உளவு வேலைகளுக்கு மனிதர்களை களத்தில் இறக்கிக் கொண்டிருந்த உளவு அமைப்புகள், தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை களத்தில் இறக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி உளவுக்குத் தொடர்பான தொழில்நுட்ப சாதனங்களை மேம்படுத்துவது 1970களில் இருந்து தொடங்கிவிட்டது.
மறுபக்கம் பல தசாப்த காலமாகவே மனித இனம், பல்வேறு உயிரினங்களையும் வேவு பார்க்க பயன்படுத்தியதாகவும் பல்வேறு செய்திகள் இருக்கின்றன. அப்படி உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட உயிரினங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
கடந்த 2007ஆம் ஆண்டு, ஈரான் நாட்டை வேவு பார்க்கும் பணிக்கு 14 அணில்கள் மேற்கத்திய உளவு அமைப்பால் அனுப்பப்பட்டு இருக்கலாம் என ஈரான் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த அணில்களோடு பல்வேறு வேவு பார்க்கும் சாதனங்கள், நேவிகேஷன் ட்ராக்கிங் சாதனங்கள், பக்கிங் சாதனங்கள், கேமரா… போன்ற பல பொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த அணில்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஈரான் அரசு.
கடந்த 2008 ஆம் ஆண்டு, ஈரான் நாட்டில் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையை வேவு பார்க்க மேற்கத்திய நாடுகள் இரண்டு புறாக்களை அனுப்பியதாக சந்தேகப்பட்டது ஈரான். அதில் ஒரு புறா, யுரேனியம் செறிவூட்டும் ஆலைக்கு அருகிலேயே சில பல உலோக வளையங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சாதனங்களோடு பிடிக்கப்பட்டது என்றும் சி என் பி சி வலைதளம் குறிப்பிட்டது.
ஈரான் நாடு எங்கு யுரேனிய சுரங்கங்களை வைத்திருக்கிறது, ஈரான் நாடு அணு ஆயுத செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறதா? என்பதை எல்லாம் கண்காணிக்க பல்லிகள் பயன்படுத்தப்பட்டதாக 2018 ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேனியின் ராணுவ ஆலோசகர் ஒருவர் அந்நாட்டு ஊடகங்களிடம் கூறினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு காசா ஸ்ட்ரிப் பகுதியில் ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரிகள், வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்ட டால்பின் ஒன்றை கடற்கரையோரம் பிடித்தனர். அந்த டால்ஃபினை இஸ்ரேல் நாடு தங்களை உளவு பார்க்க அனுப்பி இருக்கலாம் என்றும், அந்த டால்பினில் மனிதர்களை நோக்கி அம்பு எய்யும் அபாயகரமான எந்திரம் பொருத்தப்பட்டிருந்ததாகவும் ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அப்போது செய்திகள் வெளியாயின.
இதுபோல வல்சர் இன கழுகுகள் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக லெபனான், சவுதி அரேபியா, துருக்கி, சூடான்… என பல நாடுகளும் பல்வேறு காலகட்டங்களில் புகார் கூறியுள்ளனர். அவ்வளவு ஏன் கடந்த 2010 ஆம் ஆண்டு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கட்டுப்படுத்தும் சுறாக்களால் செங்கடலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாக்கப்படுவதாக எகிப்து நாட்டு அதிகாரிகள் புகார் கூறியதும் இந்த நினைவு கூறத்தக்கது.
கடந்த கால கட்டங்களில் அமெரிக்காவின் Defense Advanced Research Projects Agency (DARPA) அமைப்பு சுறாக்களை கட்டுப்படுத்துவது, டால்பின் மற்றும் கடல் சிங்கங்களை வைத்து உளவுப் பணிகளை மேற்கொண்டதையும் இங்கு மறப்பதற்கில்லை.
அமெரிக்க ராணுவம் கடல்வாழ் உயிரினங்களை பயிற்றுவித்தது, நீருக்கடியில் இருக்கும் கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதற்கும், கடலில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றவும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக முதலாம் வளைகுடா போர் மற்றும் இரண்டாம் வளைகுடாப் போர் காலகட்டங்களில் கடலுக்கடியில் இருந்த கண்ணி வெடிகளை அகற்ற அதிகம் பயன்படுத்தப்பட்டன.
இதெல்லாம் ஜெய்சங்கர் காலத்து டெக்னிக். 1960களிலேயே அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கடல் வாழ் உயிரினங்களை ராணுவ பணிகளுக்கும் உளவுப் பணிகளுக்கும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 1980களில் அமெரிக்க கடற்படையில் கிட்டத்தட்ட நூறு பயிற்சி பெற்ற டால்பின்கள் பணியில் இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே நாய்கள் உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாம்.உயிரினம்
1970 களிலேயே பூச்சிப் பொட்டுகள் அளவிலான ட்ரோன்களை அமெரிக்காவின் வெளிநாட்டு உலக அமைப்பான சிஐஏ-வின் ஆராய்ச்சி பிரிவு உருவாக்கியதும் இங்கு நினைவு கூரத்தக்கது. இஸ்ரேல், ரஷ்யா, சீனா… போன்ற நாடுகளும் மிகச் சிறிய அளவிலான ஆளில்லா உளவு சாதனங்கள் (வாகனங்கள்) தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு DARPA மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து சுமார் 160 பவுண்ட் எடையுள்ள ஸ்பாட் ரோபாட் (Spot Robot) என்கிற எந்திரத்தை அறிமுகப்படுத்தினர். இந்த நாய் போன்ற எந்திரம் போர்க்களத்தில் தகவல்களை சேகரிக்கவும், பொருட்களை தாங்கிப் பிடித்துக் கொள்ளவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.
ஒரு ராணுவ ஆபரேஷனின் போது, மனித கமாண்டோக்கள் ஒரு கட்டடத்திற்குள் நுழைவதற்கு முன், ஸ்பாட் எந்திரம் கட்டிடத்திற்குள் நுழைந்து எதிரிகள் யாரேனும் ஒளிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்க உதவியது என மரைன் கார்ஸ் படைத்தரப்பிலிருந்து கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு கேமராக்கள் பொருத்தப்பட்ட எந்திர ஹம்மிங் பேர்டு பறவை வடிவிலான ஒரு ரோபோட் உருவாக்கப்பட்டது. வெறும் 6.5 இன்ச் உடல் கொண்ட இந்த எந்திரப் பறவை, உண்மையான பறவைகளைப் போலவே சிறகை அசைத்து பறக்க முடியும். ஆனால் நீண்ட நேரம் இந்த எந்திர பறவையால் பறக்க முடியாது. இது போக, பட்டாம்பூச்சி மற்றும் கொசுக்கள் வடிவிலான உளவு எந்திரங்களும் உருவாக்கப்பட்டன.
இன்று அமெரிக்கா நானோ பாட்ஸ் (Nanobots) என்கிற பெயரில் ராணுவ மற்றும் உளவுப் பணிகளுக்கு பயன்படும் சாதனங்களை நோக்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நானோ பாட்களால் மிகச்சிறிய தூசி அளவில் இருக்கும் சென்சார்களை பயன்படுத்தி இயங்கக் கூடியது என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust