டிக்டாக் NewsSense
உலகம்

டிக்டாக் : கோடியில் பணம், சிறை - Tiktok ஆல் திணறும் அரபு உலகம் - என்ன நடக்கிறது அங்கே?

அரபுலக நாடுகளில், டிக்டாக் செயலியை உடனடியாக பணக்காரன் ஆவதற்கான வழியாகப் பார்க்கிறார்கள் இளைஞர்கள். அதற்குக் காரணம் வேலையில்லா திண்டாட்டம். அரபுலகத்தில், 2021ஆம் ஆண்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 1.43 கோடி என்கிறது ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.

Gautham

கடினமாக உழைத்து, கை கால் உடைந்து தலையில் நரைமுடி வந்த பிறகு வீடு வாங்கும் காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. 35 வயதுக்குள் சொந்த வீடு, கார், வங்கியில் சில கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு சிலர் சொகுசு வாழ்கையை வாழ்கிறார்கள்.

அவர்களைப் போல நாமும் குறைந்த வயதிலேயே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆசை இன்று பல இளைஞர்களிடம் வந்திருக்கிறது. இதில் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் எனப் பாகுபாடே கிடையாது எனலாம்.

அப்படி அரபுலக நாடுகளில், டிக்டாக் செயலியை உடனடியாக பணக்காரன் ஆவதற்கான வழியாகப் பார்க்கிறார்கள் இளைஞர்கள். அதற்குக் காரணம் வேலையில்லா திண்டாட்டம். அரபுலகத்தில், 2021ஆம் ஆண்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 1.43 கோடி என்கிறது ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள், உயர் தெளிவுத் திறன் கொண்ட முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள், சட்டென அழகாக எடிட் செய்யும் செயலிகள் என ஒருவர் புகழ்பெற ஒரு கிளிக் போதும் என்கிற அளவுக்கு செல்போன்கள் வளர்ந்து இளைஞர்கள் கைகளுக்கு வந்துவிட்டன.

TikTokers

அதோடு, யூடியூபர், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், கன்டன்ட் கிரியேட்டர்... போன்ற சமூக வலைத்தளம் சார்ந்த பணி சொற்களும் காலரா காய்ச்சலை விட வேகமாகப் பரவி வருகிறது. இவையனைத்தும் அரபுலகில் இளைஞர்களைச் சுண்டி இழுத்துக் கொண்டிருக்கிறது குறிப்பாக டிக்டாக்.

டிக்டாக்கின் மொத்த பயனர்களில் 41% பேர் 16 - 24 வயதுடையவர்கள். அதில் கணிசமானோர் அரபுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

30 வயதான மொஹம்மத் கடோர் (Mohammed Ghadour) ஒரு டிக்டாக் ஆளுமை. எகிப்து நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது செளதி அரேபியாவில் வாழ்ந்து வருகிறார். நாள் ஒன்றுக்கு மொஹம்மத் சுமார் 4 மணி நேரத்தை டிக்டாக் செயலில் காணொளிகளைப் பதிவிடச் செலவிடுகிறார். மாதம் 1,000 முதல் 3,000 அமெரிக்க டாலரை டிக்டாக் மூலம் வருமானமாக ஈட்டுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை செளதி அரேபியாவில் ஒரு நல்ல செய்தியாளருக்குக் கூட இத்தனை அதிக சம்பளம் கிடைக்காது. அதை விடப் பல மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் மொஹம்மத் கடோர்.

Mohammed Ghadour

இவர் டிக்டாக் நிறுவனத்தின் கன்டன்ட் கிரியேட்டர் நிதி தொகுப்பிலிருந்து பணத்தை ஈட்டுகிறார். இதில் ஸ்பான்சர் காணொளிகள் செய்து பணம் ஈட்டுவதும் அடக்கம். தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் காணொளிகளைத் தயாரித்தால், அப்பொருளின் மதிப்பில் சுமார் 60 சதவீதத்தை ஈட்டலாம் என்கிறார் மொஹம்மத் கடோர்.

திறமை இருந்தால், போதுமான பின்தொடர்வோர்கள் எண்ணிக்கை மற்றும் மக்கள் ரசிக்கும் காணொளிகள் இருந்தால் மாதம் 10,000 டாலர் வரை கூட சம்பாதிக்கலாம் என்கிறார் இஸ்மாயில் எலாப்ராஸ் (Ismael Ilabras). இவரும் ஒரு டிக்டாக்கர்தான்.

லெபனானைச் சேர்ந்த 50 வயதான இவர், தன் டிக்டாக்கில் பணி வாய்ப்புகள் மற்றும் அரபு நாடுகளில் குடியேறுவது தொடர்பான காணொளிகளைப் பதிவிடுகிறார். அந்த காணொளிகளைப் பார்த்துவிட்டு அவரை நேரில் சந்தித்து ஆலோசனைப் பெற வருவோர்களிடம் கட்டணம் வசூலித்து பணம் ஈட்டுகிறார் இஸ்மாயில். சுருக்கமாக தன் அனுபவத்தை விற்று பொருள் ஈட்டுகிறார்.

இன்னும் சிலர், தங்களது படைப்புகளை உருவாக்க சமூக வலைத்தளங்களிலேயே பணத்தைத் திரட்டிக் கொள்கின்றனர். உதாரணத்துக்கு சிரியாவைச் சேர்ந்த பாடகர் ஃபியா யுனான் தன் பாடலைப் பதிவு செய்ய சமூக வலைத்தளத்தில் சுமார் 25,000 அமெரிக்க டாலரை நன்கொடையாகத் திரட்டினார்.

அத்தனை பணம் இல்லை

ஷிமா என்கிற மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் டிக்டாக்கர் இதற்கு நேர் மாறாகக் கூறுகிறார். டிக்டாக் செயலியிலிருந்து தன்னுடைய நேரலை காணொளிகளுக்கு போதிய வருமானம் வரவில்லை என்று கூறுகிறார். ஆனால் அவருக்கு எவ்வளவு தொகை வருமானமாக வருகிறது எனக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. டிக்டாக்கை விட, யூடியூப் தளத்திலிருந்து அதிக வருமானம் வருவதாக பிபிசியிடம் கூறியுள்ளார்.

ஸ்கூல் ஆஃப் ஓரியன்டல் & ஆஃப்ரிகன் ஸ்டடீஸ் அமைப்பில், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்துவரும் ரமி அசப் என்கிற ஆராய்ச்சியாளர், டிக்டாக்கில் பலரும் அதிக வருமானம் ஈட்டுவதில்லை என்று கூறுகிறார்.

டிக்டாக்கில் வருமானம் ஈட்டுவதாகக் கூறும் எண்ணிக்கை மிகைப்படுத்தலாக இருக்கும். சம்பாதித்ததாகக் கூறப்படும் பணத்தின் அளவு துல்லியமாக இருக்காது. டிக்டாக்கில் 1% பயனர்கள் மட்டுமே அதிக அளவில் பணம் பார்க்கின்றனர். மீதமுள்ள 99% பயனர்களை எவரும் அணுகி விளம்பரம் கொடுப்பதில்லை, நன்கொடை கொடுப்பதில்லை, அவர்களுக்கு அத்தனை பெரிய பின் தொடர்வோர் எண்ணிக்கை இருப்பதில்லை என்கிறார் அசப்.

Mawada al-Adham and Haneen Hossam

சிறைக்குத் தள்ளிய சமூக வலைத்தளம்

அரபுலக நாடுகளில் எல்லோராலும் டிக்டாக்கைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவதில்லை. சிலர் டிக்டாக் செயலியாலேயே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹனீன் ஹொசம் மற்றும் மவாடா அல் அதாம் என இரு பெண்கள், மனிதர்களைக் கடத்திய குற்றத்தின் பேரில், எகிப்து அரசாங்கத்தால் தலா 3 ஆண்டுகள் மற்றும் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருந்த இரு பெண்களையும் எகிப்து அரசு இலக்கு வைத்து வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்திருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சரி மீண்டும் டிக்டாக் வருமான விவகாரத்துக்கு வருவோம்.

பொதுவாக எல்லா சமூக வலைத்தளங்களிலும் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்களின் பதிவு, அவரைப் பின்தொடர்பவர்களுக்குச் சென்று சேரும். அது அதிகப் பணத்தை ஈட்ட வழிவகுக்கும்.

ஆனால் டிக்டாக் செயலியில் கதையே வேறு. டிக்டாக் பதிவுகள் பரவலாகப் பலருக்கும் சென்று சேர வேண்டும் என்பதால், பின்தொடர்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பரவலாகப் பலருக்கும் பதிவுகள் சென்று சேரும்.

ஒரு டிக்டாக் காணொளிப் பதிவை 30 நாட்களுக்குள் ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்தாலே, அவர் பணத்தைப் பெற தகுதியுடைவராகிவிடுவார். 50,000 முதல் 1,50,000 பின்தொடர்பவர்கள் இருந்தாலே, டிக்டாக் செயலி அவர்களை மைக்ரோ இன்ஃப்ளுயன்சர் என வகைப்படுத்திவிடும்.

டிக்டாக் செயலி மூலம் யார் பணம் சம்பாதித்தார்களோ இல்லையோ டிக்டாக் நிறுவனமும், அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் பலமாகப் பணம் சம்பாதித்தது. பைட் டான்ஸின் வருவாய் கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?