் வாழ்ந்து மகிழுந்து ஓட்டிய அனுபவம் உள்ள என்னைப் போன்றவன் உடன் இருக்க, ஒரே இடத்தில் தங்கிக் காண்பதா?

வடதுருவ ஒளியினைத் தேடி கிருனா நகரிலிருந்து, கிட்டத்தட்ட 130 கி.மீ தொலைவில் உள்ள நார்வே நாட்டின் எல்லைக்கோடு வரைச் செல்வது என திட்டமிட்டு இருந்தோம். கீழே உள்ள வரைபடம், அதனைக் காட்டுகிறது. அருகாமையில், நார்வே, ஃபின்லாந்து என, எட்டிவிடும் தூரம் தான், கிட்டத்தட்ட மூன்று நாடுகளுமே கூட சங்கமிக்கும் பகுதியில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கப் போகிறோம்.

வடதுருவ ஒளி குறித்தான முன்னறிவிப்பு

கைப்பேசிச்செயலியின் முன்னறிவிப்பின் படி, வடதுருவ ஒளி, அன்றைய நாள் இரவு 10 மணிக்கு மேல் கிருனா நகரை அண்டியப் பகுதியிலும், 11 முதல் நள்ளிரவு 1 மணி வரை சுவீடன்- நார்வே எல்லை ஒட்டிய பகுதிகளிலும் வடதுருவ ஒளி தென்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தூங்கி எழுந்தவுடன், கடுமையான பசியில் அனைவரும் தவித்தோம். தங்குமிடத்தில் உணவு சமைக்க முடியுமெனினும், முதல் நாள் காலை முதல் அடுத்த நாள் மதியம் (இன்றைய நாள்) வரை அதே தக்காளிச்சோறு, தயிர்ச்சோறு, புளிச்சோறு மட்டுமே என்பதால், இரண்டாம் நாள் இரவு நன்றாக சாப்பிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.

கிறிஸ்துமஸ் நாள் இரவு கடைகள் இருக்காது எனத் தெரியும், ஆனால், நகரத்தினுள் முழுமையான வெற்று வீதிகளும், பூட்டிய கதவுகளுமே இருந்தன. தேடித்தேடி ஒருவழியாக ஒரே ஒரே பிட்சா கடை கண்டுபிடித்தோம்.

வடதுருவப் பகுதிகளில் மட்டுமே தென்படும் ஆர்டிக் மான்கள் (வடதுருவ மான்கள் – reindeer) வகையிலான உணவு நார்வே-சுவீடன்-ஃபின்லாந்து நாடுகளின் வடமுனைப் பகுதிகளில் மிகப்பிரபலம்.

ஆர்டிக் மான்கள், கோழிக்கறி, மாட்டுக்கறி உள்ளிட்டவையின் கலவை கொண்ட ஃபிட்சா உணவும், ஆர்டிக் மான்கள் மட்டுமே வைத்துச் சமைக்கப்பட்ட ஃபிட்சா உணவுமென பலவகைகளைச் சுவைத்து மகிழ்ந்தோம்

எங்களருகில் இருந்த இரு கிருனா வாழ் மனிதர்கள் எங்களிடம் நட்பாகப் பேசிக்கொண்டு, மிகச்சமீபத்தில் தான் வடதுருவ ஒளியினை கிருனா எல்லையில் பார்த்துவிட்டு வந்தோமெனச் சொன்னார்கள். அப்பொழுதுதான் நேரத்தைப் பார்த்தோம் இரவு 10 மணியைக் கடந்திருந்தன.

இரண்டாயிரம் கிலோ மீட்டர், இரண்டு நாள் பயணித்துக் காண வந்த வடதுருவ ஒளியினை விடவும் அங்கே கிடைத்த வடதுருவ மானின் உணவின் சுவையில் மதிமயங்கிக் கிடந்தது ஏமாற்றமே எனினும், அடுத்த 3 மணி நேரம் மலைகளில் தொடர்ந்து பயணிக்கும் பொழுது கட்டாயம் வடதுருவ ஒளி தென்படுமென்று ஆறுதல் அடைந்தோம். ஆனால், அன்றைய நாள் மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருப்பது தெரியாமல், மகிழுந்தை இயக்கத் தொடங்கினோம். கடுமையான மலை, கடும் இருட்டு, கடும் வெண்பனிப் படர்ந்த சாலை, அதோடு இரவு 10-01 என்பது ஆள் அரவமே இல்லாத உலகின் வடமுனையில் வாகனம் ஓட்டுவது சற்று சவாலானது என்பதால், பல வருட நார்வே பயண அனுபவம் கொண்ட நான் மட்டுமே வாகனம் இயக்குவதுதான் திட்டம்.

வெண்பனிகளின் வெளிச்சத்தில் மலைச்சாலைப் பயணம்

வடதுருவ ஒளி வான்வெளியில் வானவேடிக்கைக் காட்டும்பொழுது அவ்வப்பொழுது இரவில் ஆங்காங்கே தென்படும் எனினும், அதனைக் காண்பதற்கு சில அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உணவகத்தில் சந்தித்த அந்த இருவர் எங்களுக்கு விளக்கியிருந்தனர்.

நார்வே எல்லை நோக்கியச் சாலையில், கடும் இருட்டுப் பகுதியில், குறிப்பாக முழுமையாக வெண்பனிகளில் மூழ்கி, பனிப்பாறைகளாய் மாறியிருக்கும் ஏரிக்கரைகளின் ஓரத்தில், வான்வெளி முழுமையாக நம் பார்வையில் தென்படும் சூழலில், வாகனத்தின் ஒளியினை முற்றிலும் அனைத்தைவிட்டு வடதுருவ ஒளியினைக் காணலாம் என்றனர்.

கிருனாவில் தான் வடதுருவ ஒளியினைக் காண்பதைத் தவறவிட்டுவிட்டோம் என்றபொழுதிலும், அடுத்த 3 மணி நேரத்தில் கட்டாயம் காண்போம் என்பதால், அவர்கள் சொன்ன விதிகளைக்கூட மறந்துவிட்டு, நார்வே எல்லை வரை சென்றுப்பார்ப்பது என்பதில் உறுதியாக இருந்தோம். 130 கி.மீ பயணத்திற்குத் தயாரானோம்.

எங்கள் நம்பிக்கைக்கு இரு காரணங்கள் 1) நார்வே எல்லை செல்லும் சாலையில், கிருனாவில் இருந்து 90 கி.மீ தொலைவில் அபிசுக்கோ (Abisko) உள்ளது. அங்குதான் வடதுருவ ஒளியினைக் காண்பதற்கான மலைக் காட்சி அரங்கம் உள்ளது. காட்சிப்படம் கீழே உள்ளது. 2) அங்குத் தவறவிட்டாலும், கிட்டத்தட்ட மிக உயரமான மலை உச்சியில் அமைந்திருக்கும் ரிக்சுகிரான்சன் (Riksgransen) வெட்டவெளி வான்வெளித் தென்படும் இடமாகும் என்பது நான் அறிந்து வைத்திருந்தேன்.

வாடகை வாகனம் என்பதால், அதன் காப்பீட்டுத் திட்டத்தின்படி, நார்வே நாட்டிற்குள் பயணிக்க முடியாது, ஒருவேளை நள்ளிரவில் வாடிக்கையாளர் மையத்தினை அழைத்து, காப்பீட்டினை பெற முடியும் எனினும், கொரொனா காலக் கட்டுப்பாட்டின் படி, எங்கள் அனைவராலும் உள்ளே செல்ல முடியாது. நள்ளிரவு, யாரும் கண்காணிக்கப் போவதில்லை எனினும், இதுபோன்ற தொலைதூர பல நாடுகளைக் கடக்கும் பயணங்களில், எச்சூழலிலும் சில அடிப்படை விதிகளை மீறக்கூடாது.

கிருனா-அபிசுக்கோ-ரிக்சுகிரான்சன்

கிருனாவில் இருந்து நாங்கள் புறப்பட்டபொழுது, எங்களைப் போலவே பல மகிழுந்துகள் ஆங்காங்கே இணைந்து பயணித்தன, சில கிருனாவின் எல்லைப் பகுதிகளில், எங்கெல்லாம் ஏரிக்கரையின் ஓரமோ, முழு வான்வெளி தென்படும் இடமோ தென்படும் பொழுதெல்லாம், ஒதுங்கி இன்று, வாகனத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு வந்ததைப் பார்த்தோம். கிருனாவில் 10 மணிக்குத்தானே வடதுருவ ஒளி தென்படும், அதுதான் 10 கடந்து கிட்டத்தட்ட 11ஐ தொட்டுவிட்டதே, இவர்கள் எல்லாம் ஏன் சோம்பேறிகள் போல வாகனம் ஓட்டச் சிரமப்பட்டுக்கொண்டு, இங்கே நின்றுகொண்டு எதனைத் தேடுகிறார்கள்? ஆளே இல்லாத டீக்கடையல யாருக்குடா இவனுங்க டீ ஆத்திக்கிட்டு நிக்கிறாங்கன்னு பகடி செய்துகொண்டு எங்கள் பயணத்தில் கண்ணும் கருத்துமாய்த் தொடர்ந்தோம்.

நாங்களும் ஆளே இல்லாத கடையில் டீ வாங்க ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது அப்பொழுதும் கூட உணரவில்லை.

கிருனாவில் இருந்து அபிசுக்கோ செல்லும் பாதை, செங்குத்தாக மேல ஏறும், கடும் சிரமம் கொண்ட மலைச்சாலை, அதுவும் அடர்பனிப் படர்ந்த சாலை என்பதால், மேலே ஏறும்பொழுது வாகனம் சற்று சறுக்குவதை உணர்ந்து மெல்ல மெல்ல, ஏற்றம் இறக்கமில்லா நிலையான வேகத்தில் மகிழுந்துவை இயக்கிக்கொண்டிருந்தேன்.

கீழிருந்து மேலே ஏறுவதை விட, இத்தகைய வெண்பனிகள் படர்ந்த மலைச்சாலைகளில் மேலிருந்து கீழே இறங்கும்பொழுது சறுக்கல் அதிகமாக இருக்கும். பல வாகனங்கள், குறிப்பாக, கனரக வாகனங்கள் சில சறுக்கித் தடுமாறி, சாலையில் இருந்து விலகி கவிழ்ந்துக்கிடந்தது சற்று திகிலாகவே இருந்தாலும், இத்தகையச் சூழல்கள் பல பார்த்த அனுபவத்தில் ‘பயத்தை முகத்தில் காட்டாமல்’ சிரித்து மகிழ்வது போல மகிழுந்துவை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

வெண்பனிகள் படர்ந்த மலைச்சாலை

அபிசுக்கோ வந்தடைந்ததும், சிறு நகரமெனினும், நள்ளிரவில், மைனஸ் 15 டிகிரி உறைப்பனிகள் படர்ந்த சாலைகள், நகரவீதி வெளிச்சக்கீற்றில், அழகாய் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

அபிசுக்கோ மலைக்காட்சி அரங்கத்திற்கு எங்களால் செல்ல முடியாது. அபிசுக்கோ நகரை ஒட்டிய அம்மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து மேலே செல்ல தானியங்கி கையிறு இழுவை வாகனம் (rope car) மட்டுமே உண்டு. வேறுபாதை கிடையாது. அவ்வாகனத்தில் செல்ல பெரிய செலவு என்பதை விட, முன்பதிவிற்கென குறைந்தது 1 மாதம் வரையில் கூட தேவைப்படும்.

அங்கு சென்றாலும் எல்லா நேரங்களிலும் வடதுருவ ஒளி தென்படும் என்று சொல்ல முடியாது. தென்படாமலும் போகலாம். இரவு முழுவதும் திறந்தவெளியில் மைனஸ் 15 லிருந்து மைனஸ் 30 வரையிலான கடும் குளிரில் நிற்க வேண்டிய நிலையும் வரலாம். அதனால், அபிஸ்கோ முதல் ரிக்சுகிரான்சன் வரையில் மலை உச்சிகளில் கடும் இருட்டில் அலைந்துத் திரிந்தாவது வடதுருவ ஒளியினைக் காண்பது என்று முன்பே திட்டமிட்டிருந்தோம்.

கொரொனா சூழல் இல்லாத நிலையெனில், ரிக்சுகிரான்சனிலிருந்து 40 கிமீ பயணிக்க முடியுமெனில் நார்வே நாட்டின் வட கடல் ஓர எல்லையில் நார்விக் நகரம் சென்றாலோ, அல்லது 250 கி.மீ பயணித்து ட்ரோம்சோ நகரம் சென்று தங்கும் சூழல் இருந்தாலோ, இதனைவிட தெளிவான, உறுதியாக வடதுருவ ஒளியைக் காண முடியும்தான்.

ஆனால், நார்வே எல்லை வரையில் மட்டுமே தற்போதுள்ள வாய்ப்பு!

அபிசுக்கோ முதல் ரிக்சுகிரான்சன் வரையில் சென்றும் எங்குமே எங்களால் வடதுருவ ஒளியினைக் காண முடியவில்லை.

ஆனால், அதேவேளை, எங்கள் கைப்பேசி செயலின் அறிவித்தல் படி, நாங்கள் சுற்றிக்கொண்டிருக்கும் பகுதிகளில் வடதுருவ ஒளித் தென்படும் என்ற செய்தி ஆவலைத் தூண்டிக்கொண்டே இருந்தன.

அதனோடு சேர்த்து, அபிசுக்கோ மலைக்காட்சி அரங்கத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் இணையதளப்படங்கள் வடதுருவ ஒளியினைத் தெளிவாகக்காட்டிக் கொண்டே இருந்தது, நாங்கள் சுற்றிக்கொண்டிருக்கும் பகுதியில் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கில் வடதுருவ ஒளி வானவேடிக்கை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இப்படியே தேடிக்கொண்டு, ரிக்சுகிரான்சன் கடந்து ஒரு சில கி.மீட்டரில் நார்வே எல்லை வந்துவிட்டோம். கடுங்குளிர் நள்ளிரவில், எல்லைக்காவல் ஏதுமின்றி ஆளரவமற்றச் சூழல் இருந்தன. ஆனாலும், எல்லையினைத் தாண்டுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

எல்லையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நார்வே சாலையில் கொஞ்சம் தூரம் நடந்து வந்தோம். எங்கள் அனைவரிடமும் முறையான சுவீடிஷ் வாழ்விட உரிமைச்சான்றிதழ் (residence permit) இருந்ததால், நாங்கள் சட்டப்படி உள்ளே செல்வதில் எப்பிரச்சனையும் இல்லை. நாடுகள் எல்லைக்கோட்டுப் பகுதியில், விளக்கொளியின் பெரும் வெளிச்சம் இருந்ததால், நார்வே நாட்டினுள் மாலைச்சாலைகளில் கடும் இருட்டுப்பகுதியில் நடந்துப்பார்த்தும் எங்குமே வடதுருவ ஒளித் தென்படவே இல்லை.

இரு நாட்டு எல்லையில், சற்று நேரம் பேசி மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். காட்சிப்படம் கீழே:

இரு நாட்டு எல்லையில், சற்று நேரம் பேசி மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம்.

ஆனாலும், எங்கள் கைப்பேசி செயலி, வடதுருவ ஒளி தெரிவதற்கான வாய்ப்புகளைக் காட்டிக்கொண்டே இருந்தன.

நள்ளிரவு 1 மணியைக் கடந்துவிட்டதாலும், ஏற்கனவே 2000 கி.மீ பயணித்து வந்த களைப்பு இருந்ததால், கிருனா திரும்புவதென முடிவெடுத்தோம்.

கிருனாவை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்த சூழலில், மின்னொளியையும் கடந்து, வான்வெளியில் நிறங்கள் மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். ஆனால், அடர்த்தி குறைவு அதேவேளையில், சிற்சில வினாடிகளில் இடம் நிறங்களின் காட்சி மாறிக்கொண்டே இருந்ததால், எங்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை.

கைப்பேசியின் அறிவிப்புப்படி, அபிசுக்கோ மற்றும் ரிக்சுகிரான்சன் பகுதியில் அடுத்த நாள் இரவு 10 மணிக்கு மேல் கட்டாயம் வடதுருவ ஒளி தெரியும் என்பதோடு, வாய்ப்பு வீதம் இன்றையா நாளைக்காட்டிலும் மிக அதிகம், வடதுருவ ஒளியின் நிற அடர்த்தி அதிகம் என்பதால், அடுத்த நாள் ரிக்சுகிரான்சன் சென்று தங்குவதெனத் திட்டமிட்டோம்.

கிருனாவில் தூங்கி எழுந்து, நகரைச் சுற்றிவிட்டு, வடதுருவ மான்கள் சரணாலயம் சென்றுக் கண்டுக்களித்துவிட்டு, ரிக்சுகிரான்சன் செல்வதெனவும் திட்டமிட்டுக்கொண்டோம்.!

விடுவதாயில்லை!

ஒரு கைப்பார்த்துவிடுவோம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?