அழிவின் விளிம்பில் இருக்கிறதா ஆஸ்திரேலியா? NewsSense
உலகம்

அழிவின் விளிம்பில் இருக்கிறதா ஆஸ்திரேலியா? - அதிர்ச்சி தகவல்

இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் ஒட்டுமொத்த உலகின் சுற்றுச்சூழலும் சின்னாபின்னமாகிவிடும் என ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் குறித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NewsSense Editorial Team

இன்று ஒட்டுமொத்த உலகமும் காலநிலை மாற்றத்தில் ஒன்றிணைந்து போராட, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அமெரிக்கா எடுக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஏன் ஆதரவளிக்க வேண்டும், சீனா மரபுசாரா எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்பதற்காக இந்தியா ஏன் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனக் குழாயடிச் சண்டை போடும் காலத்தை எல்லாம் மனித இனம் வாழத் தகுதியான ஒரே கோளான பூமி கடந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் ஒட்டுமொத்த உலகின் சுற்றுச்சூழலும் சின்னாபின்னமாகிவிடும் என ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் குறித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை 'தி சர்வே ஆஃப் ஆஸ்திரேலியா எகலாஜிகல் சிஸ்டம்' என்கிற பெயரில் ஒரு சுற்றுச்சூழல் பரிசீலனை அறிக்கை தயார் செய்யப்படும். சமீபத்தைய அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் தற்போது பொதுவெளியில் விவாதத்துக்கு வந்துள்ளன.

அவ்வறிக்கையில் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மிக மோசமான மற்றும் அபாயங்களை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருப்பதாக பிபிசி நியூஸ் சிட்னி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் (Tiffanie Turnbull) தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம், பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிந்திருப்பது, ஆஸ்திரேலியாவைச் சேராத உயிரினங்கள் ஆஸ்திரேலியா கண்டத்தில் இருப்பது, கடும் மாசுபாடுகள், சுரங்கப் பணிகள் போன்றவற்றை இப்பிரச்சனைக்கான காரணமாகக் கூறலாம்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலிலிருந்த பிரச்சனைகள் சரியாகக் கையாளப்படவில்லை, ஆதலால் தற்போது அப்பிரச்சனைகள் இன்னும் தீவிரமடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 2,000 பக்க 'ஸ்டேட் ஆஃப் தி என்விரான்மென்ட் ரிப்போர்ட்' அறிக்கை அதிர்ச்சியூட்டுவதாகவும், சில நேரங்களில் கடும் மன அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கிறது என ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தான்யா ப்லிபெர்செக் (Tanya Plibersek) பிபிசியிடம் கூறியுள்ளார்.

  • 19 வாழ்நிலை சூழல்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறது

  • ஆஸ்திரேலியாவைச் சேராத பல செடி கொடி இனங்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் இருக்கின்றன.

  • மற்ற எந்த கண்டத்தை விடவும் ஆஸ்திரேலியாவில் அதிக உயிரினங்கள் அழிவின் விழிம்பில் இருக்கின்றன.

  • ஒரே ஒரு சுற்றுச்சூழல் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மேலும் மோசமடைந்திருக்கின்றன. பாதிக்கும் மேற்பட்ட பிரிவுகள் மோசமான நிலையில் இருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதே நிலை தொடர்ந்தால், விலை மதிப்பற்றதாகக் கருதும் இடங்கள், நம் ஊர்... நம் நாடு... நம் வீடு... என நாம் கருதும் விலங்குகள், செடி கொடிகள் நம் குழந்தைகளுக்கும், நம் பேரப் பிள்ளைகளுக்கும் இல்லாமல் போகலாம்" என்று கூறியுள்ளார் தான்யா ப்லிபெர்செக்.

கோலா கரடிகள், கேங் கேங் கொகாடோ (gang-gang cockatoo) கிளி போன்ற அரிய உயிரினங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் செடி கொடி இனங்கள் 2016ஆம் ஆண்டு முதல் கூடுதலான அபாயங்களைச் சந்தித்து வருகின்றன. இதில் பல உயிரினங்கள் ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழக் கூடிய வளரக் கூடிய பிரத்யேகதன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முன்னுக்குப் பின் முரணாகப் பல மோசமான காலநிலைப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. கடுமையான வறட்சி, மிகப் பெரிய காட்டுத் தீ, வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய வெள்ளம், கிரேட் பேரியர் ரீஃபில் வெளிரிப் போன 6 பவளப் பாறைப் பகுதிகள் என சுற்றுச்சூழல் சார் பிரச்சனைகளையும் அதன் விளைவுகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

முந்தைய அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்துப் பேசி இருந்தோம். ஆனால் இந்த அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களைப் பதிவு செய்து வருகிறோம் எனக் கூறியுள்ளார் இவ்வறிக்கையின் முதன்மை ஆசிரியரான எம்மா ஜான்ஸ்டன்.

ஆஸ்திரேலியா தன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இவ்வறிக்கை கண்டுபிடித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கான அபாயம் அதிகரிக்கும் அதே நேரத்தில், நீடித்த பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆஸ்திரேலியா மத்திய அரசு செலவழித்து வந்த தொகை குறைந்துள்ளதும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் வீழ்ச்சியின் கதையைக் கூறுகிறது அவ்வறிக்கை. மேலும் கடந்த 10 ஆண்டு காலமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சூழல் சார்ந்த பிரச்சனைகளைக் கண்டும் காணாமல் இருந்தது குறித்தும் இவ்வறிக்கை பேசுவதாக ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் அமைச்சர் தான்யா ப்லிபெர்செக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா மத்திய அரசின் எதிர்க்கட்சியாக இருக்கும் லிபரல் கட்சியினரோ, தாங்கள் ஆட்சியிலிருந்தவரை ஆஸ்திரேலியா சுற்றுச்சூழலைச் சிறப்பாக பார்த்துக் கொண்டதாக அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியா 2005ல் வெளியிட்ட கார்பன் அளவிலிருந்து 43 சதவீதத்தைக் குறைப்பதாக உறுதி பூண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் முந்தைய அரசு கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்காக 26 - 28 சதவீதம் வைத்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?